mercredi 4 novembre 2015

"பார்வைக்கு பயனுள்ள நூறு தகவல்கள்"

சரவெடி! சற்றே படி!


 



அறிந்ததும் அறியாததும்

1.     குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.


2.      வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.

3.      துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.


4.     எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.

5.      எப்பொழுதாவது உபயோகிக்கும் ஷூக்களில் ரச கற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு ஷூவிலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.

6.       ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக இருக்கும்.

7.      பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும். 
      காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.

8.      வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.

9.   அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

10.   புளித்த பாலில் (மோரில்) வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

11.   இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.

12.   வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் ஃபேன் (Fan) ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே பரவாது.
13.   வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் கெடாமல் இருக்கும்.

14.    வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள். காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.

15.   காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.

16.    பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.
17.    பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

18.   கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

19.   நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.

20.    தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

21.    வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.

22.    சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.

23.    மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து,  பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.



24.   சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

25.   மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.

26.    எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.

27.   தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.

28.   பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.

29.    கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.

30.    சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.

31.   எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

3   வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

32.   கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.

33.   நைலான் துணியை தைக்கும் போது ஊசி லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில் குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.

34.    டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும் வந்துவிடும்.

35.    உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.

36.    வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

37.    முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.

38.   மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.

39.   சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.

40.   ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

41.    அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.

42.   மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

43.    உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.

44.    வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.

45.    அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.

46.    ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.

47.    வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.

48.   பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

49.    சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.

50.    கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.

51.    பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.

52.    வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.

53.    உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.

54.    சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.

55.   வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறி இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.

56.    சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.

57.    செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.

58.    துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.

59.    துணிகளில் ஹேர்-டை பட்டால் அந்த கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.

60.   ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.

61.    தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.

62.    மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா? ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். 
      சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.

63.    அரை வாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.

64.    புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.

65.    ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.

66.   சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.

67.    கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

68.    பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.

69.    முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.



70.    குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா? வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.

71.    சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்

72.   மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்து போகாமல் இருக்க பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப் போட்டு ஒரு டப்பாவில் போட்டு மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.

73.    உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.

74.    தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.

75.    கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

76.    சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.

77.    வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.

78.    துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.

79.    பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.

80.    கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

81.    இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.

82.    உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா? அப்பெட்டியினை சூடாக்கி பச்சை
      வாழை இலையின் மீது தேயுங்கள். பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.

83.    காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.

84.   கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.

85.    கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.

86.    மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.

87.    குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன சைஸ் கொசுவலை துணியில், embroider கைவண்ணம் காட்டி டி.வி. கவராக பயன்படுத்தலாம்.

88.    மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.

89.    ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.

90.   குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் பிரஷ்ஷாக இருக்கும்.




91.    உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.

92.    டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப் பசையை உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.
93.    பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.

94.    முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.

95.   லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது
96 .காலில் பித்த வெடிப்பு இருந்தால் எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் காலை வைத்தால் பித்த வெடிப்பு, கால் வலி நீங்கிவிடும்.
97.தரையில் எண்ணை கொட்டி விட்டால் அரிசி மாவு அல்லது கோதுமை
மாவு ஏதாவது ஒன்றை சிறிது நேரம் தூவி பிறகு திரட்டி எடுத்தால்    எண்ணை கறை நீங்கிவிடும்.

98. குளிர் நாளில் தயிர் சீக்கிரம் உறையாது. தயிறை தோய்த்து ஃப்ரிட்ஜுக்கு பின்புறம் வைத்தால் சீக்கிரம் உரையும்.
.   இட்லி மாவு ரொம்ப பொங்கும் போது ஃப்ரிட்ஜ் எல்லாம் வீணாகி விடும். 
    சிம்பிள் ஐடியா! ஒரு வெற்றிலையை மாவு மீது போட்டு விட்டால்   அதிகமாக பொங்காது.
99.படிக்கிற மாணவர், மாணவிகள், மற்றும் ஆசிரியர் வேல பார்ப்பவர்களுக்கு தொண்டைப் புண் அடிக்கடி ஏற்படும். அதற்கு அவர்கள் ஒரு டம்ளர் வெந்நீரில், ஒருசிட்டிகை மஞ்சள், ஒருஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கி, அரைமணிக்கு ஒருதடவை குடித்தால் தொண்டைப் புண் சரியாகிவிடும்.




 100. செல்போன் தண்ணீரில் நனைந்து விட்டால், phone back cover, sim card, memory card, battery  எல்லாத்தையும் கழற்றி விட்டு, ஒரு air lock cover-ல அரிசியை போட்டு, அதுக்குள் phone-ஐ போட்டால்,
  phone-க்குள் இருக்கும் தண்ணீரை அரிசி உறிஞ்சி விடுமாம். அரிசியால் LCD Screen க்கு பின்னால் இருக்கும் தண்ணீரை கூட உரிஞ்ச முடியும் என்று Google கூறுகிறது. 
  



 பகிர்வு:
 
புதுவை வேலு
 
நன்றி: இணையம்

 


 




1                  

21 commentaires:

  1. Réponses
    1. முதல் கருத்து முதல் வருகை
      முதல் நன்றி!
      நன்றி நண்பர் நாகேந்திர பாரதி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. பயனுள்ள தகவல்கள்....கற்பூரத்தை பூச்சிகளைத்தடுக்க நான் அதிகம் பயன்படுத்துவேன்..மிக்கநன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. அறமொடு பொருளாளும்
      திறமொடு பணியாள்வார்
      வரமாக வந்திங்கு வாழ்த்துக் கருத்து
      தந்தமைக்கு நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அனைத்தும் பயனுள்ளவை. தேர்ந்தெடுத்துத் தந்த விதம் நன்று. 100ஆவது அனைவருக்கும் தற்போது அதிகம் பயன்படும்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் முனைவர் அய்யா,
      நூறினை வாழ்த்திய நூல் போற்றும்
      நுண்ணறிவாளரின் கருத்துக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. பய-னுள்ள தகவல்களை வாரி வழங்கியுள்ளீர்கள் நண்பரே
    நன்றி
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் கரந்தையாரே!
      மணக்கும் கணக்கை
      மாணாக்கார்க்கு தரும்
      இணக்கமிகு நல்லாசிரியரின்
      சிறப்பு கருத்துக்கு நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அருமையான தகவல்கள்.....கொட்டும் அருவியென...

    RépondreSupprimer
    Réponses
    1. கொட்டும் அருவியென.....
      தேன்சொட்டும் வரிகளை தந்து
      பாராட்டியமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அருமையான டிப்ஸ் சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் சகோதரி,
      வருக!!!
      அருமை பாராட்டியமைக்கு
      அளப்பறியா நன்றி!
      தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. இதுமாதிரி வீட்டுக்குறிப்புகள் நானும் முன்பு பகிர்ந்து கொண்டது உண்டு! பகிர்வுக்கு நன்றி! தினமும் கொஞ்சம் கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது!

    RépondreSupprimer
  8. மிளிரும் கருத்தை தந்த நண்பர் தளிரே!
    நன்றி!
    தங்களது யோசனையை ஏற்கிறேன்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  9. என்ன நண்பரே எப்படி ? இப்படியெல்லாம் அனைத்தும் அனைவருக்கும் பயன் பெறும் பொக்கிஷமான விடயங்கள் நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எமக்கு நாந்தான் தவிக்கிறேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. பொக்கிஷமான வாக்கோடு வருகை தந்தமைக்கு நன்றி நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. அப்பப்பா! எத்தனை உபயோகமான தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
  11. உபயோகமான தகவல்கள்.
    உரைத்தமைக்கு உயரிய வணக்கங்கள் அய்யா!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  12. பயனுள்ள குறிப்புகள் - பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. சேமித்துக் கொண்டேன்!

    RépondreSupprimer
    Réponses
    1. நல்ல தகவல்கள் என்று சொல்லி சேமித்த செய்தி
      இன்னும் உழைக்கச் சொல்லி உயர்வான பாடத்தை எனக்குள் விதைத்து
      சென்றமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. ஆஹா ... சத்தான தகவல்களை முத்தாக கோர்த்து பத்தோடு பத்தாக பதமாக தந்துள்ளீர்கள் .. நன்றி!நன்றி!!நன்றி!!!. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer