jeudi 24 décembre 2015

"சங்கத் தமிழ் மாலை முப்பது"





"திருப்பாவை' பாடல் - 9




ஆண்டாள் அருளிய பாசுரங்களை "திருப்பாவை' என்று  நாம் அழைக்கிறோம்.
ஆனால் ஆண்டாள் அதற்குச் சூட்டிய பெயர்
"சங்கத் தமிழ் மாலை முப்பது' என்பதாகும்.


அதைத்தவிர ஆண்டாள் "நாச்சியார் திருமொழி' என்ற பாடல்களின் தொகுப்பையும் அருளியுள்ளார்.
இது இன்றும் வைணவர்களின் திருமணத்தின்போது பாடப்படுகிறது என்றால்!
"நாச்சியார் திருமொழி"யின் சிறப்பைச் சொல்லவும் வேண்டுமோ?


மேலும்,  
இராமானுஜர் திருப்பாவையைப் பெரிதும் போற்றினார். அதனாலேயே அவர் "திருப்பாவை ஜீயர்' என்று இன்றும், அழைக்கப்படுகிறார்.




பாடல் - 9
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம்  தாள்திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ?  உன்மகள்தான்

ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்  பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன்  என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.



பொருள்:

பிரகாசமான நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய,  நறுமண திரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக.
எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு.
உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்!
அவள் பதிலே சொல்லவில்லையே ?
அவள் ஊமையா?  செவிடா? 
சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா?
அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? 
உடனே எழு.
எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், 
மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

விளக்கம்:

உலக மக்கள் மாடமாளிகை,  பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர்.
இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும்.
அந்த வைகுண்டத்தை அடைய,
பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.

"மாமாயன்  நாமம் பலவும் நவின்றேலோ"அதாவது, மாமாயன் மாதவன் வைகுந்தன் என்ற மூன்று நாமங்களை அனுஷ்டிப்பது,
பல (1008)  திருநாமங்களைப் பாடுவதற்கு நிகரானது என்ற செய்தியை ஆண்டாள் நமக்கருளுகிறாள்!
மேலும், அவன் மாமாயன்!! ஆயர்ப்பாடியில் கண்ணனாக இருந்தாலும்,
திருமகளின் கணவனான திருப்பாற்கடல் மாதவனும் அவனே !
பரமபதத்தில் வீற்றிருக்கும் வைகுந்தனும் அவனே!
ஆக, பூரண சரணாகதியைக்  கைக்கொண்டு நாம் அடைய வேண்டிய இடம் அந்த வைகுந்தமே!
அதனால் தான் "வைகுந்தனை" கடைசியாக வைத்தாள் ஆண்டாள்!








பகிர்வு:

புதுவை வேலு




6 commentaires:

  1. திருப்பாவையின் 9 ஆம் பாசுரத்தை படிக்கும் வாய்ப்பை நல்கியதற்கு நன்றி! திருப்பாவைக்கு ஆண்டாள் சூட்டிய பெயர் ‘சங்கத் தமிழ் மாலை முப்பது’ என்று இன்றுதான் அறிந்தேன். தகவலுக்கு நன்றி!

    RépondreSupprimer
  2. பால் சுரக்கும் பசுவின் மடியினைப் போல்
    பாசுரத்தின் திறம் அறிந்து கருத்தினை வடித்த
    அய்யா அவர்களுக்கு குழலின்னிசையின் நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  3. திருப்பாவை 9 ஆம் பாசுரம் அறிந்தேன் நண்பரே

    RépondreSupprimer
  4. குழலின்னிசையின் நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  5. இப்பொழுது தான் இந்த பாசுரத்தை படிக்கிறேன் நண்பரே.

    RépondreSupprimer
    Réponses
    1. ஆண்டாள் பாசுரம் அமுதாய் இனிக்கட்டும் நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer