மழலை மனம்
"அம்மா! வானம் ஏன் புளுவா இருக்கு? நட்சத்திரப் பூக்கள் ஏன் உதிரவே மாட்டேங்குது? மாட்டுக்கு ஏன் இரண்டு கொம்பு இருக்கு?மூக்கு பெரிசாகிட்டே போனால் என்ன ஆகும்? நான் உனக்குள் இருந்து எப்படி வெளியே வந்தேன்?
ஓயாத அலைகளாக மனதின் கரையைத் தீண்டித் தீண்டி வியக்க
வைக்கும் கேள்விகளால் செல்லங்கள் வளர்கிறார்கள். ‘‘இது போன்ற
கேள்விகளால் ஆச்சரியப்பட்டு நின்று விடாமல் பொறுப்பான பதில் தரும்
பெற்றோராக நாம் மாற வேண்டும்’’
‘‘குட்டி மீன் கண்களின் அசைவு, எட்டிப் பிடிக்கும் பிஞ்சு விரல், உதட்டுச் சுழிப்பு, மெல்லச் சிவக்கும் முகம் என சின்னச் சின்ன மாற்றங்களின் மூலமாக மொழி வசப்படுவதற்கு முன்பாகவே தங்களது கேட்டலை தொடங்கி விடுகிறார்கள் குழந்தைகள். அர்த்தம் புரிந்து, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, முடி கோதி, காதுகளை வருடி, நெஞ்சோடு இறுக்கி, தோளில் சாய்த்து, மார்புகள் கசிய செல்லத்தின் பசி உணர்ந்து பால் ஊட்டுகிறாள் தாய்
தாயின் வெளிப்பாடுகளில் இருந்து தன் கேள்விகளுக்கான பதில்களை குழந்தை சேகரிக்கிறது. குழந்தை, சுற்றியுள்ளவர்களின் உதட்டு அசைவுகளைப் புரிந்து கொண்டு வார்த்தைகளைக் கற்கத் தொடங்குகிறது. கேட்பதை மழலையில் திரும்பச் சொல்கிறது.
வார்த்தைகளால் வாக்கியங்களை அமைக்கிறது. பிறந்ததும் முதல் கண் அசைவில் இருந்தே குழந்தையின் கேள்விகள் தொடங்கி விடுகின்றன.
கியூரியாசிட்டி எனப்படும் தூண்டுதல் மற்றும் தேடல் இருக்கும் போது குழந்தைகள் கேள்வி கேட்கத் தயங்குவதே இல்லை. பதிலைப் பற்றிக் கவலைப்படாமல் எழுகின்றன அவர்களின் கேள்விகள். சரியான பதில் கிடைக்கும் போது புரிதலுடன் அவர்களின் தேடலுக்கான எல்லைகளும் விரிவடைகின்றன.
சில பெற்றோர் குழந்தைகளின் கேள்விக்கு பதில் அளிக்காமல் தவிர்ப்பார்கள்... ‘வயதுக்கு மீறி கேள்வி கேட்கிறாய்’ என அடக்க முற்படுவார்கள். அதனால் குழந்தைகளின் ஆர்வம் தடுக்கப்படுகிறது. கேள்வி கேட்பதை நிறுத்தும் போது தேடலும் புரிதலும் நின்று போகிறது. இது குழந்தைகளுக்குள் இயல்பாக வளரும் மற்ற திறன்களையும் மந்தமாக்கும்.
குழந்தைகளிடம் இரண்டு வகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு விஷயத்தைச் சொல்லி, ‘இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?’ என்று கேட்பது ‘ஓப்பன் எண்டட்’. இது போன்ற கேள்விகளுக்குக் குழந்தைகள் மனம் திறந்து தயக்கமில்லாமல் சுதந்திரமாக பதில் அளிக்கலாம்.
மழலை ததும்பும் வயதில் ‘உனக்கு அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமா’ என்று பலர் கேட்பதுண்டு. இது குழந்தைகளின் உளவியலை தகர்க்கும் கேள்வி. அம்மா, அப்பா இருவரிடமும் ஒரே மாதிரியான அன்பை வெளிப்படுத்தவே குழந்தை விரும்புகிறது. இப்படிக் கேட்கும் போது குழந்தை சங்கடத்தை எதிர்கொள்கிறது.
இது போன்ற கேள்விகள் ‘க்ளோஸ் எண்டட்’ எனப்படுகின்றன. இவற்றைத் தவிர்ப்பது நல்லது. கேட்கும் கேள்விகளின் அடிப்படையில் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும். ஆர்வத்தின் அடிப்படையில் எழுந்தவையா,
சிக்கலான கேள்விகளா, எந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.
பிரச்னைக்குரிய கேள்விகளாக இருந்தால், அவர்கள் எப்படிப்பட்ட மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதையும் சிந்தனை ஓட்டத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தையின் கேள்வி எப்படிப்பட்டதாக இருந்தாலும் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டியது பெற்றோர் மற்றும் சுற்றியிருப்பவர்களின் கடமை. வீடு, பள்ளி, வெளியிடம் என எல்லா இடங்களிலும் குழந்தைக்கு பதில் கிடைக்க வேண்டும்.
பெற்றோர் கேள்வியைத் தெளிவாகப் புரிந்து கொண்டு பதில் தருவது நல்லது. குழந்தை, நமக்கே தெரியாத ஒன்றைப் பற்றிக் கேள்வி கேட்கும் போது, பதிலை புத்தகங்களில் தேடி படித்துச் சொல்லலாம்... இணையத்தின் வழியாகவும் தகவல்களை சேகரிக்கலாம்...
சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிபுணர்களிடம் கேட்டும் விடை பெறலாம். ஆழமான கேள்விக்கு பதில் தர பெற்றோர் எடுக்கும் முயற்சியில் குழந் தைகளையும் பங்கெடுக்கச் செய்யலாம். இதன் மூலம் கேள்விகளுக்கு எங்கிருந்தெல்லாம், எப்படியெல்லாம் பதில் பெற முடியும் என்பதையும் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தைகளிடம் பெற்றோர் தங்களது அதிமேதாவித்தனத்தை நிரூபிக்கத் தேவையில்லை. நம்மை விட 20 ஆண்டுகள் கடந்து பிறக்கும் குழந்தையின் அறிவின் தாக்கமும் புரிதலும் நம்மைவிட அதிகமாக இருக்கும். அவர்களுக்கு ஈடு கொடுத்து ஓட நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
கேள்விகளுக்கு சரியான பதில்களைப் பெறுவதோடு குழந்தை நின்று விடுவதில்லை. தான் பெற்றதை தனக்கு உற்ற நபர்களிடம் சொல்ல முயற்சிக்கிறது. பல இடங்களிலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள இந்த அறிவு குழந்தைக்கு உதவுகிறது. கேள்விக்கு விடை கிடைக்கும் போது குழந்தையின் சிந்தனை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்கிறது. யோசிக்கும் திறன் மேம்படுகிறது.
மேலும், எந்த இடத்திலும் தெரியாது என்று தயங்கி நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் குழந்தைக்கு ஏற்படுவதில்லை. இது போன்ற குழந்தைகள் பிரச்னைகளுக்கு எளிய தீர்வுகளை வைத்திருப்பார்கள்.
குழந்தை கேள்விகளின் மூலம் தனக்குள் இருக்கும் தனித் திறன் சார்ந்த தேடல்களை வெளிப்படுத்துகிறது. அதைப் புரிந்து கொண்டு அதற்கான பயிற்சிகளை அவர்கள் பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். விரும்பும் துறையில் கூடுதல் தகவல்களைப் பெறவும் வழிகாட்ட வேண்டும்.
குழந்தைகள் சில நேரம் வித்தியாசமாக கேள்வி கேட்பார்கள். ‘கோழி முட்டை ஏன் இந்த வடிவத்தில் இருக்க வேண்டும்? வேறு மாதிரி இருக்கலாமே..!’, ‘தண்ணீரைத் தொட்டால் கைகளில் ஏன் ஈரம் ஒட்டிக் கொள்கிறது?’ இவை குழந்தைக்குள் ஓர் ஆராய்ச்சியாளன் இருப்பதை உணர்த்துபவை.
குழந்தை வளர்ப்பில் முக்கிய அம்சமே அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களது சுதந்திரத்தை அனுமதிப்பதுதான். கேள்வி கேட்கவும் ஒரு விஷயத்தை அனுபவம் சார்ந்து புரிந்து கொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்பிருக்க வேண்டும்.
மூன்று வயதுக்குள் குழந்தையின் மூளையில் அதிக இணைப்புகள் ஏற்படும். இந்த இணைப்புகளை பலப்படுத்தி மேலும் விரிவடையச் செய்ய கேள்விகள் கேட்க அனுமதிப்பதும் அதற்கான பதில்களைத் தருவதும் அவசியம். ஒரு பொருளை பலகாலம் பயன்படுத்தாவிட்டால் அது வீணாகி விடும்.
அது போல் மூளையின் அனைத்து இணைப்புகளுக்கும் சிந்திக்கும் பணியை, தேடலுக்கான வழியை கேள்விகளே திறந்து விடுகின்றன. குழந்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் திறன்களைப் புரிந்து கொள்ள உதவுவது கேள்விகளே! அந்த மாயக்கண்ணாடியின் வழியாக குழந்தை தனது மனதின் முகத்தைக் காட்டுகிறது. குழந்தைகளிடம் வளரும் இந்தக் கண்ணாடி ஆரம்பத்திலேயே பல இடங்களில் உடைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் குழந்தை தன்னை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பில்லாமல் நத்தை ஓட்டுக்குள் முடங்குவது போல முடங்கி விடுகிறது.
எப்போதாவது ஆர்வத்தில் தலையை நீட்டி வெளியே வந்தால், ‘அதிகப்பிரசங்கித்தனமாகக் கேள்வி கேட்கிறாயே!’ என சில பெற்றோர் தலையில் தட்டுவார்கள். இது குழந்தைக்குள் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும். எந்த ஆர்வமும் இல்லாத நிலையில் இப்படிப்பட்ட குழந்தைகளால் மிகப்பெரிய உயரங்களை எட்ட முடியாது.
பெற்றோரிடம் நட்பான சூழல் நிலவினால் ஆழ்மன ஏக்கங்கள், எதிர்மறையான சிந்தனைகள், மறைக்கப்படும் விஷயங்கள் குறித்தும் கேள்வி கேட்பார்கள் குழந்தைகள். அப்படிக் கேட்கும் போது தடை போடாமல், வயதுக்கு ஏற்ற விளக்கத்தை பொறுப்புடன் தர வேண்டும். ஒருவேளை தவறான விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவது தெரிந்தால் குழந்தைகளை திசை திருப்புவதற்கும் கேள்விகளே உதவுகின்றன.
குழந்தைகளின் ஆரோக்கியமான அறிவுப் பயணத்துக்கு துணை வரும் கேள்விகளை ஒரு போதும் நாம் பதிலின்றி திருப்பியனுப்ப வேண்டாம்...’’
" ஒவ்வொரு நொடியும் நமக்காக
படைக்கப்பட்டது - ஒவ்வொரு கணமும் ரசித்து வாழ்வோம் " மழலைகளை போல் 'தலைக்கனமற்ற தன்னலமற்ற' வாழ்வை
வாழ்வோம்!
புதுவை வேலு
நன்றி:தினகரன்(மருத்துவம்/ குழந்தை வளர்ப்பு)
Aucun commentaire:
Enregistrer un commentaire