jeudi 16 octobre 2014

இசைமேதை செம்பை வைத்தியநாத பாகவதர்( நெஞ்சம் மறப்பதில்லை)

நெஞ்சம் மறப்பதில்லை

 

இசைமேதை செம்பை வைத்தியநாத பாகவதர் 

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதரின் சாரீரம் உலகப் பிரசித்தம் பெற்றது  கணீரென்று இருக்கும். சங்கீத உலகின் அழியாப் புகழுக்கு உரியவர் செம்பை வைத்தியநாத பாகவதர்தான் என்றால் அது மிகையாகாது.  அவரை வெங்கலக் குரல் வைத்தா என்றுதான் எப்போதும் அழைப்பார்கள்.
"செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா'" சென்னை கிருஷ்ண கான சபாவில் ஆன்டுதோறும் தவறாது அவரது ஆத்மார்த்த சீடரும் பிரபல பாடகருமான , கே.ஜே.ஜேசுதாஸ் "திருவனந்தபுரம் தரங்கிணிஸரி இசை பள்ளி'யின் மூலம்  விழாவை நடத்தி, இசை மேதைகளுக்கு மரியாதை செய்து வருவதை, குரு சிசியன் உறவை அந்த குருவாயூரப்பன் கோயில் இறைவனே பாராட்டு பத்திரத்தை வாசிப்பதாக நாம் உணரலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இசைமேதையின் இதயம் இறைவனை சென்றடைந்த நாள்(16/10/1974).

அவரது இசைப் பெருமையினை, இன்று  உலகிற்கு கொண்டு சென்று சேர்ப்பதை என்றுமே « நம் நெஞ்சம் மறப்பதில்லை »

ஒருமுறை செம்பை வைத்தியநாத பாகவதருக்கு பாலக்காடு அருகில் உள்ள சாத்தப்புரத்தில் கச்சேரி.
 
மிருதங்கம்  பாலக்காடு மணி அய்யர் பக்கவாத்தியம். ராமசந்திர அய்யர் என்று ஒருவர்தான் ஏற்பாடு செய்திருந்தார் செம்பை கச்சேரி என்பதால் நல்ல கூட்டம்.
பக்கத்தில் ஏதோ கோயிலில் நாயனக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. செம்பை "என்னோட சாரீரத்திற்கு சக்தி இருந்தா அந்த மேளச் சத்தம் கேட்காது'   என்று கூறிவிட்டு, பாடத் தொடங்கினாராம். அடுத்த மூன்று மணி நேரமும் கூட்டம் அசைய வேண்டுமே !. ராமசந்திர அய்யர் சொன்னாராம், "நாதஸ்வரமா இல்லை,  வைத்தாவின் நாதக் கட்டு சாரீ ரமா என்றால், ஜெயிப்பது வைத்தாவாகத்தான் இருக்கும்.' என்று ,  அன்று அது பலித்தது. வென்றது வைத்தா தான்.

பாலக்காடு மாவாட்டத்தின் தனிச் சிறப்புக்கு, அதன் பாரம்பரிய கர்நாடக சங்கீதமும், கலாச்சார திருவிழாக்களுமே முக்கிய காரணம் என்று சொல்லலாம். இந்த மாவட்டத்தில் பிறந்த செம்பை வைத்தியநாத பாகவதர் மற்றும் பாலக்காடு மணி ஐயர் ஆகிய இரண்டு கர்நாடக இசை மேதைகளால் பாலக்காடு மாவட்டம் இந்தியா முழுக்க உள்ள இசை ரசிகர்களின் உள்ளத்தில் நீங்காத இடம் பிடித்து இருந்தது என்பதை சங்கீத உலக சகாக்கள் நன்கறிவர்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள்
வாழ்ந்த ஊர் பாலக்காடு. அந்த கலைஞர்கள் எல்லாம் செம்பை அக்ரகாரத்திற்கு அடிக்கடி வந்து செம்பை சகோதரர்களை சந்தித்தனர். இவர்களின் சந்திப்பில் இசை விவாதங்கள் நடந்தன. இசை குறித்த அரிய அறிவு, செம்பை சகோதரர்களுக்கு இதன் மூலம் கிடைத்தன.

இசை அன்பர் ஒருவர் கூறுகையில், சமீபத்தில்  பண்டுரீதி கோலுஎன்ற தியாகராஜரின் கீர்த்தனையைக் கேட்டேன். செம்பை வைத்தியநாத பாகவதர் பாடிய பாடலின் ஒலிப்பதிவு அது. செம்பை வைத்தியநாத பாகவதர் அலட்டிக் கொள்ளாமல் பாடும் அப்பாடல் கேட்டுக் கொண்டிரும்போதே என்னைக் கையைப் பிடித்து இழுத்துப் போய் இசையில் தொடங்குதம்மாவில் நிறுத்துகிறது.
 இசையில் தொடங்குதம்மாபாடலின் ஹிந்துஸ்தானி சாயலும், ஒரு ஹிந்துஸ்தானி பாடகருக்கு இருக்க வேண்டிய செம்பை வைத்தியநாத பாகவதரின் குரலும், இரண்டு பாடல்களையும் என்னை, மிக எளிதாக இடம்மாற்ற வைக்கின்றன என்று, மேலும் உண்மையில், கர்நாடக இசைப் பாடல்களும் ஐம்பது வருடங்கள் முன்புவரை பெரும்பாலான பொதுமக்கள் ரசித்து வந்திருக்கிறார்கள். மதுரை மணி ஐயர் கச்சேரியென்றால் ஒரு பெரிய ஊரே திரண்டு நின்றுக் கேட்டுச் செல்லும் என்று சொல்லுவார்கள். இப்போது பெரும்பாலும் கர்நாடக இசைப்பாடல்கள் கேட்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. நாம் வேண்டாம் என்று விலகி ஓடினாலும், ஒரு அழகான ஹம்ஸநாதத்தை நமக்குத் தந்திருக்கிறார் இளையராஜா.


கரூர் சங்கீத திருவிழாவில் கச்சேரி நடத்த செம்பை வாய்ப்பு கேட்டார். 'இது இளைஞர்கள் பாடும் அவை அல்ல' என முத்தையா பாகவதர் மறுத்துவிட்டார். அந்த அவையில் பக்கவாத்தியம் வாசிக்கும் வயலின் இசைக்கலைஞர்கள் வரவில்லை. இந்த வாய்ப்பை பெற்றுக் கொண்டு அனைவரின் பாராட்டை பெற்றார். முத்தையா பாகவதர் மகிழ்ச்சி அடைந்து, மறுநாளே அந்த அவையில் பாட வாய்ப்பு கொடுத்தார். அந்த அவையில் சுருதி சுத்தமாக « ஆரோகண அவரோகணங்கள் » பாடி பாராட்டுகளை செம்பை சகோதரர்கள் பெற்றனர். இதனால் தமிழகம் முழுவதும் கச்சேரிகள் நடத்தும் வாய்ப்புகள் கிடைத்தன. தனக்கே உரிய திறமையும் தனித்தன்மையும் கொண்டு செம்பையின் புகழ் பரவியது.


கோட்டாயில் உள்ள அக்ரகாரத்திலிருந்து சென்னை சாந்தோமிற்கு 1945ல் குடிபெயர்ந்தார். கச்சேரிகள் அதிகமானதே இதற்கு காரணம். செம்பையில் செயல்பட்டு வந்த குருகுல கல்விக்கூடத்தையும் பூர்வீக சொத்துக்களையம் தம் தம்பி சுப்பிரமணிய பாகதவரிடம் ஒப்படைத்தார். தவிலுடனும், நாதசுரத்துடனும் இணைந்து கச்சேரி நடத்திய பெருமை செம்பைக்கே உரியது. குருவாயூர் ஏகாதசி நாளில் சீடர்களுடன் கச்சேரி நடத்தும் அதிர்ஷ்டம், செம்பைக்கு எழுபது ஆண்டுகள் கிடைத்தது. 1974 அக்டோபர் 16ல் இயற்கை எய்தினார்.  கோட்டாயில் உள்ள செம்பை கிராமம் சங்கீதத்தை விரும்புபவர்களின் புண்ணிய பூமி. செம்பையின் வீட்டிற்கு முன்புள்ள பார்த்தசாரதி கோயிலில் ஜப்பசி பவுர்ணமி தினத்தில் துவங்கி ஒரு வாரம் இசைவிழா நடக்கும்.

இது 1914ம் ஆண்டு செம்பை வைத்தியநாத பாகவதரால் தொடங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 18. அன்றிலிருந்து தொடர்ச்சியாக நடைபெறும் இந்த இசைவிழா கடந்த 2014 மார்ச்சில் நூற்றாண்டு விழா கண்டது.
பாடகர் ஜேசுதாஸ், டி.வி.கோபாலகிருஷ்ணன், ஜெயவிஜயன், மண்ணுமர் ராஜகுமாரணுண்ணி, சுகுமாரி நரேந்திர மேனோன் உட்பட செம்பை பாகவதரின் சீடர்கள் 45 ஆண்டுகளாக குருசமர்ப்பணம் செய்ய வேண்டி செம்பை கிராமத்திற்கு வந்து கச்சேரி நடத்துகின்றனர்.1986 ம் ஆண்டில் பாகவதருடைய நினைவாக செம்பை வித்யாபீடம் தொடங்கப்பட்டது. சனி, ஞாயிறு நாட்களில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் சங்கீதம் கற்கின்றனர். தன் திறமைகள் அனைத்தையும் சங்கீதத்திற்காக சமர்ப்பித்தவர் செம்பை.
மிக கம்பீரமாக பாடும் ஆற்றலை பெற்ற பாகவதரின் குரல்வளம் கேட்போரை வியக்க வைக்கும்படி இருக்கும். ஒலிபெருக்கிகள் இல்லாத அக்காலத்தில் அவரது குரல் கணீரென கடைசி வரிசையிலுள்ளவர்களுக்கும் கேட்கும்.

ஒரு சமயம் நாதசுவரத்தைப் பக்கவாத்தியமாக வைத்து கச்சேரி செய்தார் என்றால் அவரது குரல் எத்தகையது என்பதை உய்த்துணர்ந்து கொள்ளலாம்.

பல சபாக்களிலும் இசை விழாக்களிலும் பாடியதுடன் பிளேட் என அக்காலத்தில் அழைக்கப்பட்ட கிராமபோன் இசைத்தட்டுகளிலும் தனது பாடல்களைப் பதிவு செய்து வெளியிட்டார்.

இசைக்கச்சேரியின் போது எந்த இடத்திலும் நிரவல், ஸ்வரப்ரஸ்தரம் செய்யும் விழிப்புணர்வைக் கொண்டிருந்தார்.

மற்ற கலைஞர்களை ஊக்குவித்து உயர்வடைய செய்வதில் செம்பை மிகுந்த ஈடுபாடு கொண்டவர். "ரக்ஷ மாம்", "வாதாபி கணபதிம்", "பாவன குரு" போன்ற பாடல்களை பலமுறை தன் கச்சேரிகளில் பாடி பிரபலப்படுத்தினார். தனது பக்கவாத்தியக்காரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்வார். அவர்களின் திறமையை வெளிக்கொணர வாய்ப்புகள் கொடுப்பார்.

தனது சீடர்களையும் ஊக்குவித்து உற்சாகப்படுத்துவார். இவருக்கு கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் ஏராளமான சீடர்கள் இருந்து வந்துள்ளனர்.
கே. ஜி. ஜெயன் - கே. ஜி. விஜயன் இரட்டையர், கே. ஜே. யேசுதாஸ், டி. வி. கோபாலகிருஷ்ணன், பி. லீலா, வி.வி.சுப்பிரமணியம், போன்றோர் கருநாடக இசையில் இவரின் சீடர்கள்.

 

செம்பை பெற்ற விருதுகள்

காயன காந்தர்வ, 1940 "கல்கி" கிருஷ்ணமூர்த்தி வழங்கியது.
சங்கீத கலாநிதி விருது, 1951 சென்னை மியூசிக் அகாதெமி வழங்கியது
சங்கீத நாடக அகாதமி விருது, 1958 இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி வழங்கியது

சங்கீத கலாசிகாமணி விருது, 1964, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ்
சொசைட்டி

பத்ம பூஷண், 1973 இந்திய அரசு வழங்கியது

•1996ஆம் ஆண்டு செம்பையின் நூறாவது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் செப்டம்பர் 28 ஆம் தேதி இந்திய அஞ்சல் துறை ரூ.1 பெறுமதியில் ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.

கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் தமிழகத்தை சேர்ந்த சங்கீத வித்வான் ஸ்ரீ செம்பை வைத்யநாத பாகவதர் அவர்களின் உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது.


இசை மேதையை பற்றி படிக்கும்போது இசை தொடர்பான சில வார்த்தைகளை அறியாதவர்களுக்காக சில:


தாளம் பற்றிய சொற்கள்

ஜதி, கதி, லகு, த்ருதம், அனுத்ருதம், லயம், எடுப்பு, ஆவர்த்தனம், தனி ஆவர்த்தனம், களை, கொன்னக்கோல் (சொல்கட்டு)

தாளங்களின் பெயர்கள்

ரூபக தாளம், திரிபுட தாளம், த்ருவ தாளம், மத்ய தாளம், ஜம்ப தாளம், அட தாளம், ஏக தாளம், ஆதி தாளம், கண்ட சாபு தாளம், மிச்ர சாபு தாளம், தேசாதி தாளம்

இசைக்கருவிகள்

நரம்பு (தந்தி) கருவிகள்  - வயலின், வீணை, யாழ், சித்ரவீணை, தம்புரா, மாண்டலின், கிடார், கீபோர்ட், ஹார்மோனியம், சுருதிப்பெட்டி

காற்று/துளை கருவிகள்  - புல்லாங்குழல் (குழல்), நாதஸ்வரம் (நாதசுரம்), ஒத்து, க்ளாரினெட்

தோல்/தட்டும் கருவிகள்  - மிருதங்கம், தவில், மத்தளம், மேளம், கஞ்சிரா, ஜால்ரா, மோர்சிங், கடம், ஜலதரங்கம்

கச்சேரி பற்றிய சொற்கள்

வர்ணம், கிருதி, கீர்த்தனை, ஆலாபனை, நிரவல், கல்பனாஸ்வரம், ராகம் தானம் பல்லவி, தனி ஆவர்த்தனம், துக்கடா, விருத்தம், ஸ்லோகம், பாசுரம், அஷ்டபதி, தரங்கம், காவடிச்சிந்து, ஜாவளி, பதம், தில்லானா, மங்களம், அரங்கம், மேடை, ரசிகர்கள், ஒலிபெருக்கி, களை கட்டுவது

வித்வான்/விதூஷி (பாடகர்/பாடகி), பாகவதர், சாரீரம், தேங்காய் மூடி, மனோதர்மம் (மனோதர்ம சங்கீதம்), கல்பித சங்கீதம்

வாகேயகாரர் (கிருதி இயற்றியவர்கள்)

மும்மூர்த்திகள் (தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரி), தமிழ் மும்மூர்த்திகள் (முத்து தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசல கவிராயர்).தன் திறமைகள் அனைத்தையும் சங்கீதத்திற்காக சமர்ப்பித்தவர் செம்பை. ஆனந்த பரவசத்தோடு ரசிக்கக்கூடிய கலையே சங்கீதம் என்பதை தன் வாழ்க்கை மூலம் நிரூபித்த செம்பையின் நினைவை இந்த நாளில் நாம் போற்றுவோம்

 

புதுவை வேலு

நன்றி:தினமலர்/தினமணி

Aucun commentaire:

Enregistrer un commentaire