dimanche 5 octobre 2014

அருட்பெருஞ்சோதி( வள்ளலார்)

அணையா சோதி

சிந்தனை செய்வாயடி மயிலே
சிந்தையில் இடம் தருவாயடி மயிலே
வந்தனம் புரிவாயடி மயிலே
வாழ்த்தி மகிழ்வாயடி மயிலே


ஒளிக்குள் கலந்தாரடி மயிலே
ஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே


ஜீவகாருண்யம் புரிந்தாரடி மயிலே
ஜீவநதியாய்த் தெரிந்தாரடி மயிலே
வாடிய பயிரால் வாடினாரடி மயிலே
வாழ்வித்து மகிழ்ந்தாரடி மயிலே


அருட்பெருஞ்சோதியாய் ஒளிர்ந்தாரடி மயிலே
தனிப் பெருங்கருணை புரிந்தாரடி மயிலே
ஆறுதிருமுறை அருளினாரடி மயிலே
அறம் என்னும் வரம் தந்தாரடி மயிலே


தைப்பூசம் ஒளி மாயர் மயிலே
வடலூர் வள்ளலாரடி மயிலே
அணையா சோதியில் கலந்தாரடி மயிலே
ஆதவனாய்த் தோன்றுவாரடி மயிலே

புதுவை வேலு
அருள்மிகு வள்ளலார்

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று பாடிய ஆன்மநேய அருளாளர், வடலூர் திருவருட்பிரகாச ராமலிங்க வள்ளலார் பிறந்த நாள் இன்று (05/10/1823)  அவரின் புகழின் சிறப்பினை  சிறப்புற சொல்வோம். சிந்தையால் வெல்வோம்!"அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி
தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி"

என்னும் மூலமந்திரத்தை உலகிற்கு உபதேசித்து சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பரப்பிய அருளாளர் வள்ளலார்

மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார்

இராமலிங்க அடிகள் வடலூர் வாழ் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும்.திருவருட்பா

 

(தெய்வமணி மாலை) 

 

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்!


பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்து யான் ஒழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!


மருவு பெண்ணாசை மறக்க வேண்டும்
உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்
மதி வேண்டும், நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்!


தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே!!

கொஞ்சும் சலங்கை என்னும் படத்தில் சாவித்திரி பாடும் பாடல் காட்சியொன்றில் இப்பாடல் இடம்பெறுகின்றது. பிலஹரி ராகத்தில்,  சூலமங்கலம் ராஜலட்சுமி குரலில் இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை

அமைத்துள்ளது சிறப்பம்சம்

இந்த பாடல் வள்ளலார் தந்தருளியது என்பது குறிப்பிடத் தக்கது.  
"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடிய வள்ளலார் இறைவழிபாடு வடமொழியில்தான் இருக்கவேண்டும் என்ற வைதீக நிலையை மாற்றித் தாய்மொழித் தமிழில் வழிபாடு என்னும் சீரிய கொள்கையை உருவாக்கியவர். வள்ளலார் இறைபக்தியை மட்டும் போதிக்கவில்லை.

இதயம் பக்குவநிலை பெறுவதற்காக போதனை செய்தார். பிற உயிர்களின் மேல் கருணை கொள்ளுதல். பிறர் பசி தீர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தினார். தனித்திரு. பசித்திரு. விழித்திரு என்ற தத்துவ உரைகளின் மூலம் தியானம். அறிதல், தேடல் ஆகியவற்றைக் கற்றுத் தந்தார்.

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டது. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன.
திருவருட்பா, வள்ளலார் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பு. வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு, தற்போது வரையில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இது 21 அடி நீளம், 2.5 அடி அகலம் மற்றும் ஆழம் கொண்டது.

இந்த அடுப்பை அணைக்கவே கூடாது என்பதற்காக, இங்கு தீப்பெட்டியே வாங்குவதில்லை. இரவு வேளையில் சமையல் செய்யாத வேளையிலும் கூட, நெருப்புஅணையாமல் இருக்க, பணியாளர் ஒருவர் விறகுகளை இடுவார்.  அன்னதானம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, ஏறக்குறைய 142 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்படுகிறது. உணவுதயாரிக்க அரிசி, உப்பு பக்தர்கள் மூலமாகவந்துவிடுகிறது. தினமும் காலை 6 மற்றும் 8 மணி, பகல் 12, மாலை 5 மற்றும் இரவு 8 மணி என ஐந்து முறை அன்னதானம் நடக்கிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம்நடக்கும்.
வள்ளலாரின் கையெழுத்து: சத்திய தருமச்சாலையிலுள்ள வள்ளலார் சன்னதியில், அவரது விக்ரகம் இருக்கிறது. கடுக்காய் மையில் அவர் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் புத்தகம், அவர் ஏற்றிய ஜோதி மற்றும் ஞான சிம்மாசனம் ஆகியவை இங்கு உள்ளன.

பசியாறும் பறவைகள்: மருதூரில் ராமலிங்க அடிகளார் பிறந்த வீட்டில், அவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை ஓவியங்களாக வைத்துள்ளனர். இம்மண்டபத்தில் நெற்கதிர்கள்,தானியங்களை கட்டி தொங்க விட்டிருக்கின்றனர். இங்கு வரும் பறவைகளும்கூட, பசியாற வேண்டுமென்பதற்காகவே இந்த ஏற்பாடு. சத்திய தருமச்சாலையில் சமைக்கப்படும் உணவு, முதலில் காகங்களுக்குவைக்கப்பட்ட பிறகே பக்தர்களுக்கு பரிமாறப்படும்.

ஆண்டுதோறும், தைப்பூச நன்னாளன்று வள்ளலார் அன்பர்கள், வடலூர் அருகே மேட்டுக்குப்பத்தில் லட்சக் கணக்கில் திரண்டு வள்ளலார் விழா கொண்டாடுகின்றனர். அன்று ஒருநாள் மட்டும் சத்தியஞான சபையில் ஏழு திரைகளை நீக்கி சோதி வழிபாடு நடத்தப்படுகிறது.


வள்ளலாரின் மாணவர் தொழூர் வேலாயுதம்,ஒளியான அருளைத் தரும் வள்ளல் என்ற பொருளில், "திருஅருள்பிரகாச வள்ளலார்' எனக் குறிப்பிட்டார். இதன் பிறகே இவருக்கு, "வள்ளலார்' என்ற பெயர் ஏற்பட்டது.


மனிதன் தினமும் ஏறக்குறைய 21 ஆயிரத்து 600 முறை சுவாசிப்பதன் அடிப்படையில் சத்திய ஞான சபையைச் சுற்றிலும் இதே எண்ணிக்கையில், கண்ணிகள் தொடுக்கப்பட்ட சங்கிலி கட்டப்பட்டுள்ளது. அனைத்து தீபங்களுக்கும், தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வள்ளலாரின் உண்மையான படம் எடுக்கப்பட்டதில்லை. ஜோதி தேகமான அவர் வெண்மையான வஸ்திரம் அணிந்திருந்ததை கருத்தில் கொண்டு,தற்போதிருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது

.

வள்ளலார் காட்டிய சன்மார்க்க நெறிகள்


கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதி வடிவினர்
சிறுதெய்வ வழிபாடுகளைத் தவிர்த்தல் வேண்டும், தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி செய்தலாகாது
பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல், அதுவே கடவுள் வழிபாடு
உலக அமைதிக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டைக் கடைப்பிடித்தல் வேண்டும்
மது மாமிசம் உண்ணலாகாது
எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி நடத்தல் வேண்டும்
சாதி, இனம், சமயம் முதலிய வேறுபாடுகளின்றி இருத்தல் வேண்டும்
எக்காரியத்திலும் பொது நோக்கம் வேண்டும்
இறந்தவர்களை எரிக்காது புதைத்தல் வேண்டும்.
 கருமாதி, திதிச் சடங்குகளைத் தவிர்த்தல் வேண்டும் என்பனவாம். 

ஐம்பது ஆண்டுகாலம் எறும்பு போல சுறுசுறுப்புடன் மானுட சேவையாற்றிய வள்ளலார், 1873, ஜனவரி 30-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, தைப்பூசத் திருநாளன்று, தான் நிறுவிய சத்தியஞான சபையில் ஏற்றிவைத்த சோதியிலேயே கலந்தார்.  தனது பூதஉடல் யாருக்கும் புலப்படாமலேயே மறைந்தார். அதன் காரணமாக நித்ய சிரஞ்சீவியாக இன்றும் வள்ளலார் வழிபடப்படுகிறார்.


புதுவை வேலு

நன்றி:wikipedia/dinamani/s.karuna/murali

 


 
 
 
 
 
 
 

Aucun commentaire:

Enregistrer un commentaire