jeudi 18 septembre 2014

கோகிலகான இசைவாணி எம்.எஸ்.சுப்புலட்சுமி







நெஞ்சம் மறப்பதில்லை


கோகிலகான இசைவாணி எம்.எஸ்.சுப்புலட்சுமி

 

 

 

தேனினும் இனிய காந்தக் குரலால் கோடானுகோடி ரசிகப் பெருமக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பெற்ற இசை நாத ஜோதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள்.
செப்டம்பர் 16 எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த நாள். இந்நாளில்  அவரது இசை சாதனைகளை புகழ் வீணையால் மீட்டி இன்பத்தில் துய்ப்போம் வாருங்கள்!


"பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்" என்று சொல்லுவார்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் இசை என்னும் தரணியை அழகுற ஆண்டார்.

நான்மாடக் கூடலிலே தோன்றி எட்டுத் திக்கும் தமிழோசை பரவச்செய்த இசை என்னும் இமயம் இவர்.   ராகம்,தாளம்,பல்லவி அனைத்து இசை வித்வான்களும் பாடுவார்கள். ஆனால்  ராகம் பாடி ஈட்டிய செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும்,சமூக சேவைகளுக்கும் வழங்கிய ஒரே இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி  மட்டுமே! இதற்க்காகத்தான் இவருக்கு "மாக்சேசே" விருது வழங்கப் பட்டது.


1926ல் வெளியிடப்பட்ட ஒரு எல்.வி. இசைத்தட்டில் 'மரகத வடிவும் செங்கதிர் வேலும்' என்னும் பாடலில் சண்முகவடிவின் வீணையும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாட்டும் இணைந்து வெளிவந்தது. தி ட்வின் ரிகார்டிங் கம்பெனி இதை வெளியிட்டது. இதுதான் இவரது முதல் இசைத்தட்டு.


அரங்கேற்றம்
 
மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி அரங்கில் சண்முகவடிவு அம்மாள் வீணைக் கச்சேரி செய்து கொண்டிருந்தார். வாசிப்பை திடீர் என நிறுத்திவிட்டு அருகில் இருந்த தனது மகள் 10 வயது சிறுமி சுப்புலட்சுமியை அழைத்தார் அம்மா சண்முகவடிவு ('குஞ்சம்மாள்' என்று அழைப்பார் அவர்) அருகில் மகளை அழைத்த அம்மா ''குஞ்சம்மாள் நீ பாடு'' என்று சொல்ல, உடனே சிறுமி குஞ்சம்மாள் மேடைக்கு விரைந்து வந்து ஹிந்துஸ்தானி மெட்டில் அமைந்திருந்த 'ஆனந்த ஜா' என்னும் மராட்டிப் பாடலைச் சிறிதும் அச்சமின்றிப் பாடி வந்திருந்தோரின் பாராட்டைப் பெற்றார். இதுதான் இவரின் முதல் இசைக்கச்சேரி. அன்று எம்.எஸ்.ஸின் அரங்கேற்றம் நடைபெற்றபோது அப்பள்ளியில் அப்போது ஆசிரியராக பணிபுரிந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் இளைய சகோதரர் ஸ்ரீனிவாசனும் அங்கிருந்தார்.

இசை ஆசிரியர்கள்

அம்மாவைத் தொடர்ந்து சேத்தூர் சுந்தரேச பட்டர் என்பவரிடம் பல வருடங்கள் இசை பயின்றார் எம்.எஸ். திருமணத்திற்குப் பிறகு செம்மங்குடி சீனிவாச அய்யர். எம்.எஸ்.ஸின் பிரதான குருவாக திகழ்ந்தார். கடையநல்லூர் வெங்கட்ராமன் அவரது கடைசி குரு. அன்னமாச்சரியா கீர்த்தனங்களை டி. பசுபதி, நேதநூரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் கற்றுக் கொண்டார். தோடி ராக ஆலாபனை மட்டும் டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையைக் கேட்டுக் கற்றுக் கொண்டார். அதுபோல் முத்துசாமி தீட்சதரின் கீர்த்தனைகளை உச்சநீதிமன்ற நீதிபதி டி.எல். வெங்கட்ராம ஐயரிடம் கற்றுக் கொண்டார். பாபநாசம் சிவனும், மைசூர் வாசுதேவாச்சாரும் தாங்கள் இயற்றிய பாடல்களைத் தாங்களே எம்.எஸ்.ஸுக்கு கற்றுக் கொடுத்தனர்.
 

வெள்ளித் திரைத் தாரகை

இயக்குநர் கே. சுப்பிரமணியம் (பிரபல நாட்டியமணி பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) அவர்களின் 'சேவா சதனம்' என்னும் திரைப்படத்தில் முதன்முதலில் பாடி நடித்தார் எம்.எஸ். 1938ல் இப்படம் வெளியானது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு 'சகுந்தலை' என்னும் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். மிகப்பெரிய வெற்றிப் படமான இதை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கினார்.

 
கல்கி வார இதழ் தொடங்கப்பட்டது எப்படி?

1941ஆம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டினார்கள். ஆனால் ஆண் வேடத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டார்.
அப்போது கல்கியும் ஆனந்தவிகடனில் இருந்து வெளியேறி இருந்தார். கல்கியும், சதாசிவமும் சேர்ந்து சொந்தப் பத்திரிக்கை ஆரம்பிக்க விருப்பம் கொண்டனர். ஆனால் கைவசம் பணம் இல்லை. ஆதலால் சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடித்தார்.அந்த ஊதியத்தில்தான் கல்கி வார இதழ் தொடங்கப் பட்டது. சாவித்திரி படத்தில் "மனமே கணமும் மறவாதே" "ஜகதீசன் மலர்ப் பதமே" மங்களமும் பெறுவாய்" போன்ற பல பாடல்கள் புகழ் பெற்றவை.


1941ல் வெளியான 'சாவித்திரி' என்கிற படத்தில் எம்.எஸ். நாரதராக நடித்ததும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்பு 1945ஆம் ஆண்டில் தீபாவளியன்று வெளியானது 'மீரா'. மீரா படத்தையும் சகுந்தலை படத்தைத் தயாரித்த நிறுவனமே தயாரித்தது. இப்படத்தில் எம்.எஸ். பாடிய அனைத்துப் பாடல்களும் பெரிய வெற்றி பெற்றன. 'காற்றினிலே வரும் கீதம்...' கேட்டவர்களை உருக வைத்தது. படத்திற்கான வசனத்தை எழுதியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியும், பாடல்களைப் பாபநாசம் சிவனும் எழுதியிருக்கிறார். மீராதான் எம்.எஸ். நடித்த கடைசிப்படம்.
"பக்த மீரா" இந்தி மொழி  படத்தை பார்த்த  ஜவஹர்லால் நேரு எம்.எஸ்.சுப்புலட்சுமியை பார்த்து "இசையின் ராணிக்கு முன்பு நான் சாதாரண பிரதமர்தானே"என்று கூறியது இசை ராணிக்கு கிடைத்த புகழ் மகுடம் எனலாம்.


திருமணம்

 

'சேவா சதனம்' படப்பிடிப்பு கிண்டியில் ஒரு ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு அடிக்கடி வருவார் டி.எஸ். சதாசிவம்.   எம்.எஸ்.- சதாசிவம் சந்திப்பு இங்கே தொடங்கி, திருமணத்தில் முடிந்தது. 1940ல் சென்னையிலுள்ள திருநீர்மலை கோயிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

கல்கியின் விமர்சனம்

அக்காலத்தில் ஒரு திரைப்படத்தைப் பற்றி கல்கி அவர்கள் பாராட்டி விமர்சனம் எழுதினால் அந்தப் படம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். அவரது எழுத்துக்களுக்கு மகத்தான சக்தி இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் சத்தியாகிரகம் செய்து கல்கி மாயவரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனந்தவிகடன் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக அப்பேது கல்கி பணியாற்றி வந்தார். மாயவரம் சிறையிலிருந்த ஜாமீனில் வெளிவந்த கல்கியை அழைத்துச் சென்று 'சகுந்தலை' படத்தைப் பார்க்க சதாசிவம் ஏற்பாடு செய்தார். அந்தப் படத்திற்கான விமர்சனத்தைக் கல்கி எழுதினார். அது எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் ஒரு படிக்கல்லாக அமைந்தது முக்கியமானது.

தமிழ் இசைவளர்ச்சியில் எம்.எஸ்.ஸின் பங்கு

 

ராஜாஜி, டி.கே. சிதம்பரநாத முதலியார், ராஜா சர். அண்ணாமலை செட்டியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர். கே. சண்முகம் செட்டியார் போன்றோரால் தொடங்கப்பட்ட தமிழ் இசை இயக்கத்திற்குப் பக்கபலமாக நின்றவர்கள் சுப்புலட்சுமி - சதாசிவம் தம்பதியினர்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார், சுத்தானந்த பாரதியார், வள்ளலார், ராமலிங்க அடிகளார், பாபநாசம் சிவன் போன்ற எண்ணற்ற அருளாளர்களின் தமிழ்ப் பாடல்களை மேடைதோறும் பாடி, ரசிகர்கள் மனதில் பதியவைத்த பெருமை எம்.எஸ். சுப்புலட்சுமியைச் சாரும்.
சென்னை தமிழ் இசைச் சங்கம், எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு 'இசைப் பேரறிஞர்' பட்டம் சூட்டி கெளரவித்தது. இவர் பாடிப் பிரபலமடைந்த தமிழ்ப் பாடல்களுள் 'வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்', 'குறையொன்றுமில்லை', 'நீ இறங்கா எனில் புகலேது', 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா', 'வாழிய செந்தமிழ்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ஐக்கிய நாடுகளில் பாடிய குயில்

 

 

 

 

 

1966ஆம் ஆண்டு அக்டோ பர் 23ம் தேதி ஐ.நா. சபையில் எம்.எஸ் பாடினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலக அமைதியை வலியுறுத்தி மூதறிஞர் ராஜாஜி எழுதிய 'மே தி லார்ட் பர்கிவ் அவர்சின்ஸ்' என்னும் ஆங்கிலப் பாடலை எம்.எஸ். சுப்புலட்சுமி ஐ.நா. சபையில் பாடினார். இப்பாடலுக்கு ஹாண்டல் மேனுபல் இசையமைத்துள்ளார்.
காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஐ.நா. நிகழ்ச்சிக்காகப் பிரத்யேகமாக இயற்றிய 'மைத்ரீம் பஜத' என்ற உலக நன்மைக்கான பிரார்த்தனை ஸ்லோகத்தையும் எம்.எஸ். பாடினார். அந்நிகழ்ச்சிக்கு வி.வி. சுப்ரமணியம் வயலின், டி.கே. மூர்த்தி மிருதங்கம், டி.எம். வினாயகராம் கடம் வாசித்தனர்.
மகாத்மா காந்தி முதல் அப்துல் கலாம் வரை அத்தனை தேசத்தலைவர்களும் எம்.எஸ். அவர்களின் ரசிகர்கள்.
மகாத்மா காந்தியின் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு பலமுறை பஜனைப் பாடல்களை எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியுள்ளார். இன்றைக்கும் அகில இந்திய வானொலியில் காந்தி அஞ்சலிக்கு முன்னால் ஒலிக்கும் 'வைஷ்ணவ ஜனதே' மற்றும் 'ரகுபதி ராகவ ராஜாராம்' போன்ற மகாத்மா காந்திக்குப் பிடித்த பாடல்கள் எம்.எஸ். அவர்களால் பாடப்பட்டவையே.

சுப்ரபாதம்

வேங்கடேச சுப்ரபாதம் திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும் போது பாடப்படுகிறது. இறைவனைத் துயில் எழுப்பும் இந்த தெய்வீகப் பாடலை 'பிரதிவாதி பயங்கரம்' அண்ணங்கராச்சாரியார் என்னும் வைணவப் பெரியவரின் குரலில்தான் திருப்பதி கோயிலில் ஒலிபரப்பி வந்தனர்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய வேங்கடேச சுப்ரபாதம், ஆதிசங்கரரின் பஜகோவிந்தம், முத்துசாமி தீட்சதரின் 'ரங்கபுர விஹாரா' என்னும் கீர்த்தனை ஆகியவற்றை எச்.எம்.வி. நிறுவனம் இசைத்தட்டாக வெளியிட்ட போது அது உலக அளவில் பிரபலமாயிற்று.
முதலில் எம்.எஸ்.ஸின் சுப்ரபாதத்தை அங்கீகரிக்காமல் இருந்த திருப்பதி தேவஸ்தானம், 1975லிருந்து இதனை ஒலிபரப்ப ஆரம்பித்தது.
 

கணவரின் மறைவு

1997ம் ஆண்டு நவம்பர் மாதம் சதாசிவம் மரணம் அடைந்தார். அதன்பிறகு எம்.எஸ். கச்சேரிகள் செய்வதை நிறுத்திக்கொண்டார்.
1997ம் ஆண்டு ஜுன் மாதம் சென்னை மியூசிக் அகாதெமியில் எம்.எஸ். பாடினார். அதுதான் அவர் கடைசியாகப் பாடிய கச்சேரி!

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெற்ற விருதுகள் 

பத்ம பூசன் - 1954
சங்கீத நாடக அகாதமி - 1956
சங்கீத கலாநிதி - 1968
இசை பேரறிஞர் - 1970
மக்சேசே பரிசு - 1974
பத்ம விபூசண் - 1975
சங்கீத கலாசிகாமணி - 1975
காளிதாஸ் சம்மன் - 1988- 1989
இந்திராகாந்தி விருது - 1990
பாரத ரத்னா – 1998


பாரத மாதா

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலும்,இனிய இசையும், இந்த பார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் நிலைத்து நிற்கும் என்பதில் துளியும் ஐயமில்லை!
இந்திய மொழிகள் அனைத்திலும் இவர் பாடியுள்ளார் என்பதும் ஒரு சரித்திரம்.
"செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்று  "பார் போற்றும் பாரதி »பாரத மாதாவிற்குப் பாடினானே! அந்த வரிகள் யாவும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவுக்கும் பொருந்தும் அல்லவா ?
கலாச்சாரத்தை கட்டிக் காக்கும் நமது நாட்டின் நான்காவது தூண் " தி இந்து"தமிழ் நாளிதழின் பிறந்த நாளும் , இசை வாணி எம்.எஸ்.சுப்புலட்சுமியோடு இணைந்தே வருவது இரட்டிப்பு மகிழ்ச்சி.


தான் வாழ்ந்த 88 ஆண்டு கால வாழ்வில் 80 ஆண்டுகள் இசை சாதனையை செய்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் என்றால் அது மிகையாகாது.

குறை ஒன்றும் அறியாது மறை மூர்த்தி  மாதவனின் திருப் பாதத்தை அவர்  அடைந்தாலும் ,அவரது புகழ் "காற்றினிலே வரும் கீதமாக  என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும் " சுப்ர பாதம்" வடிவில்.

புதுவை வேலு



நன்றி:-harikesanallur venkatraaman/kedisri/thendral/the-hindu

Aucun commentaire:

Enregistrer un commentaire