samedi 30 janvier 2016

"ஆசையே அழிவுக்கு அஸ்திவாரம்" (நீதிக் கதை)



ஆசையே அழிவுக்கு அஸ்திவாரம்



இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது.

கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு
குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடுஎன்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.

போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். 
இனிமேல் இது என் வீடு. 
நான் இதை விட்டுப் போகமாட்டேன்என்று குருவி மறுத்து விட்டது.

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.

சிட்டுக்குருவியோகூட்டில் மகிழ்ச்சியாய் இருந்தபடி கூவிக் கொண்டிருந்தது!






திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்த!
ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து,  
கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. 
கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.

முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து,  
அப்புறம் தலைமட்டும்
கடைசியாக அலகு 
என்று தெரிந்துகொண்டே வந்து
கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. 

தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.

சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே பின்பு, மூச்சடைத்து இறந்து போனது.


அடுத்தவர் இடத்துக்கும் / பொருளுக்கும் ஆசைப்பட்டால் இதுதான் கதி!

நீதி: உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே! தத்துவத்தை போதிக்கும் நீதி 

பகிர்வு
புதுவை வேலு
பட உதவி: இணையம்

jeudi 28 janvier 2016

"இலக்கியக் கருத்தரங்கு - காணொளிக் காட்சி"


                              (இதோ உங்களது உயர்வான பார்வைக்கு ....)

பிரான்சு தமிழ்ச் சங்கம் நடத்திய 'பொங்கல் விழா 2016' -ல்
பங்கேற்று இலக்கிய உரையாற்றி, அந்த இலக்கிய நிகழ்வை பதிவாக
'குழலின்னிசை'யில்  வெளியிட்டு இருந்தேன் அல்லவா?


அந்த நிகழ்வினைத் தொடர்ந்து  "வாராது வந்த மாமழை போல்"

இன்று 28/01/2016,  முகநூல் மற்றும் யு -டியூப் -ல், தொழில் நுட்பத் திறனோடு, அந்த நிகழ்வின் அனைத்து பேச்சாளர்களின் காணொளிக் காட்சியை, மனமுவந்து வெளியிட்டு சிறப்பு செய்துள்ளார் நண்பர் திருகணேஷ் அவர்கள்.
ஒரு நாள் நிகழ்வோடு நின்று போகாமல்,

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவுதற்கு துணை நின்ற
" Gan Prod Plus "
நிறுவனர் திரு.கணேஷ் அவர்களுக்கும்,





"பிரான்சு தமிழ்ச் சங்கம்" நிர்வாகிகள் அனைவருக்கும்,

 குழலின்னிசை நன்றி பாராட்டுகிறது.


புதுவை வேலு


"தானம்"


இனிக்க! இலவசம்!



நாத்திகர் நட்டநடவு பயிர் செழித்து

தோத்திரம் தோகை விரித்து விருந்தாய்!

பாத்திரம் படைத்தின்று இராமனுஜராய்

சரித்திரம் பேசுதய்யா! சாமானியரே !



திருப்பதி ஏழு மலையார் ஊடகத்துக்கு

திருவாரூரார் தரும் இலவசம் இனிக்கட்டும்!


புதுவை வேலு



(DMK Leader & Writer Karunanidhi Gave Ramanujar Serial for Free to Tirupati Channel)





நன்றி:(you tube)
தினமலர்

mardi 26 janvier 2016

"இலக்கியக் கருத்தரங்கில் குழலின்னிசையின் குரல்"


 இலக்கிய கருத்தரங்கம் -  


                                              பொங்கல் விழாநாள் : 17/01/2016  

பிரான்சு தமிழ்ச் சங்கம்

                                                            (புதுவைவேலு)
-------------------------------------------------------------------------------------------------------------------------
உள்ளத்தின் தேரோட்டம்
உணர்ச்சியின் நீரோட்டம்
உலகம் ஏற்று பாராட்டும்
பிரான்சு தமிழ்ச் சங்கம் வாழ்கஎன்று!
------------------------------------------------------------------------------------------------------------------------

எனது இனிய தமிழ் உறவுகளே! 
வணக்கம்! 

உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். 

இலக்கிய கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றும் வாய்ப்பினை தந்தமைக்காக, எனது , (புதுவைவேலு) நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------

"தை " மகளுக்கோர் வரவேற்பு

தை மகள் வருகை சிறப்புற வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் உலகு செழித்திடல் வேண்டும்.//


"
பொங்கலோ/பொங்கல்"  - சத்தம் 
கரும்பின் காதலி,
"
சர்க்கரைப் பொங்கலாய்" இனித்திடல் வேண்டும்!


புவிமக்கள் யாவருக்கும் புதுவசந்தம் வீசட்டும்
அறுவடைத் திருநாளில் ஆனந்தம் பெருகட்டும்
தை மகளே வேண்டியதை தந்து விடு
விதை நெல்லாய் வீரத்தை மண்ணில் விதைத்து விடு!
-----------------------------------------------------------------------------------------------------------------

தை'மகளே தமிழ் உயிர் எழுத்தக்களால் உனக்கோர் உரிய அர்ச்சனை

*
ன்பு உலவ வேண்டும்    //அமைதி நிலவ வேண்டும்

*
னந்தம் பெருக வேண்டும்   //ஆரோக்கியம் வளர வேண்டும்

*
யற்கை இடர் இனி !  இல்லாத நிலை வேண்டும்

*
ன்றவள் துயர் துடைக்க வேண்டும்  //ஈரம் மனதில் கசிய வேண்டும்

*
லகம் வெப்பமயமாதல்  உலகில் தடுக்கப்பட வேண்டும்.

*
ருக்கு உழைத்த உள்ளங்களை ஊனுருகி போற்றிட வேண்டும்.

*
ல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

*
ற்றமிகு கல்வி போற்றப் பட வேண்டும்

*
யமின்றி அனைவரும் வாழ வேண்டும்

*
ற்றுமை ஓங்க வேண்டும்  //ஒவ்வாமை நீங்க வேண்டும் !

*
ர்குடையில் தீவிரவாதம்  ஒடுக்கப் பட வேண்டும்

*வை மொழி போற்றுதல் வேண்டும் !

*
ஆய்த (ஃ) எழுத்தாய் சிறக்க வேண்டும்   // அஃது  அடிக்கரும்பாய் இனிக்க வேண்டும்! 


-
தை மகளே "குழலின்னிசை"யின் குரலாய் இன்று!
பாடினேன் உனக்கோர் தமிழ்ப் பாட்டு, தாவி அணைத்திட வருவாய்! 
அதைக் கேட்டு!
-----------------------------------------------------------------------------------------------------------------
பொங்கல் திருவிழா!-

 ‘வீசிய விதையின் வேரில் முளைத்த...
வியர்வை பூக்களின் இயற்கைத் திருவிழா’!


-----------------------------------------------------------------------------------------------------------------

 ‘
இலக்கிய கருத்தரங்கில் இனி தைப் பொங்கல்

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.  (187)

-ஒளவையார்
___________________________________________________________________________

ஒரு நிலப்பரப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
காடாக இருக்கலாம், மலையாக இருக்கலாம், பள்ளமாக இருக்கலாம், மேடாக இருக்கலாம், ஆனால்? அந்த மண்ணில் செயலாற்றுகின்ற செயல்வீரர்கள் இருந்தால்தான் நாடு வளமாகும்.
மண்ணை வளமாக்கி, மனிதர்களை நலமாக்கும் செயல்வீரர்களே
"உழவர் பெருமக்கள்" என்கிறார் ஔவை.
-----------------------------------------------------------------------------------------------------------------

பாட்டுக்கோர் புலவன் பாரதியோ
இன்னும் ஒருபடி மேலாக!
கைவருத்தி உழைப்பவர் தெய்வம்



உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் - என்கிறார்.

உழவுத் தொழிலையும், உழவர்களையும் வணக்கத்திற்குரியவர்களாக்கி மகிழ்கின்றார் பாரதி!
--------------------------------------------------------------------------------------------------------------------------

தைப் பொங்கல்

தைப் பொங்கல் தைமாதம் முதல் நாளில் தமிழர்களின் தனித்துவமிக்க திருநாளாககொண்டாடப் படும் பெரு நாளாகும். இதனால்தான் இதனை பெரும்பொங்கல் என்று நாம் கூறுகிறோம்.

உழவர்கள் மழையின் உதவியால் ஆடிமாதம் முதல் வேர்வை சிந்தி உழைத்து சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் முதல் நாளே தைப்பொங்கல் ஆகும்.
நன்றி என்னும் நன்னெறியை நல்கும் நன்னாளே தைத் திருநாள்
-----------------------------------------------------------------------------------------------------------------

தை மாதத்தின் சிறப்பு



"
மார்கழியின் உச்சியில் மலர்ந்தது தைப்பொங்கல்"
- என்கிறார் பாவேந்தர்

அவரத் தொடர்ந்து கவியரசரோ!


மார்கழிக்கு பெண்ணாக
மாசிக்கு தாயாக..... பேர்கொழிக்க வந்த
பெட்டகமே தைப் பாவாய்!
-என்கிறார்.

------------------------------------------------------------------------------------------------------------

 
சங்க இலக்கியப் பாடல்களில்......
 தை மாதம் பற்றிய குறிப்பீடுகள் சங்கமித்து இருக்கின்றன.

**** தைத் திங்கள் தண்கயம் படியும் - நற்றிணை (80)


*****
தைத் திங்கள் தண்ணிய தரினும் - குறுந்தொகை 196

*****
தைத் திங்கள் தண்கயம் போல -ஐங்குறுநூறு (84)


******
தைத் திங்கள் தண்கயம் போல் - புறநானூறு 70

*****
தையில் நீராடி தவம் தலைப் படுவாயே! -கலித்தொகை 59

(150
பாடல்கள் கலிப்பாவினால் ஆனது 
பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை)

-----------------------------------------------------------------------------------------------------------------

வான்புகழ் வள்ளுவரும் உழவு பற்றி குறிப்பிடுகிறார்.



உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர் (1033) 


இதையே கவி சக்ரவர்த்தி கம்பர்

தான் படைத்தை "ஏரெழுபது" 19வது பாடலில்..


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வாரென்றே யித் தொல்லுலகில்
எழுதுண்ட மறையன்றோ! இவருடனே இயலுமிதே
பழுதுண்ட கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தார்க்கே! . 
-என்கிறார்.

இதைப் பற்றிய செய்தி ஒன்று!

முதிராத கவிஞர்கள் அசலை அப்படியே நகல் எடுப்பர்!
ஆனால்
முதிர்ந்த கவிஞர்களோ பக்குவமாய் எடுத்து கையாள்வர் என்று,
டி.எஸ்.எலியட் என்பவர் தனது வேஸ்ட் லாண்ட் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------------

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

-------------------------------------------------------------------------------------------------------
"
ஆண்டாளின் வாரணமாயிரம் பாடலிருந்து இடம் பெற்ற இந்த வரிகளை...

கண்ணதாசன் "கந்தன் கருணை" படத்தில் இடம் பெற்ற 
"மனம் படைத்தேன் உன்னை" பாடலில் எப்படி
பயன் படுத்தி உள்ளார் என்பதை பாருங்கள் .
------------------------------------------------------------------------------------------------------------
 ‘
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு ‘ - பாடலில்

மத்தள மேளம் முரசொலிக்க
வரி சங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க

கைத்தலம் நான் பற்ற கனவு கண்டேன்

அந்த கனவுகள் நனவாக உறவு தந்தாய்

-----------------------------------------------------------------------------------------------------------------
பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
தோழி , தூக்கத்தில் கனவு என்றுதான் உரைத்தாள்
--------------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் வைரமுத்து  இதைப் பற்றி கருத்து கூறும்போது,

ஒரு பாடலை அடி எடுக்கலாம் தவறில்லை

மாறாக படி எடுக்கக் கூடாது என்பார்.
-----------------------------------------------------------------------------------------------------------------
வள்ளுவரின் பார்வையில்  உழவு

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை -(1031)

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் அது ஏர்த்தொழிலின் பின் நிற்கிறது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும்  உழவுத் தொழிலே சிறந்தது என்கிறார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுண்டு பின் செல்பவர் - (1033)

உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர். மற்றவர் எல்லோரும்  பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே! என்கிறார்.
-----------------------------------------------------------------------------------------------------------------
திருக்கை வழக்கம் என்னும் நூலில்,
 கம்பர் வேளான் பெருமக்களின் கொடை குணத்தை எப்படி சிறப்பித்துக் கூறுகிறார் தெரியுமா?


விதை நெல்லை சோறாக்கி வழங்கிய கை

அம்பொன்
வளைவாரி வையகமும் வானகமும் போற்ற
முளைவாரி வந்த முழுக் கை (3) 
-என்கிறார்.


ஏரோட்டம் நின்றால் தேரோட்டம் நிற்கும்

கடல் சூழ்ந்த
பார்பூட்டு மன்னர் பரிகர பூட்டக் கதிரோன்
தேர் பூட்ட ஏர் பூட்டும் செம்பொற்  கை (20).


யானைப் பரிசில் தரும் கை

வென்றி தரும்
ஓ ரானை, நூறாயிரக் கலம்நெல் ஓர் கவிக்கு
சீராக நல்கும் தியாகக் கை (50)

பஞ்சத்திலும் வழங்கிய பங்கயக் கை

பார் அறிய
சங்கை இட்டுத் தள்ளாமல் தன் ஃசோற்றை வந்தவர்க்குபங்கை இட்டு இரட்சித்த பங்கயக் கை.(36)

பொன் வழங்கும் பொற்கை

நீள் உலகில்
ஆதுலர்க்குச் செம்பொன் அளிக்கும் கை, ஆகமங்கள்
வேத புராணங்கள் விரிக்கும் கை (27)
------------------------------------------------------------------------------------------------------------------------


"பொங்கலோ பொங்கல் சங்கத் தமிழாக ஒளிருதடி!"

புத்தரிசி பூக்காளாக  // புதுப் பானையிலே பூக்குதடி


பூத்ததை பார்க்கையிலே  //புது வெல்லமாய் இனிக்குதடி


சீலமிகு செம்மொழியாய்  //கோலமிட்டு மேலெழுந்து கொதிக்குதடி

ஒலிமிகு கடலலையோ  //பொங்கல் வாழ்த்து இசைக்குதடி 

கரும்புவில் பாடத்தை

எறும்பு வந்து படிக்குதடி

வாழ்த்துச் சொல்ல...

தாழ்ந்துவானம் தரையிறங்கி நடக்குதடி !

பொங்கலோ பொங்கல்

சங்கத் தமிழாக ஒளிருதடி!



-----------------------------------------------------------------------------------------------------------------
மாட்டுப் பொங்கல்

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு.
 ‘பொங்கலோ பொங்கல் !   மாட்டு பொங்கல்    
பட்டி பெருக,   பால் பானை பொங்க ! 
நோவும் பிணியும் தெருவோடு போக’ 
என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
-----------------------------------------------------------------------------------------------------------------
ஜல்லிக்கட்டு


நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவை பொங்கலும், ஜல்லிக்கட்டும் என்றால் அது மிகையாகாது.

உழவுக்கும், தொழிலுக்கும் பயன் பட்ட மாடுகள், வீரத்தை வெளிப்படுத்த பயிற்சியளிக்கபட்டு, அதோடு வீரவிளையாட்டு விளையாடுவதுதான் ஜல்லிக்கட்டு.. 
மனிதனுக்கு எப்படி விளையாட்டு வல்லமையும், உடல் நலத்தையும் கொடுக்கிறதோ, அப்படியே ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு வல்லமையும், உடல் நலத்தையும் கொடுக்கிறது.

நமது இலக்கியங்கள் களிறினும் வலிமை பொருந்திய காளைகளை காட்டுகிறது அத்தகைய காளைகளை அடக்க முற்ப்படும் வீரர்களின்  வீரத்தை பறை சாற்றுகிறது.

இதுபற்றிய நிகழ்வுகளை சங்க இலக்கிய நூல்கள் பாடல்களாக பதிவு செய்து உள்ளன.

ஏறு தழுவதல், மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு என்று பல பெயர்கள் உண்டு.இதன் பழைய பெயர் பழந்தொல்குடிகள் என்பதே.

மஞ்சு விரட்டுஎனப்படும் மாடு பிடிக்கும் விழா தமிழ்நாட்டில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகிறது.  

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் முல்லைக்கலி எனும் பகுதியில் ஆயர்கள் எப்படி காளைகளை அடக்கினர் என்பதையும் அந்த வீர இளைஞர்களைத் திருமணம் புரியஆயர்குல அழகிகள் எப்படி அணி வகுத்து நின்றனர் என்பதையும் மிகவும் அற்புதமாக விளக்கியுள்ளான் கவிஞன்.


 “
எரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண்
உருவமாலை போல குருதிக்கோட்டொடு குடல் வலந்தன
கோட்டொடு சுற்றிக்குடர் வலந்த எற்றின் முன் ஆடி நின்று,
அக்குடர் வாங்குவான் பீடு காண்

செந்நூற் கழி ஒருவன் கைப்பற்ற, அந்நூலை
முந்நூலாகக்கொள்வானும் போன


--
முல்லைக்கலி (கலித்தொகை)
(
சிவபெருமான் சூடிய மாலை போல சிவப்பு நிறக் குடல்கள் அந்தக் காளையின் கொம்புகளில் சுற்றிக்கிடக்கின்றன.  அப்பேற்பட்ட காளையின் முன்பு நின்று ஆடி கொம்புகளைப் பிடித்து அந்தக் குடல்களை முந்நூலாக அணியும் சிறப்பைக் காண்பாயாக!)
சிறப்பு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை' மறுமையிலும்
புல்லாளே, ஆயமகள்"


 - (கலித்தொகை)

உலகில் தமிழர்களைத்தவிர இந்த வீர விளையாட்டை இன்றும் நடத்துபவர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்.  காளை மாட்டுடன் சண்டையிடுதல் (Bull Fighting) ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டாகக் கருதப்படுகிறது.

"
சல்லிக்காசுக்கு பிரயோசனம் இல்லாதவன் " 
-என்பார்கள்.
அதாவது சல்லி என்பது ஜல்லிக்கட்டு விழாவின்போது காளைகளின் கழுத்தில் கட்டப்படும் வளையத்தை குறிக்கும். 
பல ஆண்டுகளூக்கு முன்பு புழக்கத்தில் இருந்த சல்லிக் காசு என்னும் நாணயத்தை ஜல்லிக்கட்டின்போது  துணியில் முடிந்து மாட்டின் கொம்பில் கட்டும் வழக்கம் இருந்தது. மாட்டை அடக்கும் வீரர்களுக்கு அந்த பண முடிப்பு சொந்தமாகும். 
இந்த பழக்கம் பிறகாலத்தில் சல்லிக்கட்டு என்று மாறி, தற்போது ஜல்லிக்கட்டு என்று ஆனது என்றும் கூறப்படுகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------
காணும் பொங்கல்

மனித மனங்களின் மாண்பினை சொல்லும் நன்னாள். 
சுயநலத்தின் சுயம்பு சூரியனால சூரியனால் சுட்டெரிக்கப்பட்டு,
அன்பின் ஆசி வேண்டி பெற்றோர்களை, ஆன்றோர்களை, சான்றோர்களை, நன்றிக்குரியவர்களை கண்டு வணங்கி வாழ்த்தினை பெறுகின்ற பெருமைகுரிய நாள் காணும் பொங்கல்.
-----------------------------------------------------------------------------------------------------------------

முடிவுரையாக...,

வாழியாதன்! வாழியவினி!  
நெற்பல பொலிக! பொன் பெரிது சிறக்க

பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!
பகைவர் புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக!

வேந்து பகைதணிக! யாண்டு பல நந்துக!
அறம்நனி சிறக்க! அல்லவை கெடுக!

நன்று நனிசிறக்க! தீதில்லாகுக!   
அரசுமுறை செய்க! களவில்லாகுக!

மாரிவாய்க்க! வளம் நனி சிறக்க!

-- (ஐங்குறுநூறு )
என்று சொல்லி
அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியினை சொல்லி,
 வணங்கி விடைபெறுகின்றேன்.
நன்றி!
வணக்கம். 

- புதுவை வேலு


----------------------------------------------------------------------------------------------------------------------------------------