இன்று ஒரு தகவல்
தள்ளாடும் தலைமுறை
வலைதள வாசகர்களே
வணக்கம்! குடி பழக்கத்தினால் உண்டாகும்
சீரழிவினை சித்தரித்து
சொல்வதுதான் இன்று ஒரு தகவலின் தகவல்
அம்சம்!
உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, மது காரணமான நோய்களால் ஆண்டுதோறும் சுமார் 2.5 கோடி பேர் இறக்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளில் மதுப்பழக்கம் பரவலாக குறைந்து வரும் நிலையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அது அதிகரித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் 1950-ஆம் ஆண்டில் மது அருந்துவோரின் சராசரி வயது 23-ஆக இருந்து வந்தது. தற்போது அது 13-ஆக குறைந்துள்ளது கவலையளிப்பதாக உள்ளது.
மாறி வரும் சமூகக் கட்டுப்பாடுகள், மது எளிதாக கிடைத்தல், அதனை வணிகப்படுத்தும் விதம், ஏற்றுமதி, இறக்குமதி விதிகளில் தாராளம் போன்றவைதான் மதுப்பழக்கம் அதிகரிக்க காரணம் எனவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை ஆறில் ஒருவருக்கு மதுப்பழக்கம் உள்ளதாம். இதில் ஆண்களின் பங்கு அதிகம் என்றாலும், பெண்களின் பங்கும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
போதைப் பழக்கத்துக்கு அடிமையான மனித
சாதாரண நிலையில் கண்ணியமாக நடந்து கொள்ளும் ஒரு இளைஞன், போதை தலைக்கேறியதும் தன்நிலை மறந்து விடுகிறான். அதன் பின், தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே பல்வேறு குற்றங்களைச் செய்கிறான்.
சாலையில் நின்று கொண்டு வாகனங்களை வழி மறித்து கலாட்டா செய்வது, குடிக்க பணம் கேட்டு தாயையோ மனைவியையோ துன்புறுத்துவது, திருடுவது, பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுதல் போன்ற கொடுமையானச் சம்பவங்களில் ஈடுபடுகிறான். இது தமிழக கிராமங்களில் அன்றாட நிகழ்வாகி விட்டது.
நாளொன்றுக்கு ரூ.300 சம்பாதிக்கும் சாதாரண கூலித் தொழிலாளி பாதிப் பணத்தை மதுவுக்காக செலவு செய்து விடுகிறான். குடும்பத்தைப் பற்றியோ, எதிர்கால நலனைப் பற்றியோ அவன் சிந்திப்பதே இல்லை.
குடிப்பழக்கத்தால் சிந்திக்கும் தன்மையையே நாளடைவில் அவன் இழந்து விடுகிறான். காலையில் கண் விழித்ததும், எப்போது மதுக்கடை திறக்கும் என காத்துக் கிடக்கும் அவலம் நாளும் தொடர்கிறது.
காந்தி ஜயந்தி, மகாவீர் ஜயந்தி, வள்ளலார் தினம் போன்ற மதுக்கடை விடுமுறை நாள்கள் வரும்போது, அதற்கு ஒருநாள் முன்னதாகவே மதுபாட்டில்களை வாங்கி வைக்கும் அளவுக்கு மதுவுக்கு அடிமையானவர்கள் இங்கு ஏராளம்.
பெரும்பாலான சாலை விபத்துக்கள் மது அருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டுவதாலேயே ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எல்லா ஊர்களிலும் சாலைகள், வீதிகள் தோறும் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன.
பண்டிகை நாள்களில் நாட்டில் அதிகம் விற்பனையாகும் பொருள் மதுபாட்டில்கள் தான்.
அண்மையில் மது விற்பனைக்கு எதிராகச் சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவர், மதுக்கடைகளால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாகவும், மதுக்கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரியில் மது விலக்கு கொள்கை அமல்படுத்தப்படவில்லை.
இம்மாநிலங்களில் மது விலக்கை அமல்படுத்தினால் தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்தத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். எந்த வகையில் இதனை ஏற்றுக் கொள்ள இயலும்.
தாய்நாட்டின் வளர்ச்சிக்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் உழைக்க வேண்டிய இளைய சமுதாயத்தின் மூளை மதுவால் சிந்திக்கும் தன்மை இழந்து, திருட்டு, பொய், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறது.
போதைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும், அவை அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராகவே மாறி வருகிறது.
இளைஞர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டுமானால் நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும்.
தள்ளாடும் தலைமுறையினரே விடியலில் சிந்திப்பீர்!
புகழில் போதை இல்லையா?
கொஞ்சும் மழலையின் குரலில் போதை இல்லையா?
காதலில் போதை இல்லையா?
நெஞ்சில் கருணையில் போதை இல்லையா?
சொல்லும் கருத்தினில் போதை இல்லையா?
கவிஞர்கள் கவிதையில் போதை இல்லையா?
கவிஞர் கண்ணதாசன் கவிதையில் தான் போதை இல்லையா?
சிந்திப்பீர் சீரழிவில் இருந்து விடுபடுவீர்!
புதுவை வேலு
நன்றி:(.
Aucun commentaire:
Enregistrer un commentaire