jeudi 14 septembre 2017

சாமானியனின் கிறுக்கல்கள் !: வாழ்த்துகிறோம் !

சாமானியனின் கிறுக்கல்கள் !: வாழ்த்துகிறோம் !: இ ன்று திருமண வெள்ளிவிழா காணும் புதுவை வேலு ராஜலெட்சுமி தம்பதியரை வலைநட்புகள், பிரான்ஸ் அக்லி தமிழ் சங்கம், குடும்பதினர்கள் மற்றும் நண்...

mercredi 5 juillet 2017

ஐந்துவிரல்களில் ஐங்குறுநூறுவெட்கத்தின் வெளிச்ச மிங்கு
வெள்ளி நிலவில் மிளிருதடி
சொல்லின் எண்ண மிங்கு
தேன் கிண்ணத்தை சுவைக்குதடி


அல்லித்தண்டு ஐந்துவிரல்களில்
ஐங்குறுநூறு படிக்குதடி!
மூன்றடி சிற்றெல்லை ஆறடி பேரெல்லைக்குள்
அடங்கி அருங்கவி வடிக்குதடி!


முல்லைத் திணை முகில்வண்ணன்
முன்னேவந்து முழங்கை பற்றுதடி!
எல்லையோடு ஏற்றக் காதல்
முல்லைப் பூவாய் மணக்குமடி


இராதைக்கேற்ற கண்ணன் கானம்
இரவிலும் இனிமை சேர்க்குமடி!
இமை மூடாத இளம் விழிகள்
ஊமை விழியாய் உன்னைக் காணுதடி.


-புதுவை வேலு

dimanche 2 juillet 2017

நன்றியுடன் நாமாவோம்நாலடியில் நற்றமிழில் சொல்லெடுத்து நற்கவிதை :-உள்ளம் சிலிர்க்குது
வெல்லமாய் இனிக்குது
'ஒற்றுமை' ஓர் குடையில்
...
ஓங்கி ஒதுங்கி ஒலிக்குது.
மழை நடத்தும்
சமத்துவப் பாடம்
நனையாது கேட்கிறார்
நன்றி யாளராடு!இயற்கை மழை
கொடை தந்தது!
இதயங்கள் ஓர் குடையில்
இணைந்து நின்றது.நன்றி!
நாயின் நற்குணம்
வென்றிடும் !
இளஞ்சிறார் நல்மனம்.உயிர் விதைக்கும்
சமத்துவப் பயிர்கள்
காக்கின்றது
கறுப்புக் குடை!ஆனந்த மழை பொழியுது
அன்பு மழை மொழியுது
ஆராதணை அழகு மிளிருது
ஆதரவுக் கரம் துளிருது!குணம் குடையானது
மனம் கோபுரமானது
இனம் வேறுஆயினும்
அன்பு பொதுவானது.தாலாட்டும் மழையும்
கோலாட்டம் போடுதோ?
வாலாட்டும் நாயும் 
பூந்தளிரோடு நட்புக்கூடுதோ?சூழ்ச்சியற்ற சுடர் மழை
சூழ வலம் வந்து -குடையுடன்
தாழாத தத்துவப் பாடம்
தகைமையோடு நடத்துதப்பா!நன்றியுடன் நாமாவோம்
நட்புக்குள் பூவாவோம்
நல்லோருடன் நாமாவோம்
ஐப்பூதம் நாயகன் அருளோடு!!!
  


-புதுவை வேலு
samedi 17 juin 2017

இப்படியும் சிலர்தலைப்பு: இப்படியும் சிலர்


வானம் ஏறி வைகுண்டம் போவதற்கு
வழி  யறிவேன் என்பார் சிலர்


ஊழல் ஊஞ்சல் உற்சவத்திற்கு
உபயதாரராக உள்ளார்கள் சிலர்


ஒவ்வாத காதல் செய்து
ஓர் கொலையும் செய்வார் சிலர்துப்புரவு செய்ய வேண்டின்
துப்பிய பின்பு துடைப்பார் சிலர்


இருண்ட வானத்திற்கு
வெள்ளையடித்தேன் யென்பார் சிலர்


பன்னாட்டு வங்கியில்
பண(ம்) நாட்டாமை யானர்கள் சிலர்அரசியலை ஆயுத எழுத்தாக்கி...
ஆஸ்திக்கு  ஆயுள் விருத்தி  செய்வார் சிலர்


ஆதரவற்றோர் ஆசிரமத்தில்
அன்னை தந்தையரை விடுவார் சிலர்


சட்டம் என்னும் இருட்டறையில்
வெளிச்சத்தோடு வாழ்வார் சிலர்


தமிழ்ப் பட்டறையில் தமிழே!
அமுதை பொழியும் நிலவென்பார் சிலர்


குருதி தந்து - மனிதர்
இறுதியாத்திரையை தடுப்பார் சிலர்


மது அரக்கனை அழிப்பதற்கு
மல்லுக்கட்டி நிற்பார் மங்கையர் சிலர்


அதிகாரம் யாருக்கு என்று!
அக்கப் போர் செய்வோர் சிலர்


ஒரே தேசம் ஒரே வரி
ஒப்புதலை தருவார் சிலர்


உழவர் உலகம் உவகையில்
உழல வேண்டுமென்பார் சிலர்


தமிழ்த் தேர் வடம் பிடித்திழுத்து
தரணியில் வலம்வருவோம் யென்பார் சிலர்

-புதுவை வேலு

vendredi 16 juin 2017

முகநூல் தந்த முகவரி

சின்னத் திரையில்  ஒளி பரப்பாகி வரும்
சீரியல்கள் குறித்த எனது கருத்துக்கு
முகநூல் நண்பர்  திரு
சூசைநாதன் நெல்ஃபோன் 
Soucenadin Nalpon 
தந்த மரியாதை!
 

lundi 12 juin 2017

உளவுத் துறைமுகத்தில் முகம்
பார்க்கும் வேளை
யாரங்கே?
வெளிச்சத்தால்
வேவு பார்ப்பது -
சூரியன்


-புதுவை வேலு


dimanche 11 juin 2017

"நெஞ்சம் நெகிழ்கையிலே"புத்தியுள்ள வாசகனின்
நித்திரைக் கட்டிலோ?
மெத்த படிப்பதற்கோ
மெத்தையான பஞ்சறிவோ?


நெஞ்சம் நெகிழ்கையிலே
நெஞ்சடைப்பு வருவதில்லை!
கஞ்சம் மனதில் வேண்டாம்
கல்வி பகிர்ந்து வாழுங்களேன்!


-புதுவை வேலு

samedi 10 juin 2017

"ஏழிசை எழிலோடு வாழியவே!"

'இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்'

மூத்த வலைப் பதிவாளர்
இசை வித்தகர்

சூரிய நாராயண சிவா  (சுப்புத் தாத்தா) அவர்களுக்கு,
குழலின்னிசையின்   

பிறந்த  நாள் வாழ்த்து
தஞ்சை தந்த தாத்தா-எங்கள்
நெஞ்சை யள்ளும் சுப்புத் தாத்தா!
பஞ்சு மிட்டாய் குரலிசையில் பாடும்!
பாடும்நிலா! பல்லாண்டு வாழியவே!

தேடி வந்து தேனெடுத்து -தேசத்தில்
செந்தமிழ் கானமிசை இசைப்பவரே!
அரங்க மாநகர் அருங்கல்வி ஐயாவே!
ஏழிசை எழிலோடு  வாழியவே!

- புதுவை வேலு


jeudi 8 juin 2017

இன்பத்தின் இனிய வாசல்!


இன்பத்தின் இனிய வாசல்! திறந்திடு மகளே!


தாயும் சேயும் பலா வடிவில்
வாழ்வின்  தத்துவத்தை
முட்களால்....

முகாரி பாடுகின்றனரோ?

அன்னை அணைப்பை  
ஆராய்ந்தால் தெரியும்?
உள்ளிருக்கும் சுளைகள்
இனிமை  யென்று!


இன்பத்திலும் துன்பத்திலும்
பொறுத்திரு மகளே....
இன்பத்தின் இனிய வாசல்!
திறந்திடும் மகளே!


-புதுவைவேலு

mardi 6 juin 2017

"ஒரே தேசம் ஒரே வரி"அந்தி மழை பெய்தாலும்
மந்திமகன் ஓதுங்க மாட்டேன்
பந்திபோட்டு காய் கறியை
முந்தி விக்காமல் போகமாட்டேன்!

தொந்தி பார்த்து தோழர்களே!
தொந்தரவு செய்யாதீர்!
காலணியை வீசி யெந்தன்
கவனத்தை சிதைக்காதீர்!

உழவர் சந்தையிலே!
உழவனுக்கு வேலையில்லை
உழுத நெல்லுக்கு விலை வைக்க
வாழும் நாட்டில் உரிமை இல்லை

பச்சை காய்கறிகள்..
பாட்டி வைத்திய நெறிமுறைகள்!
பக்குவாய் சொல்லுத் தாரேன்
பக்கத்தில் வந்து கேளுங்களேன்!


ஒரே தேசம்! ஒரே வரி!
என்று சொல்லி!
நன்றே பாடு ராமா!
வென்று ஆடு ராமா!
என்று கூறுங்களேன்.

-புதுவை வேலு!
mercredi 31 mai 2017

அமுத மொழியின் ஆனந்த ராகம்
அமுத மொழி பேசி அழைக்கின்றான்
ஆனந்த குழலெடுத்து ராக- ராதாவை!


தடாகம் தகதகக்க தவிக்கின்றாளோ?
தாமரையாய் தளிர்மேனி ராதை!


ராதையின் நெஞ்சமே! - என்றும்
கண்ணனுக்கு சொந்தமே!


'குழலின்னிசை' மயக்கத்தில் மயங்குகிறாள்!
குளிக்கையிலே! குலமகள் ராதை !


இதழின் வழியே இரவு  விடியலை!
இதமாய் இசைக்கிறான் கண்ணன்


பட்டாம் பூச்சிகள் பரவசத்தில் பறந்து
தட்டாது சொல்லும் ராதையின் காதலை!


செவ்விதழில் செந்தேனிசை இசைக்கின்றான்
செம்மணலில் பெய்த மழையாய் காதலை!


-புதுவை வேலுmardi 23 mai 2017

தமிழ் இலக்கியத்தில்  பக்தியின் பார்வையில்  "உலகம்"


பிரஞ்சு தமிழ் கண்ணதாசன் கழகம்
பதினான்காம் ஆண்டு விழா - 2017
உள்ளத்தில் உள்ளதை உள்ளன்போடு
உலகம் என்னும் தலைப்பில் உரைத்தேன்
இந்நிகழ்வை....
காணொளி வடிவில் காணும் கண்மணிகளுக்கு வழங்கிய நண்பர் கணேஷ் அவர்கட்கு,
எனது நெஞ்சார்ந்த நன்றி!  செவிமடுத்து எம்மை  செம்மையுற  செய்ய வேண்டுகிறேன்.

-புதுவை வேலு 
lundi 24 avril 2017

இயலிசைக் கருத்து ஆய்வரங்கம் " உலகம்": புதுவை வேலு

பிரஞ்சு தமிழ் கண்ணதாசன் கழகம்
பதினான்காம் ஆண்டு விழா - 2017
"கவியரசு கண்ணதாசன் விழா"வணக்கம்,
அவையோர் அனைவருக்கும் "ஹே-விளம்பி" தமிழ் புத்தாண்டு"
இனிய நல் வாழ்த்துகள்,
-------------------------------------------------------------------------------

"கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்!
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுளையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!"-பாவேந்தர் பாரதிதாசனாரின் தமிழ்ப் பற்றுமிக்க பாவரிகளை, பாவலர்களும், இளம் பாவலர்களும், மிகுந்த இந்த அவையில் முதலில்
பதிவு செய்து!  தொடர்கின்றேன்! தமிழ்மொழி வாழ்த்தோடு!!!

தமிழ் அன்னையே!
நின்னை யான் வணங்குவதும்  
நீ! என்னை வாழ்த்துவதும்,
அன்னை மகற்கிடையே! 
அழகில்லை என்பதனால்,

உன்னை வளர்த்துவரும்!
ஒண்புகழ்சேர் புலவர்-
தன்னை வணங்குகிறேன் 
தமிழ்ப் புலவர் வாழியவே!

-கவியரசர் கண்ணதாசன் அவர்களின்  தேனினும் இனிய தமிழ் வாழ்த்துக் கவிதையைச் சொல்லி......
இயலிசை ஆய்வரங்கத்தில்,

தமிழ் இலக்கியத்தில்  பக்தியின் பார்வையில்  "உலகம்"
 
என்னும் எனது தலைப்புக்குள்....

  'புதுவை வேலு' நுழைகின்றேன்!


உலகப் பூங்கதவே! தாள் திறவாய்!
---------------------------------------------------------------------------------------------------------------
உலகம் - இது!  தமிழ் இலக்கிய  நூல்கள் நிறைந்த  அறிவு கலைச் சுரங்கம்!
---------------------------------------------------------------------------------------------------------------------
உலகம் என்னும் சொல்லை முதலடியாய்க் கொண்டு பாடலைத் தொடங்குவது என்பது,
சங்க இலக்கியங்களின் மங்கள மரபு! / மரபியல் மாண்பு.
அதனால்தான்,

"நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்"

- என்கிறார் 'ஒல்காப் புகழ் தொல்காப்பியர்'இந்த உலகமானது,

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஆகிய ஐம்பூதங்களும்
கலந்து இயற்கையாகவே உருவானது என்கிறது ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியம்.

உலகத்தை  ஆட்டுவித்த ஐம்பூதங்களையும், தனது கவிதையால்
கட்டிப் போட்டவர் 'கவியரசர் கண்ணதாசன்' அவர்கள்!

கவியரசர் தனக்குத் தானே எழுதிய இரங்கற்பாவில்,

கூற்றவன் தன் அழப்பிதழைக் கொடுத்தவுடன்,
படுத்தவனைக் குவித்துப் போட்டு,
ஏற்றிய செந்"தீ"யே!- நீ!
எரிவதிலும் அவன் பாட்டை எழுந்து பாடு - என்பார்!

எரிகின்ற தீயை எழுப்பி! எழும்பி நின்று, தனது இரங்கற்பாவிற்கு,
மரியாதை செலுத்த கற்றுத் தந்தவர் கவியரசர் என்பதை  இந்த வேளையிலே நான் நினைவு கூறுகின்றேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------பெரிய புராணம் போற்றும் பேர் உலகம்:-

அறுபத்து மூன்று  நாயன்மார்களின் அருளை அள்ளித் தரும்
அமுத நூல்  'பெரிய புராணம்'.
இந்த நூலின் முதலடியின் முதல் வார்த்தையோ "உலகம்" என்னும் ஒப்புயர்வுமிக்க சொல்லோடுதான் தொடங்குகின்றது.

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்!

- என்கிறார் திருத் தொண்டர் புராணத்து திரு நாயகர் சேக்கிழார் அவர்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
காலமெனும் காற்றிலும்,
காற்று மழை ஊழியிலும்,
சாகாது கம்பன் அவன் பாட்டு,
அது தலைமுறைக்கு
அவன் எழுதிவைத்த சீட்டு!

- என்பார் காவியத் தாயின் இளைய மகன் கண்ணதாசன்.

-கவியால் புவியை ஆண்ட கம்பரும் "உலகம்" என்னும் சொல்லை முதலடியாய்க் கொண்டுதான் கம்பரசம் ததும்பும் கம்பராமாயணத்தை தொடங்குகின்றார்!

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
 நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
 அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
 அன்னவர்க்கே சரண் நாங்களே"

இறைவனை பொதுவில் வைத்து, சமய பொதுவுடைமை கருத்தை தனது பாயிரத்தில் வாரணம் ஆயிரமாய் வலம் வரச் செய்தவர் அல்லவா?

"முத்தும் முத்தமிழும் தந்து
முந்துமோ வான் உலகம்"

-என்று சொன்ன கவிச் சக்கரவர்த்தி கம்பர்!

---------------------------------------------------------------------------------------------------------------------------
திரைப்படம் என்னும் ஊடகம் ஏறி திரும்பிய திசைதோறும்
கவிதைப் புறாக்களை.....
பறக்க விட்ட கவியரசர்,

'தந்தைக்கோர் மந்திரத்தை சாற்றிப் பொருள் விரித்து
முந்து தமிழில் முருகு என்று பேர் படைத்து
அந்த்தத்தில் ஆதி, ஆதியில் அந்தமென
வந்த வடிவேலை வணங்குவதே என் வேலை!'
- என்பார்! கவியரசர்,

 அந்த வடிவேலனாம் முருகனைப் பற்றி முதன்முதலில் எழுதப் பட்ட
"திருமுருகாற்றுப் படை"யின் ,
முதல் பாடலும்   "உலகம்"   என்னும் சொல்லோடுதான் 
தொடங்கி உயர்வடைகின்றது.


-------------------------------------------------------------------------------------------------------------
மேலும்,

 நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத்தொகை

- என்று எட்டுத் தொகை நூல்களைப் பற்றி ஒரு வெண்பா கூறும்.

இந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான "குறுந்தொகை" பாடலில்....

"தாமரை புரையும் காமர் சேவடி                
பவழத்தன்ன மேனி திகழொளிக்               
குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்       
நெஞ்சு பகலெறிந்த வஞ்சுடன் நெடுவேல்
சேவல் கொடியோன் காப்ப                      
ஏமம் வைக லெய்தியது இந்த உலகே! "
  

பாதுகாப்பு கவசமாக, கந்த சஷ்டி நாயகன் முருகபெருமான் அருள் பாலிக்கின்றான் இந்த உலகில் என்று ,
'உலகம்' என்னும் சொல்லை சொல்ல சொல்ல இனிக்க வைக்கின்றது இந்த குறுந்தொகை பாடல்!
-----------------------------------------------------------------------------------------------------------
உலகம் என்னும் சொல்லானது,
வையம், அகிலம்,  அவனி,   தரணி, 
புவி,  புவனம்,   பூமி,  பூவுலகு,
பார்,  ஞாலம், என்று.....
பல்வேறு பெயர்களாய் இலக்கியங்களில் சங்கமிக்கின்றன!!!

"வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடரொளியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகலே என்று"

-உலகத்தை அகல்விளக்கு ஆக்கி, ஆழ்கடலை நெய் ஆக்கி, காக்கும் கதிரவனை நெருப்பாக்கி,
சக்கரம் ஏந்தியவர் திருவடிக்கு தமிழ் சொல்மாலை சூட்டினேன், மனித குலத்தின் இடர் நீங்காதா?

-என்பார் 12 ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார்.

இந்த பாடலில் வையம் (உலகம்) என்னும் சொல் மையம் கொண்டிருக்கும் அழகியலை ஆழ்வார் அருமையாக பாசுரத்தில் கையாண்டு இருப்பார்.
-----------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் வைரமுத்து அவர்கள் கவியரசரைப் பற்றிக் கூறும் போது,என்னை பொறுத்த வரையில்,
எனது திரை இசைப் பாடல்களின்
வீரிய விளைச்சலுக்கு,
தமிழ் மண் பொறுப்பு!
ஆனால்?
எனது கவிதை விதை நெல்லுக்கு
"கண்ணதாசனே பொறுப்பு!" - என்பார்.

இதே போன்று,

வேதங்கள் அனைத்துக்கும் விதை நெல்லாக,
வித்தாக, தமிழ் சொத்தாக
கோதைத் தமிழ் வையத்தில் திகழ்கின்றது என்பதை....

'பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு'
.
ஆண்டாளின் அருந்தமிழ் சிறப்பை "வையம்" வாய் திறந்து பாடுகிறது
இந்த பாசுரம்!


இதனால்தான் கவியரசர் கண்ணதாசன்,

'கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்' என்றாரோ?


----------------------------------------------------------------------------------------------------------------
இறுதியாக,
அழகிய கலைகளின் சுரங்கமான  இலக்கிய உலகத்தை, ரசிப்போம் புதியதோர் உலகம் செய்வோம் என்று சொல்லி......

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்

"உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா"

இதை உணர்ந்து கொண்டால்
துன்பமெல்லாம் விலகும் கண்ணா!

-நித்திரையிலும் நினைவைவிட்டு நீங்காது!  கவியரசரின்  இந்த நிதர்சன வரிகள்


'தேனை மறந்திருக்கும் வண்டும்-ஓளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும் !
வானை மறந்திருக்கும் பயிரும் -இந்த
வையம் முழுதுமில்லை தோழி! '

- என்பார் முண்டாசுக் கவி பாரதி
(கண்ணன் பாட்டு: கண்ணன் என் காதலன் - )
தேனை மறந்து வண்டாலும்,  சூரியனின் ஒளியை மறந்து பூவாலும்,
வான் மழையை மறந்து பயிராலும்,  இவ்வுலகில் வாழ முடியாது
என்பார் பாரதியார்.
அதுபோல்,

காட்டுக்கு ராஜா சிங்கம்
பாட்டுக்கு ராஜா கவியரசர் - காமராஜர்  பாராட்டிய

கவிஞர் கண்ணதாசனின் பாடல்களை  மறந்து
தமிழ் மக்களால் வாழ முடியாது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
அழகிய கலைகளின் சுரங்கமான  உலகத்தை, ரசிப்போம்
புதியதோர் இலக்கிய உலகம் செய்வோம்!
இறுதியாக,

கவியரசர் கண்ணதாசன் பற்றி எனது குழலின்னிசை
வலைதளத்தில் நான் (புதுவை வேலு) எழுதிய  ஓர் பாமாலை

'கவியரசருக்கு ஓர் பாமாலை'

"பைந்தமிழ் பருகிய கண்ணனின் தாசர்
பசுந்தேனினும் இனிய பாடலை படைத்தார்
இதந்தரும் இதயத் தினிய கவிஞர்
இறவாப் புகழொடு இனிது வாழ்வார்!

பொன்மொழி சிந்தும் வெண்மதிக் கவிஞர்
கண்மணி நூல் சேரமான் காதலி தந்தார்
அர்த்தமுள்ள இந்துமதம் நாயகரவரை
ஆராதிப்போம் அன்னைத் தமிழால்!

ஏசுகாவியம் எழுதிய வாசுவின் தாசா
மாசில்லா மாணிக்க மதுசூதணன் நேசா
தத்துப் பிள்ளையாய் வளர்ந்த நல்முத்தையா
தத்துவப் பாடல்களின் வளர் சொத்து ஐயா!

முத்தமிழ் இவர் கவியின் மூலதாரம்
முத்தான கவிக்கு இவரே ஆதாரம்!
நித்ய கவியே நின்புகழ் வாழ்க!
நீலவானம் தொட்டு நீடுழி வாழ்க!
உலகை படைத்த இறைவனுக்கும், 
உலகம் பற்றிப் பேச வாய்ப்பளித்த,
பிரஞ்சு தமிழ்க் கண்ணதாசன் கழகத்துக்கும்
நன்றி பாராட்டி விடை பெறுகின்றேன்! 
நன்றி வணக்கம்!
-புதுவை வேலு
lundi 30 janvier 2017

"இயற்கையின் இனிய ஆரூடம்"மரக் கிளையின்
கோடுகள்....
சொல்கிறது!

மனிதனின்
முக ராசியை!


புதுவை வேலு

vendredi 20 janvier 2017

புறநானூற்று பூ மகளே!- பொங்கல் விழா 2017

பொங்கல் விழா 2017  பிரான்சு தமிழ்ச் சங்கம் 


வலைப் பூ நண்பர்களே!
நல்வணக்கம்!


15/01/2017 அன்று நடந்தேறிய,

பிரான்சு தமிழ்ச் சங்கம் விழாவில் ,
இலக்கிய கருத்தரங்கில் இடம்பெற்ற புதுவைவேலுவின்
பொங்கி வழியும் பொங்கல் கவிதைக் காணொளி!
கண்டு மகிழ வேண்டுகிறேன்.


நட்புடன்,
புதுவை வேலு


நன்றி: காணொளி ஆக்கம் நண்பர்  கணேஷ் 

 mardi 17 janvier 2017

"இலக்கியக் கருத்தரங்கம்"

  இலக்கியக் கருத்தரங்கில் ஓர் கவியுரை


பிரான்சு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற
பொங்கல் விழா 2017 -ல் கலந்துகொண்டு
புதுவை வேலு  - வழங்கிய
இலக்கிய உரையின் வடிவம் வாசியுங்கள் எனது தமிழையும் கொஞ்சம் நேசியுங்கள்

தமிழர் உள்ளங்களில் உவகையை உருவாக்கி வரும் சங்கம்,
தமிழ் பொழிப் பற்றை உணர்வால் தட்டி எழுப்பும் சிங்கம்
உலகம் போற்றும் மாற்றுக் குறைவில்லாத தங்கம்
"பிரான்சு தமிழ்ச் சங்கமே! - நீ!!! வாழ்க பல்லாண்டு!


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்,
மல்லாண்ட திண்தோள் மணி வண்ணா! -

உன் சேவடி செவ்வித் திருகாப்பு!

எனது இனிய தமிழ் உறவுகளே!
உங்கள் அனைவருக்கும் எனது (புதுவை வேலு) அன்பான அகம் நிறைந்த  புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள்.

இலக்கியக் கருத்தரங்கில் கலந்துரையாடும் நல்வாய்ப்பு தந்தமைக்கு நன்றி!!
உலகுக்கு உணவு தரும் உழவர்க்கு நன்றி சொல்லும் நன்னாள்
"பொங்கல்" என்னும் பொன்னாள்!

'தைப் பிறந்தால் வழி பிறக்கும்',
'தரணியிலே ஒளி பிறக்கும்' -என்பார்கள்.

சிறப்பான வாழ்வினை வழங்க வரும் தைத் திருமகளை வரவேற்று
முதலில் ஒரு...
வரவேற்புக் கவிதை:-

எனது இனிய தை மகளே!
மண்வாசனை மணம் வீச,
மகிழ்ச்சிப் பால் பொங்க
கரும்பாய் இனிக்கும்...
நறும் பொங்கலை புசிப்பதற்கு,
புவிக்கு புறப்பட்டு வா! மகளே!!!
புறநானூற்று  பூ மகளே!!!


நன்றியென்னும்,
அழியாத கோலத்தை - தமிழ்
மொழியாலே புள்ளி வைத்து
பொங்கல் கோலமிட...

நற்பண்போடு வா மகளே!
நற்றமிழாள் நாமகளே!


இன்பத்தை விதைத்தபடி,
இயற்கையை துதித்தபடி,
இனிதே....
துள்ளித் துள்ளி வா மகளே!
வாடிப் பட்டி வழியாக!


மார்கழி மாதத்தின் மரு(று) மகளே,
தைத்திருமகளே!
பன்னிரு மாதத்தில்,
பத்தாமிடத்து பைங்கிளியே!
தமிழ் பாசுரங்களையெல்லாம்
வாசித்துவிட்டு வலம் வரும்
தை மகளே நீ! வருக வருக!


உழவுக்கும் தொழிலுக்கும்,
உறுதுணையாய் நிற்கும்,
எருதுவுக்கும், ஆநிரைக்கும்,
தைமகளே - உனது
வித்தக விரல்களால்
விருந்தளித்து உபசரிக்க,
விரைந்தோடி வா மகளே!


கன்னித் தமிழும், கன்றின் குரலும்
கருணைக் கலந்து,  வருணனை நினைந்து,
நன்றியைக் கூறும்...
'பொங்கல் கவி' பாட,


பாட்டரசியாய்...
பாரதியின் -கவித்தேர் இழுத்து
பவனி வா! தை மகளே!


எறும்புகள் ஏர் சுமந்து நடக்கும்
கரும்பு சோலைக்குள் வீசும்
நறுங்காற்றாய்!
என் சுவாசக் காற்றாய்! வா மகளே!மண்சட்டி மணிக் கழுத்தில்
மஞ்சள் மாலை சூட வா! மகளே!
கொஞ்சும் கிளியாய்
பறந்து வா மகளே!

கோல மயில் போலே!
கொள்ளையின்பம் கொழிப்பதற்கு,
கோகுலத்து வாசல் தேடி
கோபியராய் ஓடி வா தை மகளே!

எனது இனிய தமிழ் "தை" மகளே!!!யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஓர் பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஓர் வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறருக்கு இன்னுரைதானே!
-திருமூலர்-

துளசி,வில்வம், அருகம்புல், தும்பைப் பூ, இவை நான்கில் ஒன்றைவைத்து
வழிபட்டாலே இறைவனின் இணைப்பை நாம் பெற முடியும்.

"யாவர்க்கும் ஆம் பிறருக்கு இன்னுரைதானே!"

அதாவது? இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்து சுடு சொற்களால்
மடு போன்ற வடுவை பிறரது மனதில் ஏற்படுத்துவதால் என்னப் பயன் ?

எனவே இந்த இனிய பொங்கல் நன்னாளில், நாம் சுவைதரும் கரும்பினை சுவைப்பதோடு,பயன் தரும் இனிய சொற்களின் விளைச்சலைப் பெருக்கி, நல் அறுவடைச் செய்து வளம் சேர்ப்போமாக!!!


இந்த அவையில், இன்னுரை தருவதற்கு பல அறிஞர்கள் வந்துள்ளார்கள், அவர்களை வணங்குகிறேன்.

வார்த்தைச் சிறகுகளால் மனதை வருடுவதைவிட வேறு என்ன சுகம் உலகிலே இருக்க முடியும்?
                           
                                   
மக்களின் வாழ்வில் சோர்வினைப் போக்கி இன்பமும்,
மலர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஊட்டுவன விழாக்களே! எனலாம்.

விழாக்களின் நோக்கம் என்பது, மக்களை ஒன்றிணைத்து மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே ஆகும்.

விழாக்கள் வளர்பிறை மற்றும் மதி நிறைந்த நன்னாளில்  தொடங்கியதாக
அகநானூறு  பாடல் கூறுகிறது (141)

விழாவை அறிவிப்பவராக  குயவர்கள் இருந்தார்கள் என்ற செய்தியை  நற்றிணைப் பாடல்
உணர்த்துகிறது.

"மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி
புலிக்களார் கைப்பார் முது குயவன்
இடுபலி நுவலும் அகன்றலை மன்றத்து
விழவுத் தலைக் கொண்ட பழவிறல் மூதூர்"

(நற்/ 293)

இத்தகைய விழாக்களின் விழியாக தைத் திருநாளை, உழவுக்கு முதலிடம் தரும் தமிழர்த் திருநாளாம்
பொங்கல் திருநாளை நாம் காணலாம்.

பிரான்சு தமிழ்ச் சங்கம்
பிரஞ்சிந்திய சங்கங்கள் இணைந்து நடத்தும்

பொங்கல் விழா!

பொதிகை மலைத் தென்றலாய்
பொன்மனங்களைத் தழுவட்டுமே - சங்கே!


மங்கள விளக்கொளி
மாண்பொளி வீசட்டுமே- இங்கே


வரவேற்பு எழிலுரை
திருவாசகமாய் சிறக்கட்டுமே - சங்கே


முன்னிலையாளர் முத்தமிழ் பேச்சு
முக்கனியாய் இனிக்கட்டுமே - இங்கே!


தலைமைப் பண்பு
தரணியை வெல்லட்டுமே - சங்கே


நாட்டியத்தாரகையர் நடனம்
நளினவிழி பேசட்டுமே - இங்கே!


வாழ்த்துரை யாவும்
வளங்களைச் சேர்க்கட்டுமே - சங்கே!


கவிதைகள் யாவும்
பொங்கல் கரும்பாய் சுவைக்கட்டுமே - இங்கே!


துள்ளிசையோ துள்ளி வந்து
புள்ளிமான்போல் விளையாடட்டுமே - சங்கே!


கலைநிகழ்ச்சிகள் யாவும்
கவின்பொருள் பற்றி பேசட்டுமே - இங்கே!வள்ளுவர் போற்றும் உழவு

சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (1031)


உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும், அது ஏர்த் தொழிலின் பிந்தான் நிற்கிறது,வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு, மக்களின் வாழ்வாதாரம்,
 நாட்டின் பொருளாதாரம் அமைந்திருப்பதால் உழவுத் தொழிலே தலை சிறந்த தொழிலாக விளங்குகிறது என்கிறார் வள்ளுவர்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அக்தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து (1032)


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.


உழவின் சிறப்பை பற்றி  ஏர் எழுபது என்ற நூலில் கம்பர்கவிபுனைந்துள்ளார்.

ஜல்லிக் கட்டு என்றழைக்கப்பட்டு வரும் பண்டைத் தமிழர் விளையாட்டான ஏறு தழுவுதல்  பற்றிய பாடல்களை கலித்தொகையில் நாம் காணலாம்.

பள்ளு இலக்கியம்

சிற்றிலக்கிய வகைகளில் (96),
இனிமை நிறைந்த ஓர் இலக்கியம் பள்ளு இலக்கியம்.
உழவுத் தொழில் செய்வோரை பள்ளர்கள் என்றே இந்நூல் கூறுகிறது.
எனவே உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம்
பள்ளு இலக்கியம் எனலாம்.

வீரமா முனிவர் இயற்றிய சதுரகராதியில், தொகை அகராதியில் உழத்திப் பாட்டின் விளக்கம் நன்கு கூறப்பட்டுள்ளது.

பள்ளு இலக்கியம் இந்நூலில், நெல் விதைகளின் வகைகளை "பள்ளன் " சொல்வதாக பள்ளு இலக்கியத்தில்  ஓர் பாடல் வருகிறது:

"சித்திரக் காலி, வாளான், சிறை மீட்டாண், மணல்வாரி,
செஞ்சம்பா, கருஞ்சூரை, சீரகச்சம்பா,
முத்து விளங்கி, மலை முண்டன், பொற்பாளை, நெடு
மூக்கன்,அரிக்கிராவி, மூங்கிற் சம்பா,
கத்தூரி வாணன், கடைக்கழுத்தன்,இரங்கல் மீட்டான்,
கல்லுண்டை பூம்பாளை, பார்க்கடுக்கன், வெள்ளைப்
புத்தன், கருங்குறுவை, புனுகுச் சம்பா"


- வியப்புக்குரிய நெல் விதைகளின் வகைகளை பள்ளன்  பாடலாய் அன்று விதைத்தை, 
இன்று நாம் எழுத்தளவில் அறுவடை செய்து கொண்டு இருக்கிறோம்.

எனவே! (இறுதியாக)


தமிழ்கூறும் நல்லுலகில், 

ஆலம் விழுதினைப் போல்,
விழாக்கள் ஆயிரம் வந்தாலும்,
அதன் "வேர்" எனத் தமிழர்த் திருநாளாம்


"தைப் பொங்கல்" இருக்கும் வரை,

அதில் வீழ்ந்து விடாது நாம் இருப்போம்!!!


"பொங்கல் விழா"

தாழ்ந்து விடாது நாம் காப்போம்!!!


-என்று சொல்லி  இனிய வாய்ப்புக்கு மீண்டும் ஒரு முறை 
நன்றியை சொல்லி விடை பெறுகின்றேன்.
நன்றி! வணக்கம்!  

  -புதுவை வேலு -


vendredi 13 janvier 2017

"பொங்கலோ பொங்கல்"உள்ளத்தில் உவகை ஊற்றெடுக்க
தெள்ளமுது தேன் தமிழை வார்த்தெடுக்க
வேங்கடவன் சொர்க்க வாசல் நடை திறக்க

வெல்லம்போல் இனிக்கட்டும் தைப் பொங்கல்
செங்கரும்பு சுவையூறும், செந்தமிழ் பொங்கல்!

"பொங்கலோ பொங்கல்"

கிலத்தை ஆளும் அன்பு பொங்கல்
அறியாமை அகற்றும் கல்விப் பொங்கல்
ற்றலை வளர்க்கும் அறிவுப் பொங்கல்
ஆதித்யனை வணங்கும் நன்றி பொங்கல்

தயம் இசைக்கும் இலக்கியப் பொங்கல்
ன்றவள் ஆசியினை பேணும் பொங்கல்,
ழவின் உயர்வை பேசும் பொங்கல்

ற்றாய் சுரக்கும் தமிழுணர்வுப் பொங்கல்


ங்கும் தேமதுரத் தமிழோசை...
இசைக்கும் பொங்கல்,
றுதழுவோர் சிறப்பை பறைசாற்றும் பொங்கல்
ந்திணை வாழ்த்தும் பைந்தமிழ் பொங்கல்!

ன்றே குலம் என்றே சொல்லும் பொங்கல்
ங்கும் நலம் வாழ வாழ்த்தும் பொங்கல்!

வைத் தமிழ் போல் வாழும் பொங்கல்
து வரமாய் கிடைக்கும் பொங்கல்


-புதுவை வேலு

நட்பு உள்ளங்கள்  யாவருக்கும்,
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
 புதுவை வேலு