mercredi 30 décembre 2015

"நித்திரையில் நீல நிறக் கண்ணன்" -ஆண்டாள் பாசுரம் :15

திருப்பாவை


பூவில்லா வழிபாடு முழுமையில்லை.
 ஆண்டாளின் பாசுரங்களில் இடம் பெற்ற மலர்கள் பதினான்கு.
முல்லை, பாரிஜாதம், ஞாழல், ஆம்பல், புன்னை, தோன்றி, கொன்றை, செருத்தி, பூவைப்பூ, குருக்கத்தி, முருகம்பூ, சூதகம், கருவிளை, கருங்குவளை ஆகியனவே அவைகள்!
கார்க்கோடப்பூ எனவும் சங்குப்பூ எனவும் அழைக்கப்படும் நீலநிற காக்கண மலர்கள் (கருவிளை) ஆண்டாளின் பல்வேறு பாசுரங்களில் இடம் பெற்றுள்ளன.

வாலைப் பருவம்.

பன்னிரண்டு முதல் பதினைந்து வயது வரையிலான பெண்ணின் பருவத்தை வாலை' என்பர்.
பதினாறுக்கும் முப்பதுக்கும் இடையிலான பருவத்தைதருணி' என்பர்.
வாலைக்குமரியாம் ஆண்டாள் பாடிய 30 பாசுரங்கள் திருப்பாவை' எனவும்,
ஏனைய 143 பாசுரங்கள் நாச்சியார் திருமொழி' எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்டாள் திருமண வினைகள் அனைத்தையும் முறையே கண்டதாக பத்துப் பாடல்களில் பாடியுள்ளார்.
அவற்றுள், ஆண்டாள் அரங்கனோடு மணம் முடிக்கும் நிகழ்வை கனவாகவும் காண்கிறார். அதை பாடலாக்கி அழகுத் தமிழில் அள்ளித் தருகிறார்.



"
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்"


திருப்பாவை பாசுரம் 15


எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக !

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.


பொருள்:
'ஏலே' என் தோழியே! இளமைக் கிளியே!
நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர்.
அப்போது அந்த தோழி, ""கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்!
இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.
உடனே தோழிகள், ""உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.
அப்போது அவள், ""சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை.
நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள்.
நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.
"அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும்.
உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள்.
அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள்.
"என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.தோழிகள் அவளிடம், ""நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.


விளக்கம்:
ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். பெண்களுக்கு பேசக்கற்றுத்தரவா வேண்டும்!

இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள். படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.


பகிர்வு:
புதுவை வேலு

12 commentaires:

  1. ஆண்டாள் வந்து நேரில் எழுப்பும் போதும் - தூக்கமா!..

    அழகிய விளக்கத்துடன் - இனிய பதிவு..

    RépondreSupprimer
    Réponses
    1. ஆண்டாள் அல்லவா கனவு காண்கிறார் அருளாளர் அய்யா!
      வருகை நலம் நன்றி!
      இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. அருமையான விளக்கம்,

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. திருப்பாவை பாசுரத்தில் மூழ்கி முத்தான கருத்தினை தந்தமைக்கு நன்றி சகோதரி!

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும்
      இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நட்புடன்,
      புதுவை வேலு
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. திருப்பாவை விளக்கம் நன்று நண்பா

    RépondreSupprimer
    Réponses
    1. ஆண்டாள் பாசுரம் விளக்கம் குறித்த கருத்துக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. ஆண்டாள் பாசுரம் 15 க்கு தாங்கள் தந்துள்ள அருமையான விளக்கத்திருக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. பாசுரத்தின் அரிய சிறப்பினை அறிந்து சிறப்பித்து வருவதற்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வணக்கம்
    ஐயா
    அற்புதமான விளக்கம்பகிர்வுக்கு நன்றி த.ம 3
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி கவிஞரே, பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!
      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும்
      இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  7. நன்றி நண்பரே!
    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer