dimanche 4 janvier 2015

"பாவையின் பக்தி பரவசம்"


திருப்பாவை ஆண்டாள் அருளியது 









தொடர்ச்சி:-


பாடல் 21

 

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்


பொருள்: 


கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக.
வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக!
உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போலநாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.


விளக்கம்: 

"மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால்நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா! என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள்.
ஆம்! 
ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை. பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாடலின் உட்கருத்து.
 

பாடல் 22

 

அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச் சிறிதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ எம்பாவாய்.

பொருள்: 

கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா? என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும்இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீதுகிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும்தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!


விளக்கம்:

இறைவனின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். சாபங்கள் கருகிப்போகும். எப்படி அவனது பார்வையை நம் மீது திருப்புவது. மிக எளிதாக ஆண்டாள் பாடிய திருப்பாவையின் பாடல்களையும் மார்கழியில் மட்டுமல்ல! எந்நாளும் பக்தியுடன் படித்தால் போதுமே! அதற்கு அவகாசமில்லையா? அவள் சொல்லியிருக்கிறாளே! இந்த பாவையில் கோவிந்தா, விக்ரமா போன்ற எளிய பதங்களை... அவற்றைச் சொன்னாலே போதுமே! அவனது பார்வை பட்டுவிடும்.













பாடல் 23

 

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


பொருள்:


மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்துபெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.


விளக்கம்: 


 எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு...என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண் கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு  எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.


பாடல் 24

 

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.



பொருள்:



மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

 
விளக்கம்:
 
இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை "போற்றிப் பாசுரம் என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.
 

பாடல் 25

 

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.



பொருள்:


தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.


விளக்கம்: 


பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. "உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் "தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக
அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்தவரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.









பாடல் 26


 

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே !
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.


பொருள்:


பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.


விளக்கம்: 


பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குருஷேத்திரக் களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.






புதுவை வேலு

நன்றி: தினமலர்

12 commentaires:

  1. நாங்கள் வா! என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள்-----பக்தி மணம் கமழ்கிறது ஐயா.....

    RépondreSupprimer
    Réponses
    1. கருத்து மணம் கமழும் வண்ணம் வருகை தந்து கருத்திட்டு சென்ற தோழரருக்கு மிக்க நன்றி!
      தோழமையுடன்,
      புதுவைவேலு

      Supprimer
  2. ஆயர்குலப் பெண்கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள் நல்ல விளக்கம் புதுவை வேலு அவர்களே, நன்றி.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. பாவையின் பக்தி பரவசம் படித்து இன்புற்றமைக்கும் ,நல்ல கருத்தினை வழங்கியமைக்காகவும், நண்பர் சத்தியாவே! உமக்கு குழலின்னிசை நன்றியினை நவில்கின்றது.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Ce commentaire a été supprimé par l'auteur.

    RépondreSupprimer
  4. பாவையின் பக்திப் பரவசத்தில் நாங்களும் எமை மறந்தோம்! ‘போற்றிப் பாசுரம்’ பற்றி இன்றுதான் அறிந்தேன். தகவலுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. பக்தி பதிவுகள் குறித்தும் கருத்தினை நல்கும் தங்களது அன்பும் ஆதரவும் மிகவும் போற்றுதலுக்குரியது அய்யா!
      அச்சம் கொண்டு கருத்தினை மிச்சம் கொள்வோர் இவ்வலைப் பூ உலகில் அதிகம் அய்யா!
      வருக! தொடர்க!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. "எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு...என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும்." உண்மையான அருமையான விளக்கம். "பாவையின் பக்தி பரவசத்தை படித்து நாங்களும் பக்தி பரவசம் அடைந்தோம். "போற்றிப் பாசுரத்தின்" முக்கியத்துவத்தை அறிந்தேன். நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. "போற்றிப் பாசுரத்தின்" முக்கியத்துவத்தை அறிந்தீர்!
      அகம் மகிழ அன்புடன் வாழி சகோதரி!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. பக்தி மணம் கமழ அருமையான பதிவுகளாக இட்டு வலைத்தளமே கமழ்கின்றது! ஐயா!

    RépondreSupprimer
    Réponses
    1. அய்யா!
      உமக்கு குழலின்னிசை நன்றியினை நவில்கின்றது.
      வருக! தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. வருக!!!! அடுத்த பதிவை தொடருக..... நட்புடன் வலிப்போக்கன்.

    RépondreSupprimer