lundi 28 décembre 2015

"அகம் அருளிய ஆண்டாள்"


யது குலத்தைப் பெருமை கொள்ளச் செய்ய பெருமாள் கண்ணனாக அவதரித்ததைப் போல் சம்சாரம் எனும் சாகரத்தில் மூழ்கியுள்ள நம்மைக் கைதூக்கிவிட ஆண்டாள் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியையும் அருளிச் செய்தாள்.

30 பாசுரங்களைக் கொண்ட திருப்பாவை மார்கழி மாதத்தில் பிரபலமாகப் பாடப்படுகிறது. "கோதையின் உபநிடதம்" என்றும்  திருப்பாவைபெயர் பெற்றது.


கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும்

அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு 


என்று சொல்லக்கூடிய அளவுக்கு திருப்பாவையின் சிறப்பு, முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆறாம் திருமொழியான "வாரணமாயிரம்", என்று தொடங்கும் பதிகத்தில், மாயவன் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கண்ட கனவைத் தோழிக்கு உரைக்கிறாள். இன்றளவும் பல திருமணங்களில் இப்பாசுரங்கள் சீர்பாடல் என்ற நிகழ்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது.


வாரணம் ஆயிரம் சூழ வலம்செய்து

நாரன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்


வீதிகள் முழுக்க தோரணங்கள் கட்டப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது.

ஆணழகனான நாரண நம்பி ஆயிரம் யானைகள் புடைசூழ கம்பீரமாக நகர் வலம்

வருகிறான் என்று ஒவ்வொரு காட்சியாக விவரிக்கிறாள்.

ஒவ்வொரு பாசுரத்திலும்,

திருமண நிகழ்ச்சிகளை விவரித்துப் பின் அத்தனையும் கனவு என்று கூறுகிறாள்.


‘வேதமனைத்துக்கும் வித்து’ என்று ஆன்றோரால் போற்றப்படும் திருப்பாவையில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு சொல், ‘பறை’ என்பதாகும்.




இனி, பறை என்று ஆண்டாள் கூறும் செய்திகளைப் பார்ப்போம்.


பாசுரங்களில் மொத்தம் 10 இடங்களில் ஆண்டாள் பறை என்று குறிப்பிடுகிறாள்.
ஆண்டாள் கூறும் பறை

1. பறை தருவான்  (பாசுரம் – 1)
2. பாடிப்பறை கொண்டு  (பாசுரம்- 8 )
3. போற்றப் பறை தரும்  – (பாசுரம்- 10)
4. அறை பறை –  (பாசுரம் -16)
5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
7. உன்றன்னை பாடிப்  பறைகொண்டு – (பாசுரம் -27)
8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
9. இற்றைப்  பறை கொள்வான் –  (பாசுரம் -29)
10.அங்கப் பறை கொண்ட ஆற்றை  – (பாசுரம் -30)

அவற்றுள், 26 -ஆம் பாசுரத்தில் வரும் சாலப் பெரும் பறை, 

 சல்லிப் பறையை ஒத்திருக்கிறது.

 சல்லிப் பறை என்பது, விழாக்களில் கொட்டப்படுவது. சுற்றுப்புறத்து ஓசைகளையும் மீறி ஓங்கி ஒலிக்க வேண்டிய பறை.

‘மாலே மணி வண்ணா’ எனத் தொடங்கும்  பாசுரத்தில்,

 ‘சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே’ என்று ஆண்டாள் கூறும் வர்ணனை இறைவன்  வரும் வீதி ஊர்வலம் போல உள்ளது.

ஞாலத்தை எல்லாம் நடுங்கச் செய்யும் வகையில்  பாஞ்சசன்னியம் என்னும் சங்கூதும் ஒலியோடு, பிற ஒலி முழக்கங்களும், பல்லாண்டு இசைத்த வண்ணம் செல்வதும், கோல விளக்கும், கொடியும், விதானமும் செல்லும் பாங்கினையும் உரைத்திருப்பது, மார்கழி மாதத்து வைகுண்ட ஏகாதசி அன்று திருமால் வீதி வலம் வரும் கருட சேவை போன்று இருக்கிறது.


வீதி ஊர்வலத்தில் கொட்டப்படும் சல்லிப் பறையை ஆண்டாள் சாலப் பெரும் பறை 
என்று கூறியிருக்கலாம்.


 திருப்பாவை பாசுரம் -13



புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

 

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே

பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.







பொருள்:


பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து
அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும்,
அவதாரம் எடுத்த நாராயணனின், புகழைப் பாடியபடியே,
நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகிவிட்டது.
கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது.
வியாழன் மறைந்து விட்டது.
பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன.
தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே!
விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் !
உடல்நடுங்கும்படி,குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்?
அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே!
மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா?
எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா !





விளக்கம்:
"கள்ளம் தவிர்ந்து" என்கிறாள் ஆண்டாள்.
தூக்கம் ஒரு திருட்டுத்தனம்.
பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல!
நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்!
அதிலும்,  பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும்
நமக்கு நாமே செய்யும் திருட்டு தான்.
வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்? இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?

பகிர்வு:

புதுவை வேலு

15 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. விளக்கம் பாராட்டிய நலம் விரும்பி நண்பருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. ‘கள்ளம் தவிர்த்து’ என்பதற்கு தாங்கள் அளித்திருக்கும் விளக்கம் அருமை. அகம் அருளிய ஆண்டாளின் பாசுரங்களை ‘முக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன்’ படிக்கவேண்டும் என்பது சரியே!

    RépondreSupprimer
    Réponses
    1. பாசுரத்தின் சிறப்பினை பறைசாற்றியமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அருமையான விளக்கம். சிறப்பான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. விளக்கம் பாராட்டிய நலம் விரும்பி நண்பருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. பயணத்தில் இருந்ததால் தொடர முடியய்வில்லை...விளக்கம் அருமை படங்களுடன்....நன்றி ஐயா

    RépondreSupprimer
    Réponses
    1. வர வேண்டும் பதிவை படிக்க வேண்டும் என்பதுவே பெரு விருப்பம்.
      அலுவல் நம்மை அழைக்கும்போது வேறு என்ன செய்ய முடியும். குழலின்னிசையின்
      வளர்ச்சியில் தெரிவது தங்களைப் போன்றோரின் அன்பு உள்ளம் அல்லவா அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. கருத்திட்டால் ரோபோ இல்லை என்று வெரிஃபை பண்ணச் சொல்லுகின்றது. அப்படி பலதளங்களில் வருகின்றதுதான் ஆனால் தங்கள் தளத்தில் ஃப்ரென்ஞ்சில் வருவதால் படங்கள் சில காட்டி அதைத் தேர்ந்தெடுத்து டிக் செய்யச் சொல்லி வெரிஃபை பண்ணச் சொல்லுகின்றது சில சமயம் புரிவதில்லை...அதான்..

    RépondreSupprimer
  6. ஆஹா அருமையான விளக்கம். பறை குறித்து தாங்கள் குறிப்பிட்ட செய்திகள், புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. பாசுரத்தின் சிறப்பினை பறைசாற்றியமைக்கு நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. நிறைய விடயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி நண்பா.

    RépondreSupprimer
    Réponses
    1. பூங்கருத்தாய் புன்னகை தரும் கருத்தை பூத்தமைக்கு நன்றி நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. அழகான விளக்கம்.
    த ம 5

    RépondreSupprimer
  9. விளக்கம் பாராட்டிய நலம் விரும்பி நண்பருக்கு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer