நெஞ்சம் மறப்பதில்லை
கவிஞர் கா.மு.ஷெரிப் நூற்றாண்டு
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி சேதி தெரியுமா?, வாழ்ந்தாலும்
ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா, பணம் பந்தியிலே குணம் குப்பையிலே…, வானில் முழுமதியைக் கண்டேன்… வனத்திலொரு பெண்ணைக் கண்டேன், நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே, ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல்
மாறிப்போகுமா?, அன்னையைப் போல்
ஒரு தெய்வமில்லை, பொன்னான வாழ்வு
மண்ணாகிப் போமா, உலவும் தென்றல்
காற்றினிலே, போன்ற பல
பாடல்கள் இன்னும் ரசிகர்களின் இதயங்களை விட்டு நீங்கவில்லை.
இத்தகைய இனிய
பாடல்களை
படைத்த படைப்பாளி
யார் என்று உங்களுக்குத் தெரியுமா?
நூறு ஆண்டுகள்
கடந்தாலும் இன்றும் நம் நெஞ்சங்களில் குடியிருக்கும் இனிய கவிஞர்
கா.மு.ஷெரிப் அவர்கள்தான்.
மதத்திற்கு
அப்பாற்பட்ட மாபெரும் கவிஞர் அவர். அவரது பண்பையும், படைப்புகளையும், பாடல்களையும் நம் நெஞ்சம்
மறப்பதில்லை!
கவி. கா.மு. ஷெரிப்.
இந்த வார்த்தை தமிழ் இலக்கிய உலகின் கவித்துவம் பொங்கும் கல்வெட்டு வார்த்தை.
கவி. கா.மு. ஷெரிப், உன்னதங்கள் நிறைந்த கவிஞர்.
ஆன்மிக சிகரங்களில் வாழ்ந்தவர்.
ஒழுக்கத்தின் வடிவாகத் திகழ்ந்தவர்.
தனக்குள் வற்றாத கவிதைச் சுனையைக் கொண்டிருந்தவர்.
பண்பாளர். தாயுள்ளத்தோடு படைப்பாளிகளைப் பாராட்டும் பேராண்மை கொண்டவர்.
"அன்னையைப் போலொரு தெய்வமில்லை- அவள்
அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை.'
"பாட்டும் நானே பாவமும் நானே'
என்பது போன்ற காலத்தால் அழிக்கமுடியாத அரிய பல திரைப்படப் பாடல்களை எழுதி காற்றையும் மணக்கவைத்தவர்.
சீறாப்புராணத்தின் நயங்களை எடுத்தியம்பிய காவியச் செல்வர்.
இத்தகைய கவி.காமு. ஷெரிப் இன்று நம்மிடையே இல்லை
.
எனினும் கவிதையாக, பாடல்களாக, பண்பாட்டு நெறிகளாக, அருளார்ந்த நினைவுகளாக நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
எனினும் கவிதையாக, பாடல்களாக, பண்பாட்டு நெறிகளாக, அருளார்ந்த நினைவுகளாக நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
“ஷெரீப்
பல நற்பண்புகளின் உறைவிடமாய் இருந்தார். திரையுலகத் தொடர்பிருந்தும் அதன்
சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத உயர்பண்பு கவிஞர் கா.மு. ஷெரீப்பிடம் இருந்தது. ஒரு
கவிஞன் வறுமையிலும் செம்மையாக எப்படி வாழ்வதென்பதை அவரிடமிருந்து நான் பயின்றேன்.
கவிஞர் ஷெரீப் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் தீவிரமான சைவர். அதுகுறித்து அவரை
நாங்கள் பரிகாசம் செய்வதுண்டு.
கள் வியாபாரம்
செய்பவன் கள் அருந்த மாட்டான். அதுபோல் கசாப்பு வியாபாரம் செய்பவன் கறி சாப்பிட மாட்டானா?
கவிஞர் ஷெரீப் கறி
வியாபாரம் செய்பவராக இருந்தாலும் இருப்பாரே ஒழிய புலால் சாப்பிடமாட்டார். ஷெரீப்
புகை பிடிப்பதில்லை. நான் அவர் எதிரில் ஒரு மரியாதைப் பண்பு கருதிப் புகை
பிடிக்காமல் இருக்கும் பழக்கத்தை மேற்கொண்டேன்” என்று ஷெரீப்பின் நற்பண்புகளைப் பட்டியலிடுகிறார்
எழுத்தாளர் ஜெயகாந்தன்.
பன்முகக்
கலைஞன்
கவி கா.மு. ஷெரீப்
கவிஞர், எழுத்தாளர்,
பத்திரிகையாளர்,
பதிப்பக உரிமையாளர்,
அரசியல்வாதி, ஆன்மிகவாதி எனப் பன்முகத் தன்மை
கொண்டவர்.
11.08.1914 அன்று
கீழத் தஞ்சை மாவட்டம் அபிவிருத்தீஸ்வரம் என்ற கிராமத்தில், காதர்ஷா இராவுத்தர்-பாத்துமா அம்மா
தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ஷெரீப். அவர் முறையாகப் பள்ளிக்கூடம் சென்று
பயின்றவரல்ல. 5 வயது முதல் 14 வயதுவரை சொந்தமாகவே ஆசிரியர் ஒருவரிடம் தமிழ்
கற்றார். தந்தையாரின் தூண்டுதல் காரணமாகத் தமிழ் இலக்கணத்தையும் இலக்கியங்களையும்
கற்றார். இளமையிலேயே அவர் கவிதை இயற்றும் திறன் பெற்றிருந்தார்.
அவரது முதல் கவிதை
1933-ம் ஆண்டு பெரியாரின் குடியரசு நாளிதழில் வெளிவந்தது. அக்கவிதை பெரியாரைப்
போற்றி எழுதப்பட்ட கவிதை. ஆரம்ப காலத்தில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது
சிறுகதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளன. காதல் வேண்டாம், காதலும் கடமையும், கனகாம்பரம் ஆகியன இவரது சிறுகதைத்
தொகுப்புகளாகும். நல்ல மனைவி, விதியை
வெல்வோம், தஞ்சை
இளவரசி ஆகிய புதினங்களையும் எழுதியுள்ளார்.
எழுத்து
- பேச்சு - அரசியல்
‘சிவாஜி’
என்ற இதழின்
துணையாசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றிய இவர், 1948-ல் ‘ஒளி’ என்ற மாத இதழைத் தொடங்கினார்.
1952-க்கும் 1969-க்கும் இடைப்பட்ட காலத்தில் சாட்டை, தமிழ் முழக்கம் ஆகிய இதழ்களை
வெற்றிகரமாக நடத்தினார். ம.பொ.சி.யின் ‘செங்கோல்’ வார
இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதியுள்ளார்.
சென்னை எல்லீஸ்
சாலையை ஒட்டிய பச்சையப்ப செட்டித் தெருவில் இருந்த தனது இல்லத்தில் ‘சீதக்காதி பதிப்பகம்’ என்ற புகழ்பெற்ற நூல் வெளியீட்டகத்தைத்
தொடங்கினார். அதற்கு முன்னர் தமிழ் முழக்கம் என்ற பதிப்பகத்தை நடத்தினார். அதன்
மூலம் தான் எழுதிய வள்ளல் சீதக்காதி வரலாறு, ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ்,
சீறாப்புராணச்
சொற்பொழிவு, இறையருள்
வேட்டல் ஆகிய நூல்களை வெளியிட்டார்.
தனது வாலிபப்
பருவத்தில் காங்கிரஸின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர் ‘1942 வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டார். பின்னர்
ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் சேர்ந்தார். அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும்
பொறுப்பு வகித்தார். தமிழக எல்லைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகிய
போராட்டங்களில் கலந்துகொண்டார். பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர்
கருணாநிதி ஆகிய திராவிட இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிய உறவுகொண்டிருந்தார்.
1970-ம் ஆண்டுக்குப்
பின் ஆன்மிகப் பாதைக்குத் திரும்பி சீறாப்புராணத் தொடர் சொற்பொழிவுகளைப் பாடகர்
குமரி அபூபக்கருடன் இணைந்து தமிழகமெங்கும் நடத்தினார். சீறாப்புராணத்திற்கும்
சிலப்பதிகாரத்திற்கும் உரைகள் எழுதினார்.
இறைவனுக்காக வாழ்வது
எப்படி, இஸ்லாமும்
ஜீவகாருண்யமும், இஸ்லாம்
இந்து மதத்திற்கு விரோதமானதா?, கிழக்கிலுள்ள
பிறைக்கொடி நாடுகள், மகளே
கேள், கண்ணகி, விபீஷணன் வெளியேற்றம் ஆகியன இவர்
எழுதியுள்ள பிற நூல்கள். அமுதக் கலசம், ஆன்ம கீதம், ஆயிஷா
நாச்சியார் பிள்ளைத்தமிழ், இறையருள்
வேட்டல், ஒளி,
நபியே எங்கள் நாயகமே,
மச்சகந்தி, பல்கீஸ் நாச்சியார் காவியம், மச்சகந்தி, களப்பாட்டு, நீங்களும் பாடலாம் இசைப்பாட்டு ஆகியன
இவரது கவிதைத் தொகுதிகள்.
திரைத்
தமிழில் சாதனை
கவி கா.மு.ஷெரீப்
தமிழக மக்களிடையே மிகவும் புகழ் பெற்றதற்குக் காரணம் அவரது திரைப்படப் பாடல்களே
என்றால் அது மிகையில்லை. நாநூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை அவர்
இயற்றியுள்ளார். அவரது முதல் பாடல் இடம்பெற்ற படம் ‘பொன்முடி’. காலத்தால் நிலைத்து நிற்கும்
கா.மு.ஷெரிப்பின் பாடல்களை இங்கே பட்டியலிட இடம்போதாது.
“ஏரிக்கரையின்
மேலே போறவளே பெண் மயிலே... என்ற முதலாளி திரைப்படத்தில் வரும் பாடலை
கிராமப்புறத்திலே உள்ளவர்களெல்லாம் பாடக்கேட்டு அவர்கள் அந்தப் பாடலிலே ஒரு
மகிழ்ச்சியை உருவாக்கிக்கொண்டு நடப்பதைக் கண்டு நான் பூரிப்படைகிறேன்.
இலக்கியத்துக்கு நிகராகத் திரைப்படப் பாடல்களும்கூட நிலைத்து நிற்கமுடியும்
என்பதற்கு அண்ணன் கா.மு.ஷெரீப் எழுதிய பல பாடல்களை எடுத்துக்காட்டலாம்.” என்று புகழாரம் சூட்டினார்
மு.கருணாநிதி.
இலங்கை யாழ்ப்பாணம்
மாவட்டம் குன்னாகம் என்ற ஊரிலுள்ள தேநீர்க் கடையொன்றில் தேநீர்
அருந்திக்கொண்டிருந்தான் ஒரு இளைஞன். அப்போது அங்கிருந்த வானொலிப் பெட்டியில் ‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை,
அவர் அடிதொழ
மறுப்பவர் மனிதரில்லை’ என்ற
கவியின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதைக் கேட்ட அந்த இளைஞன் உணர்ச்சி
வயப்பட்டு “கெட்டவருடன்
சேர்ந்து பெற்ற தாயின் மனதை நோகடித்தவன் நான்; நன்றி கெட்டவன்” என்று குமுறி அழுதிருக்கிறார்.
“இப்படி
திடீரென்று தேநீர்க் கடையில்தான் உன் தவறு புரிந்ததா? “ என அவனிடம் கடைக்காரர் கேட்டபோது அதற்கு
அவன், “ஆமாம், இந்தப் பாடல் என் மனத்தை மாற்றிவிட்டது.
இனி என் தாயை உயிரினும் மேலாகக் கொண்டாடிக் காப்பாற்றுவேன். உங்களுக்கு என் நன்றி”
என்று கூற, அதற்கு அந்தக் கடைக்காரர், “உன் நன்றிக்கு உரியவர் தமிழ் முழக்கம்
கா. மு. ஷெரிப். அவர்தான் இந்தப் பாடலை எழுதியவர்” என்றாராம்.
சிலோன் விஜயேந்திரன்
எழுதியுள்ள ‘அறுபதாண்டு
காலத் திரைப்பாடல்கள்’ என்ற
நூலில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.
“கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி
பத்தியம் இருக்கணும்; ரசிகனை
அவன் புள்ள மாதிரி நேசிச்சு எதைக் கொடுக்கணும், எதைக் கொடுக்கக் கூடாதுங்கிற
பொறுப்புணர்வோட எழுதணும்” என்றார்
அவர். அவர் சொன்னதற்கேற்ப இந்தச் சம்பவமும் நடந்திருக்கிறது. இந்தப் பாடல் ‘அன்னையின் ஆணை’ படத்தில் இடம் பெற்றது.
பாடலாசிரியராக புகழ்பெற்ற
அதேசமயம் அவர் பெண் தெய்வம், புது
யுகம் படங்களுக்கான வசனத்தையும் எழுதினார். கா.மு. ஷெரீப் தனக்கென ஒரு கொள்கை
வகுத்திருந்தார். “அழைத்தால்
வருவோம், வாய்ப்பு
கொடுத்தால் பாடுவோம், யாரையும்
சார்ந்து வாழ மாட்டோம், யாரிடமும்
எதையும் கேட்க மாட்டோம்” என்ற
கொள்கைப்படியே வாழ்ந்த அவர் 1994-ஆம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி காலமானார்.
தமிழ்த்
திரையிசையும், தமிழ்கூறு
நல்லுலகும் கவி கா.மு.வை என்றென்றும் மறக்காது. வாழ்க அவரது புகழ்
புதுவை வேலு
நன்றி:சேயன்
இப்ராஹீம் (தி இந்து)
Aucun commentaire:
Enregistrer un commentaire