dimanche 12 octobre 2014

இன்று ஒரு தகவல் (காரணமில்லாமல் காரியமில்லை)





இன்று ஒரு தகவல்

காரணமில்லாமல் காரியமில்லை!

 

 

மனிதர்களின் வாழ்வில் நிகழும்  நிகழ்வுகள் யாவும் காரணம் இல்லாமல் நிகழ்வது இல்லை. காரணத்தை  மெய்பிக்க சில காரியங்களும் நிகழும்போது, நமது மனமானது நம்பிக்கையை நோக்கி நகரத்தான் செய்கிறது. எனவே "காரணமில்லாமல் காரியமில்லை" என்பதை நம்பிக்கை கண்களைக் கொண்டு பார்த்தோமேயாயின்  உண்மையின் வெளிச்சம் உலகுக்கே தெரியும்.




உதாரணமாக திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற  மக்களின் மகத்தான வரவேற்பினை பெற்ற வசன உரையாடல் இதோ!


கூத்தன்  :   கேள்விகளை  நீ  கேட்கிறாயா  அல்லது நான்  கேட்கட்டுமா

தருமி      :    (அதிர்ச்சியுடன் )   நீ  கேட்காத  நான் கேக்குறேன்   எனக்கு  கேட்கத்தான்  தெரியும்

கூத்தன்  :  கேளும் 

தருமி      : சற்று  பொறும் 

கூத்தன்  :  கேளும்  ( சற்று  அழுத்தமாக  )

தருமி      :  பிரிக்க  முடியாதது என்னவோ
கூத்தன்  :  தமிழும்  சுவையும்
தருமி      : பிரியக்கூடாதது
கூத்தன்  :  எதுகையும்  மோனையும்
தருமி      : சேர்ந்தே  இருப்பது
கூத்தன்  :  வறுமையும்  புலமையும்
தருமி      :   ம்ம்ம் . க்கும்  ... க்கும்  ... ( திகைத்தல்   மற்றும்  அதை  இருமலாக மாற்றம் )  சேராவது  இருப்பது
கூத்தன்  :  அறிவும்  பணமும்
தருமி      :  சொல்லக்கூடாதது
கூத்தன்  :  பெண்ணிடம்  ரகசியம்
தருமி      :  சொல்லக்கூடியது
கூத்தன்  :  உண்மையின்  தத்துவம்
தருமி      :  பார்க்கக்கூடாதது
கூத்தன்  :  பசியும்  பஞ்சமும்
தருமி      :  பார்த்து  ரசிப்பது
கூத்தன்  :   கலையும் அழகையும்
தருமி      :   கலையில் சிறந்தது
கூத்தன்  :  இயல்  இசை  நாடகம்
தருமி      :  நாடகம்  என்பது
கூத்தன்  :  நடிப்பும்  பாட்டும்
தருமி      : பாட்டுக்கு
கூத்தன்  :  நாரதன்
தருமி      : வீணைக்கு
கூத்தன்  :  வாணி
தருமி      : அழகுக்கு
கூத்தன்  :  முருகன்
தருமி      :  சொல்லுக்கு
கூத்தன்  :  அகத்தியன்
தருமி      : வில்லுக்கு
கூத்தன்  :  விஜயன்
தருமி      : ஆசைக்கு
கூத்தன்  :  நீ
தருமி      : அறிவுக்கு
கூத்தன்  :  நான்
தருமி      : அய்யா  ஆள  வுடு .. எனக்கு  தெரிந்தது  அவ்வளோதான் ..




 இங்கு தருமி என்னும் புலவனின் பொருள் தேவை காரணத்திற்காக சொக்கனாகிய கூத்தபிரான்(சிவன்) காரியத்தை  தானே முன்வந்து நடத்துகிறார்.



காரணமில்லாமல் காரியமில்லை. மேலும் காரணமும், காரியமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஒன்றுக்குள் ஒன்று இணைந்திருப்பவை.


இதுகுறித்து, பகவான் கண்ணன் பகவத் கீதையில் கூறும் போது, 'நானே காரணமாகவும், காரியமுமாய் இருக்கிறேன்...' என்கிறார்.

மனித வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும், ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டே இறைவனால் நடத்தப்படுகின்றன. பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் இருந்த போது   நடந்த ஒரு சம்பவம்...
பதினாயிரம் யானை பலம் கொண்டவன் பீமன். 

அவன் ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாட சென்றான். அவன் கண்களில் பட்ட மிருகங்கள் எல்லாம் காலனை அடைந்தன. பார்வையில் படாத மிருகங்களோ பயந்து ஓடின. அப்போது வழியில் எதிர்பட்ட ஒரு பெரிய மலைப் பாம்பு, பீமனை பிடித்து கொண்டது. அதனிடமிருந்து விடுபட, பீமன் எவ்வளவோ முயற்சி செய்தும் விடுபட முடியவில்லை.





அயர்ந்து போன பீமன். 'பாம்பே... உன்னிடம் தோற்றுப்போன எனக்கு, மனிதர்களின் உடல் பலம் நிலையற்றது என்பது புரிந்து விட்டது. இதை எனக்கு உணர்த்திய நீ யார்...' எனக் கேட்டான். 'பீமா, உன் முன்னோர்களில் ஒருவனான நகுஷன் என்பவனே நான். அகஸ்திய முனிவரை அவமானப்படுத்தினேன். அவர் 'பாம்பாக போ...' என சாபம் கொடுத்து விட்டார்.


'அவரிடம் சாப விமோசனம் கேட்ட போது, 'எவன் ஒருவன், ஆத்மா எது ? ஆத்மா இல்லாதது எது ? என்பதன் வேறுபாடு குறித்த, உன் கேள்விகளுக்கு பதில் கூறுவானோ, அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்...' என்று, கூறினார்...' என்றது.

அந்த நேரத்தில், பீமனைக் காணாததால், தேடி வந்த தர்மர், பாம்பு, பீமனை பற்றியிருப்பதை கண்டு, விடுவிக்க முயன்றார். ஆனால், பாம்பு, தன் பிடியை விலக்கிக் கொள்ளாமல், தன்னைப் பற்றிய தகவல்களைக் கூறி, 'என் கேள்விகளுக்கு நீ பதில் கூறினால், உன் தம்பியை விட்டு விடுவேன்...' என்றது.

தர்மர் அதற்கு ஒப்புக் கொண்டார். பாம்பு கேள்வி மேல் கேள்வியாகத் தொடுக்க, தர்மர் அனைத்திற்கும் பதில் கூறினார். பாம்பு சாப விமோசனம் பெற்று, நகுஷனாக மாறி, சொர்க்கத்தை அடைந்தது. பீமனுடன் திரும்பினார் தர்மர். 

பலசாலியான பீமன், பாம்பால் பிடிக்கப் பட்டதும், தர்மர் அங்கு வந்ததும், அதன் விளைவாய், நகுஷன் சாப விமோசனம் பெற்றதும், இவையெல்லாம் காரணமில்லாமல் நடக்கவில்லை. முன்னோர்களுக்கும் நற்கதி அளிக்கக்கூடிய அளவிற்கு, தர்மருக்கு ஆற்றல் இருந்தது.

ஒரு செயல் ஏன் நடந்தது என்பது தெரியாவிட்டாலும், நல்வழியில் நடப்பது, நமக்கு மட்டுமல்ல, நம் முன்னோர்களுக்கும் நற்கதி அளிக்கும் என்பதே, இச்சம்பவம் விளக்கும் நீதி!

விதுர நீதி!: பிறரை மோசடி செய்யாமலிருத்தல், தான, தர்மம் புரிதல், வாக்குத் தவறாமை, பொருத்தமாகவும், நன்மை தரும் வகையிலும் பேசுதல் ஆகிய பண்புகளால், நாம் அனைவரையும் கவர்ந்து விட முடியும்.

சிலரிடம் நற்பண்புகள் நிறைந்திருக்கும். சிலரிடம் செல்வம் குவிந்திருக்கும். செல்வம் மட்டும் மிகுதியாக இருந்து, நற்பண்புகள்
இல்லாதவர்களுடன், நாம் பழக கூடாது. அத்தகையவர்களிடமிருந்து, நாம் விலகியிருக்க வேண்டும்.

எனவே காரணமில்லாமல் காரியம் நிகழ்வது இல்லை என்பதை இதன்மூலம் நாம் உணர்ந்தோமே ஆயின் நன்மை நமக்கெல்லாம் நன்மை பாராட்டும்.

புதுவை வேலு

நன்றி:பரசுராமன்/ஸ்ரீதரன்/(தினமலர்






 

Aucun commentaire:

Enregistrer un commentaire