dimanche 30 novembre 2014

'ஒழுக்கத்தை பேணுவோம்'



எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்! 




ஆம் !
வாய்மையை போதித்த நம் தெய்வப் புலவன்  வள்ளுவனுக்கு  மத்திய அரசு சிறப்பு செய்து இருப்பது  அதாவது, 'திருவள்ளுவர் பிறந்த தினம், தேசிய அளவில் கொண்டாடப்படும்' என, மத்திய அரசு அறிவித்திருப்பது. வரவேற்று பாராட்டத்தக்க அறிவிப்புகளில் ஒன்றாகும்.

இதை அறிவித்த மத்திய அரசுக்கு தமிழ் வலைதள படைப்பாளர்கள் /பதிவாளர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் நமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வோம்! 
திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டுவோம்.

வாருங்கள் நண்பர்களே!
ஒன்றாக கூடுங்கள் தோழர்களே!

ஒழுக்கத்தை பேணுவோம்  வள்ளூவனின் வாக்கின்படி!


ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப்படும்.


(குறள் 131)


(நல்ல ஒழுக்கம், எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால், அவ் ஒழுக்கத்தை, உயிரைவிட உயர்ந்தாகக் காக்க வேண்டும்.)


ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக்கு அறிந்து.


(குறள் 136)


(ஒழுக்கம் தவறினால் வரும் கேடுகளை, அறிஞர்கள் நன்கு அறிவர். எனவே, கடைப்பிடிப்பது கடினமாகஇருப்பினும் ஒழுக்கத்திலிருந்து தவறாமல் என்றும் தம்மைக் காத்துக் கொள்வர்.)



நன்றிக்குவித்து ஆகும், நல் ஒழுக்கம்; தீ ஒழுக்கம் 

என்றும் இடும்பை தரும்.


(குறள்  138)


(நல் ஒழுக்கம், அழியாத நன்மைக்கு, விதையாகும்; தீ ஒழுக்கமோ, தீராத துன்பத்திற்கே மூலமாகும். )


என்னது?

குழலின்னிசை ஒழுக்கத்தை ஓங்கி இசைக்கிறதே?

என்று நீங்கள்  கேட்பது எனது செவிகளுக்கும் கேட்கிறது.

ஏனென்றால் இன்றைய தினமானது மனமும் உடலும் சார்ந்த ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டி அதன் அவசியத்தை வலிவுறுத்தும் தினம்!
ஆம் !


இன்று!

'உலக எய்ட்ஸ் தினம்'


ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

எய்ட்ஸ் இல்லாத சமூகத்தை உருவாக்கும் வகையில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக எய்ட்ஸ் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதோ இது தொடர்பாக விழிப்புணர்வுக்கு விருந்தாய் அமைந்த ஒரு
பக்தி கதை!


'நீயே என் குரு'







 



பெண்ணின்பமே பேரின்பம் என வாழ்ந்து கொண்டிருந்தார் ஒருவர்.

ஒருநாள் இரவு வேளை... மனைவியின் நினைவுடன் வீட்டுக்குச் செல்லும் போது பெருமழை பிடித்துக் கொண்டது. அதைப் பொருட்படுத்தாமல் வீடு நோக்கி நடந்தார்.

மனம் முழுவதும் அவளது நினைப்பு!

வீட்டுக்குப் போக வேண்டுமானால், இடையிலுள்ள நதியை கடக்க வேண்டும். ஆற்றில் வெள்ளம் வந்ததால், ஓடக்காரன் வீட்டுக்கு போய் விட்டான். இவருக்கோ, எப்படியும் ஆற்றைக் கடந்து வீடு போய் சேர மனம் துடித்தது.

ஆற்றில் பாய்ந்தார். ஏதோ ஒன்று கையில் சிக்கியது. கட்டையாக இருக்க வேண்டும்! அதைப் பற்றிக் கொண்டு கரை சேர்ந்து விட்டார். வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. விளக்கை அணைத்து விட்டு மனைவி உறங்கி விட்டாள் போலும்! 

மழையின் சப்தத்தில்,  அவர்கதவைத் தட்டிய ஒலி அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே மாடிக்கு ஏறுவதற்காக, மாடியில் இருந்துதொங்கிய கயிறைப் பிடித்து ஏறினார்.

ஒரு வழியாக மனைவி தூங்கும் அறைக்குள் நுழைந்தார். திடுக்கிட்டு எழுந்த மனைவி,  கணவன் அங்கே நிற்பது கண்டு, நீங்களா ?
இந்தக் கடும் மழையில் ஆற்றைக் கடந்து எப்படி வந்தீர்கள்?
வீடு வேறு பூட்டியிருந்ததே! என்றாள்.

 நடந்ததைச் சொன்ன கணவர்,  அவளது ஸ்பரிசத்திற்காக கடலையும் கடப்பேன் என்று மோக வெறியில் ஆசைமொழி பேசினார்.
மறுநாள் விடிந்தது. அவள் மாடிப்படியில் தொங்கிய கயிறைப் பார்த்தாள்,  அது கயிறல்ல, பாம்பு என்பது தெரியவந்தது. அவரை அழைத்து வந்து காட்டினாள்.

ஆற்றுக்கு நீராட இருவரும் சென்றார்கள். கரையில் அவர் பிடித்து வந்த கட்டை கிடந்தது. அருகே சென்று பார்த்தபோது, அது கட்டை இல்லை, ஆற்றில் அடித்து வரப்பட்ட பிணம் என்று தெரிந்தது.
பார்த்தீரா! அழியும் என் உடல் மீது கொண்ட ஆசையில் என்னவெல்லாம் செய்திருக்கிறீர் என்று!

இந்த உடல் தரும் சுகம் தரும் தற்காலிகமானது தான். இதன்மீது பற்றுக் கொண்டுஇருப்பதை விட, ராமநாமத்தின் மீது பற்றுக் கொண்டால், என்றும் நிரந்தர சுகம் தரும் வைகுண்டமே கிடைக்கும்.

பிணத்தையும்,  பாம்பையும் கட்டிக் கொண்டு சுகம் பெற வந்த உம் நிலையை நீரே ஆராய்ந்து பாரும்! என்றாள்.

அவருக்குள் ஏதோ பொறி தட்டியது.
கேவலம்...

ஒரு பெண்ணுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டுமா! அவள் சொன்னது சரிதான்.

மனைவியென்றும் பாராமல் அவள் காலில் விழுந்தார்.
« நீயே என் குரு » என்றார்.

உடனேயே எழுதுகோலை எடுத்தார். 

ராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்தார். 
 ஸ்ரீராமசரித மானஸ் என்று பெயர் சூட்டினார்.

இப்போது புரிந்திருக்குமே! அவர் யார் என்று

ஆம்... துளசிதாசர் என்னும் மகான் தான் அவர்.

இவர் எழுதிய « ராமசரிதமானஸ் » நூலைத்தான்
துளசி ராமாயணம் என உலகமே போற்றுகிறது.

எனவே நாம்!

"ஒருவனுக்கு ஒருத்தியாய் வாழுவோம் !
'ஒழுக்கத்தை பேணுவோம்"
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.

புதுவை வேலு

நன்றி: (கதை உதவி தினமலர்)

jeudi 27 novembre 2014

"கவி காளமேகம்" சிலேடை விளையாட்டு

 "கவி காளமேகம்"

 

 



சிலேடை என்னும் சில்லெடுத்து (கல்) சிலை வடிக்கும் சிந்தனை சிற்பிகளில் தலையான தலைமைக் கவி யார் ? என்று அறிவோமேயாயின்

அவர் தான் "கவி காளமேகம்" புலவர் என்று கூறும் தமிழ்நல்லுலகம்.
அவரது சிலேடை விளையாட்டின் சிறப்பை சற்றே சீர்தூக்கித்தான் பார்ப்போமே! வாருங்கள்!

"கர்வமிகு கவிராயர்"

இவ்வுலகில், சில புலவர்கள் தங்களைக் கவிராயர்கள்என்று திமிருடன் சொல்லி கொள்வார்கள்.

குறும்புக்காரரான காளமேகம் அவர்களைப் பார்த்து இப்படி பாடுகிறார் !



வால் எங்கே?

நீண்ட வயிறு எங்கே?  

முன் இரண்டுகால் எங்கே

உள்குழிந்த கண் எங்கே

சாலப்புவிராயர் போற்றும் புலவீர்காள்

நீவிர் கவிராயர் என்று இருந்தக்கால்!

 
நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்


பொதுவாகவே கவிஎன்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உண்டு! ஒன்று கவிதை எழுதுபவர், மற்றொன்று குரங்கு. 

புலவர்கள் முதல் பொருளை வைத்துப் பெருமையடித்துக்கொள்ள, காளமேகம் இரண்டாவது பொருளை எடுத்துக்கொண்டு அவர்களைக் கிண்டலடிக்கிறார்.
 
அதாவது நீங்கள் உங்களைக் கவிராயர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள்.
அது உண்மைதானா? எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

உண்மையிலேயே நீங்கள் கவிராயர்களானால்,
 உங்களுடைய வால் எங்கே?
நீண்ட வயிறு எங்கே?
முன்னால் இருக்கவேண்டிய இரண்டு கால்கள் எங்கே?
 உள்நோக்கிக் குழிந்திருக்கும் கண்கள் எங்கே?
என்று போகிறப் போக்கில் அத்தகைய கவிகளை
கிண்டல் செய்துவிட்டு போகிறார்.

மற்றொரு தனிப் பாடலில்….















பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கஎன்று 


வாழ்த்துவதின் பொருளை சிறப்புடன் விளக்குகிறார்.



துதி, வாணி, வீரம், விசயம், சந்தானம், துணிவு, தனம்,



அதிதானியம், சௌபாக்கியம், போகம், அறிவு, அழகு,


புதிதாம் பெருமை, அறம், குலம், நோவு அகல் பூண்வயது


பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே




நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்


மதுரையில் குடிகொண்டுள்ள பரம்பொருளே, எனக்கு இந்தப் பதினாறு வரங்களைத் தருவாய்:
1.துதி (புகழ்)
2.வாணி (கல்வி)
3.வீரம்
4.விசயம் (வெற்றி)
5.சந்தானம் (குழந்தை)
6.துணிவு
7.தனம் (செல்வம்)
8.அதிக தானிய வளம்
9.சௌபாக்கியம் (சிறந்த இன்பம்)
10.போகம் (சுகம்)
11.அறிவு
12.அழகு
13.தொடர்ந்துதினந்தோறும் கிடைத்துக்கொண்டே இருக்கும் சிறப்புகள்
14.கொடுக்கின்ற குணம்
15.நல்ல குலப்பிறப்பு
16.நோய் இல்லாமை, நீண்ட ஆயுள்

மணமக்களை நாம் வாழ்த்தும்போது: பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கஎன்று வாழ்த்துவோம் அல்லவா? அதன் அர்த்தம் ‘16 பிள்ளைகள்அல்ல!

இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள 16 வரங்கள்தாம்.

காலத்தல் அழியா கவிதை செல்வத்தை நமக்கு அளித்துவிட்டு சென்ற

ஆசு கவி
 
காளமேகப் புலவரின் புகழ் ஓங்குக ஓங்குகவே!


புதுவை வேலு