lundi 24 avril 2017

இயலிசைக் கருத்து ஆய்வரங்கம் " உலகம்": புதுவை வேலு

பிரஞ்சு தமிழ் கண்ணதாசன் கழகம்
பதினான்காம் ஆண்டு விழா - 2017




"கவியரசு கண்ணதாசன் விழா"



வணக்கம்,
அவையோர் அனைவருக்கும் "ஹே-விளம்பி" தமிழ் புத்தாண்டு"
இனிய நல் வாழ்த்துகள்,




-------------------------------------------------------------------------------

"கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்!
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுளையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!"



-பாவேந்தர் பாரதிதாசனாரின் தமிழ்ப் பற்றுமிக்க பாவரிகளை, பாவலர்களும், இளம் பாவலர்களும், மிகுந்த இந்த அவையில் முதலில்
பதிவு செய்து!  தொடர்கின்றேன்! தமிழ்மொழி வாழ்த்தோடு!!!

தமிழ் அன்னையே!
நின்னை யான் வணங்குவதும்  
நீ! என்னை வாழ்த்துவதும்,
அன்னை மகற்கிடையே! 
அழகில்லை என்பதனால்,

உன்னை வளர்த்துவரும்!
ஒண்புகழ்சேர் புலவர்-
தன்னை வணங்குகிறேன் 
தமிழ்ப் புலவர் வாழியவே!

-கவியரசர் கண்ணதாசன் அவர்களின்  தேனினும் இனிய தமிழ் வாழ்த்துக் கவிதையைச் சொல்லி......
இயலிசை ஆய்வரங்கத்தில்,

தமிழ் இலக்கியத்தில்  பக்தியின் பார்வையில்  "உலகம்"
 
என்னும் எனது தலைப்புக்குள்....

  'புதுவை வேலு' நுழைகின்றேன்!


உலகப் பூங்கதவே! தாள் திறவாய்!
---------------------------------------------------------------------------------------------------------------
உலகம் - இது!  தமிழ் இலக்கிய  நூல்கள் நிறைந்த  அறிவு கலைச் சுரங்கம்!
---------------------------------------------------------------------------------------------------------------------
உலகம் என்னும் சொல்லை முதலடியாய்க் கொண்டு பாடலைத் தொடங்குவது என்பது,
சங்க இலக்கியங்களின் மங்கள மரபு! / மரபியல் மாண்பு.
அதனால்தான்,

"நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்"

- என்கிறார் 'ஒல்காப் புகழ் தொல்காப்பியர்'



இந்த உலகமானது,

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஆகிய ஐம்பூதங்களும்
கலந்து இயற்கையாகவே உருவானது என்கிறது ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியம்.

உலகத்தை  ஆட்டுவித்த ஐம்பூதங்களையும், தனது கவிதையால்
கட்டிப் போட்டவர் 'கவியரசர் கண்ணதாசன்' அவர்கள்!

கவியரசர் தனக்குத் தானே எழுதிய இரங்கற்பாவில்,

கூற்றவன் தன் அழப்பிதழைக் கொடுத்தவுடன்,
படுத்தவனைக் குவித்துப் போட்டு,
ஏற்றிய செந்"தீ"யே!- நீ!
எரிவதிலும் அவன் பாட்டை எழுந்து பாடு - என்பார்!

எரிகின்ற தீயை எழுப்பி! எழும்பி நின்று, தனது இரங்கற்பாவிற்கு,
மரியாதை செலுத்த கற்றுத் தந்தவர் கவியரசர் என்பதை  இந்த வேளையிலே நான் நினைவு கூறுகின்றேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------



பெரிய புராணம் போற்றும் பேர் உலகம்:-

அறுபத்து மூன்று  நாயன்மார்களின் அருளை அள்ளித் தரும்
அமுத நூல்  'பெரிய புராணம்'.
இந்த நூலின் முதலடியின் முதல் வார்த்தையோ "உலகம்" என்னும் ஒப்புயர்வுமிக்க சொல்லோடுதான் தொடங்குகின்றது.

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்!

- என்கிறார் திருத் தொண்டர் புராணத்து திரு நாயகர் சேக்கிழார் அவர்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
காலமெனும் காற்றிலும்,
காற்று மழை ஊழியிலும்,
சாகாது கம்பன் அவன் பாட்டு,
அது தலைமுறைக்கு
அவன் எழுதிவைத்த சீட்டு!

- என்பார் காவியத் தாயின் இளைய மகன் கண்ணதாசன்.

-கவியால் புவியை ஆண்ட கம்பரும் "உலகம்" என்னும் சொல்லை முதலடியாய்க் கொண்டுதான் கம்பரசம் ததும்பும் கம்பராமாயணத்தை தொடங்குகின்றார்!

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
 நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
 அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
 அன்னவர்க்கே சரண் நாங்களே"

இறைவனை பொதுவில் வைத்து, சமய பொதுவுடைமை கருத்தை தனது பாயிரத்தில் வாரணம் ஆயிரமாய் வலம் வரச் செய்தவர் அல்லவா?

"முத்தும் முத்தமிழும் தந்து
முந்துமோ வான் உலகம்"

-என்று சொன்ன கவிச் சக்கரவர்த்தி கம்பர்!

---------------------------------------------------------------------------------------------------------------------------
திரைப்படம் என்னும் ஊடகம் ஏறி திரும்பிய திசைதோறும்
கவிதைப் புறாக்களை.....
பறக்க விட்ட கவியரசர்,

'தந்தைக்கோர் மந்திரத்தை சாற்றிப் பொருள் விரித்து
முந்து தமிழில் முருகு என்று பேர் படைத்து
அந்த்தத்தில் ஆதி, ஆதியில் அந்தமென
வந்த வடிவேலை வணங்குவதே என் வேலை!'
- என்பார்! கவியரசர்,

 அந்த வடிவேலனாம் முருகனைப் பற்றி முதன்முதலில் எழுதப் பட்ட
"திருமுருகாற்றுப் படை"யின் ,
முதல் பாடலும்   "உலகம்"   என்னும் சொல்லோடுதான் 
தொடங்கி உயர்வடைகின்றது.


-------------------------------------------------------------------------------------------------------------
மேலும்,

 நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத்தொகை

- என்று எட்டுத் தொகை நூல்களைப் பற்றி ஒரு வெண்பா கூறும்.

இந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான "குறுந்தொகை" பாடலில்....

"தாமரை புரையும் காமர் சேவடி                
பவழத்தன்ன மேனி திகழொளிக்               
குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்       
நெஞ்சு பகலெறிந்த வஞ்சுடன் நெடுவேல்
சேவல் கொடியோன் காப்ப                      
ஏமம் வைக லெய்தியது இந்த உலகே! "
  

பாதுகாப்பு கவசமாக, கந்த சஷ்டி நாயகன் முருகபெருமான் அருள் பாலிக்கின்றான் இந்த உலகில் என்று ,
'உலகம்' என்னும் சொல்லை சொல்ல சொல்ல இனிக்க வைக்கின்றது இந்த குறுந்தொகை பாடல்!
-----------------------------------------------------------------------------------------------------------
உலகம் என்னும் சொல்லானது,
வையம், அகிலம்,  அவனி,   தரணி, 
புவி,  புவனம்,   பூமி,  பூவுலகு,
பார்,  ஞாலம், என்று.....
பல்வேறு பெயர்களாய் இலக்கியங்களில் சங்கமிக்கின்றன!!!

"வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடரொளியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகலே என்று"

-உலகத்தை அகல்விளக்கு ஆக்கி, ஆழ்கடலை நெய் ஆக்கி, காக்கும் கதிரவனை நெருப்பாக்கி,
சக்கரம் ஏந்தியவர் திருவடிக்கு தமிழ் சொல்மாலை சூட்டினேன், மனித குலத்தின் இடர் நீங்காதா?

-என்பார் 12 ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார்.

இந்த பாடலில் வையம் (உலகம்) என்னும் சொல் மையம் கொண்டிருக்கும் அழகியலை ஆழ்வார் அருமையாக பாசுரத்தில் கையாண்டு இருப்பார்.
-----------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் வைரமுத்து அவர்கள் கவியரசரைப் பற்றிக் கூறும் போது,



என்னை பொறுத்த வரையில்,
எனது திரை இசைப் பாடல்களின்
வீரிய விளைச்சலுக்கு,
தமிழ் மண் பொறுப்பு!
ஆனால்?
எனது கவிதை விதை நெல்லுக்கு
"கண்ணதாசனே பொறுப்பு!" - என்பார்.

இதே போன்று,

வேதங்கள் அனைத்துக்கும் விதை நெல்லாக,
வித்தாக, தமிழ் சொத்தாக
கோதைத் தமிழ் வையத்தில் திகழ்கின்றது என்பதை....

'பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு'
.
ஆண்டாளின் அருந்தமிழ் சிறப்பை "வையம்" வாய் திறந்து பாடுகிறது
இந்த பாசுரம்!


இதனால்தான் கவியரசர் கண்ணதாசன்,

'கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்' என்றாரோ?


----------------------------------------------------------------------------------------------------------------
இறுதியாக,
அழகிய கலைகளின் சுரங்கமான  இலக்கிய உலகத்தை, ரசிப்போம் புதியதோர் உலகம் செய்வோம் என்று சொல்லி......

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்

"உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா"

இதை உணர்ந்து கொண்டால்
துன்பமெல்லாம் விலகும் கண்ணா!

-நித்திரையிலும் நினைவைவிட்டு நீங்காது!  கவியரசரின்  இந்த நிதர்சன வரிகள்


'தேனை மறந்திருக்கும் வண்டும்-ஓளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும் !
வானை மறந்திருக்கும் பயிரும் -இந்த
வையம் முழுதுமில்லை தோழி! '

- என்பார் முண்டாசுக் கவி பாரதி
(கண்ணன் பாட்டு: கண்ணன் என் காதலன் - )




தேனை மறந்து வண்டாலும்,  சூரியனின் ஒளியை மறந்து பூவாலும்,
வான் மழையை மறந்து பயிராலும்,  இவ்வுலகில் வாழ முடியாது
என்பார் பாரதியார்.
அதுபோல்,

காட்டுக்கு ராஜா சிங்கம்
பாட்டுக்கு ராஜா கவியரசர் - காமராஜர்  பாராட்டிய

கவிஞர் கண்ணதாசனின் பாடல்களை  மறந்து
தமிழ் மக்களால் வாழ முடியாது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
அழகிய கலைகளின் சுரங்கமான  உலகத்தை, ரசிப்போம்
புதியதோர் இலக்கிய உலகம் செய்வோம்!
இறுதியாக,

கவியரசர் கண்ணதாசன் பற்றி எனது குழலின்னிசை
வலைதளத்தில் நான் (புதுவை வேலு) எழுதிய  ஓர் பாமாலை

'கவியரசருக்கு ஓர் பாமாலை'

"பைந்தமிழ் பருகிய கண்ணனின் தாசர்
பசுந்தேனினும் இனிய பாடலை படைத்தார்
இதந்தரும் இதயத் தினிய கவிஞர்
இறவாப் புகழொடு இனிது வாழ்வார்!

பொன்மொழி சிந்தும் வெண்மதிக் கவிஞர்
கண்மணி நூல் சேரமான் காதலி தந்தார்
அர்த்தமுள்ள இந்துமதம் நாயகரவரை
ஆராதிப்போம் அன்னைத் தமிழால்!

ஏசுகாவியம் எழுதிய வாசுவின் தாசா
மாசில்லா மாணிக்க மதுசூதணன் நேசா
தத்துப் பிள்ளையாய் வளர்ந்த நல்முத்தையா
தத்துவப் பாடல்களின் வளர் சொத்து ஐயா!

முத்தமிழ் இவர் கவியின் மூலதாரம்
முத்தான கவிக்கு இவரே ஆதாரம்!
நித்ய கவியே நின்புகழ் வாழ்க!
நீலவானம் தொட்டு நீடுழி வாழ்க!




உலகை படைத்த இறைவனுக்கும், 
உலகம் பற்றிப் பேச வாய்ப்பளித்த,
பிரஞ்சு தமிழ்க் கண்ணதாசன் கழகத்துக்கும்
நன்றி பாராட்டி விடை பெறுகின்றேன்! 
நன்றி வணக்கம்!
-புதுவை வேலு