இன்று ஒரு தகவல்
கூழுக்குக் கவி பாடிய கூனக் கிழவி
அன்பார்ந்த வலைதள வாசகர்களே வணக்கம்!
குழலின்னிசை வலைதளத்தை பொறுத்தவரை இந்தக் குழந்தை பிறந்து
சற்று ஏறக்குறைய இரண்டு மாதங்கள் (57 நாட்கள்) நகர்ந்தோடி விட்டன!
இந்த 57 நாட்களில் குழலின்னிசை வலைதளத்தில்(BLOG) மூவாயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்களும், கூகுள் தளத்தில் ஐயாயிரத்து முன்னூறுக்கும் மேற்ப்பட்டப் பார்வையாளர்களும் பார்த்து மகிழ்ந்து இந்தக் குழந்தைக்கு ஆசை முத்தங்களை பரிசாக தந்துள்ளனர்(ஒரு சில தீயப் பார்வைகளும் பார்க்கத்தான் செய்தனர் சிலர்).
இத்தகைய முத்தங்களை பரிசாக பெறுவதற்கு காரணம் இந்தக் குழந்தை சிந்திய சிரிப்பு முத்துக்களே (கவிதை/கவிதை/செய்திகள்இன்றுஒரு தகவல் படைப்புகள்) என்றால் அது மிகையில்லை!
குழலின்னிசைக் கண்ணன் "கிருஷ்ண ஜெயந்தி" திருநாள் சென்ற பிறகு (விடுமுறைக்கு பிறகு) மீண்டும் செப்டம்பர் மாதம் உங்களது மடியில் துள்ளிக் குதித்து விளையாட அரிய பல நல்ல படைப்புகளுடன் கண்ணன் வருவான் உறவுகளின்
சிறகுகளில் அமர்ந்து சிரிப்பதற்கு காத்திருங்கள். நன்றி!
கூழுக்குக் கவி பாடிய கூனக் கிழவி
ஆடி மாதம் என்றால் அம்மனுக்குக் கூழ் ஊற்றும் திருவிழா நினைவுக்கு வருவது போலவே கூழுக்குக் கவிதைகள் ஊற்றிய அம்மனும் நினைவுக்கு வருவார்.
ஒளவையார் கோயில்கள் நாஞ்சில் நாட்டு நாவல் மர சோலைகள் நிறைந்த பகுதிகளில் காணப்படுகின்றன. அவற்றுள் தாடகை மலையடிவாரத்தில் (தோவாளை பகுதியில்) காணப்படும் தாழக்குடி ஒளவையாரம்மன் கோயிலும் அழகிய பாண்டிபுரம் பகுதியில் ஐந்துகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குறத்தியறை ஒளவையாரம்மன் கோயிலும் சிறப்பு வாய்ந்தவை. ஆடிச் செவ்வாய்களில் ஒளவையாரம்மன் கோயில்கள் விழாக்கோலம் பெறுகின்றன. கூழும் கொழுக்கட்டைகளும் படைக்கப்படுகின்றன.
முன்பொரு காலத்தில் குறத்தியறை ஒளவையாரம்மன் கோயிலில் இப்பகுதி வாழ் மக்கள் தங்கள் பெண்ணின் திருமணத்திற்கு எட்டு நாள்ளுக்கு முன்பு வந்து ஒளவையாருக்கு வழிபாடு நடத்துவார்களாம். வழிபாடு முடித்துச் சென்ற பின்பு மீண்டும் சற்று நேரம் கழித்து திரும்பி வந்து பார்ப்பார்களாம். அப்போது ஆபரணங்களும் அணிகலன்களும் நிறைந்திருக்கும் தங்கத் தாம்பாளாம் ஒன்று அங்கு இருக்குமாம். அதைக் கொண்டுபோய் மணமக்களுக்கு அணிவித்து திருமணம் நடத்துவார்களாம்.
திருமணம் முடிந்து எட்டு நாள் கழித்து மீண்டும் வந்து அர்ச்சனை செய்து அந்தத் தாம்பாளத்தை அக்கோவிலில் வைத்துவிட்டு திரும்புவார்களாம். அப்போது "எடுத்தேன்' என்று ஓர் அசரீரி கேட்குமாம். இது வழக்கமாக நடைபெற்று வந்ததாம். ஆனால், ஒருமுறை அப்படி "எடுத்தேன்' என்று அசரீரி ஒலித்தபோது, அந்த ஊர்வாசி ஒருவன் "பார்த்தேன்' என்று பதில் கொடுத்தானாம். "அடைத்தேன்' என்று பதில் கூறிய அசரீரி அன்று முதல் இவ்வழக்கத்தை நிறுத்திக் கொண்டது என்ற சுவையான கதையும் இக்கோயில் வரலாற்றுக்குள் உண்டு
. இப்போதும் திருமணமாகாத பெண்களும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களும் ஒளவையாரம்மனை வேண்டிக்கொள்வதும் நோன்பு இருப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தெய்வமாகவே மாறி கூழையும் கொழுக்கட்டைகளையும் படையலாக ஏற்றுக் கொள்ளும் ஒளவையாரைக் "கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி' என்று சொல்லிதான் வணங்குகின்றனராம். ஒளவையார் தாம் வாழும் காலத்தில் கூழுக்குக் கவி பாடிய கதைகளும் உண்டே!
சோழ நாடு சென்றடையும் ஒளவையார் வழியில், ஒரு குறத்திப்பெண் அழுது கொண்டிருப்பதைக் கண்டு, ""ஏனம்மா அழுகிறாய்?'' என்கிறார்.
""என் கணவன் ஆசையாக வளர்த்து வந்த பலாமரத்தை மூத்த மனைவியாகிய என்னிடம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியூர் சென்றார். கணவன் என்மீது அன்பாக இருப்பதைக் கண்டு பொறுக்காத என் சககிழத்தி(சக்களத்தி), என் மீது பழி சுமத்துவதற்காக அம்மரத்தை வெட்டி விட்டாள். என் கணவன் வந்து கேட்டால் நான் என்ன செய்வேன்?''
என்று கூறி அழுதாள். இதைக் கேட்ட ஒளவையார் ஒரு பாடல் பாட, உடனே அம்மரம் மீண்டும் தழைத்து நின்றது.
அதைக் கண்டு மகிழ்ந்த அக்குறத்தி, ஒளவைக்கு தன்னிடமிருந்த தினையில் நான்கு உழக்கு அள்ளித் தருகிறாள். அந்த அன்புப் பரிசினைத் தாம் கையில் வைத்திருக்கும் துணியில் மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு ஒளவையார் சோழன் அரண்மனைக்குள் நுழைகிறார்.
ஒளவையின் கையில் இருந்த மூட்டையை உற்றுப் பார்த்து விட்டு, ""தமிழ்க் கவியே! அந்த மூட்டையில் என்ன இருக்கிறது?'' என்று கேட்கிறான் சோழன்.
அவையில் கம்பரும் இருக்கிறார். சோழன் அவ்வப்போது கம்பரைப் பாராட்டிப் பேசுவதும் ஒளவையைச் சரியாக மதிக்காது இருப்பதுமாக இருப்பவன். கம்பரை வைத்துக்கொண்டு மன்னன் இக்கேள்வியைக் கேட்டது ஒளவைக்குத் தம்மை ஏளனப்படுத்துவதாகத் தோன்றியது.
உடனே ஒளவை, பலா மரம் தழைக்கத் தாம் பாடியதையும் குறத்தி அதற்குப் பரிசாக தினையைக் கொடுத்ததையும் கூறி, ""ஏழைகள் மனம் களிக்கப் பாடும் என்னிடம் என்ன இருக்கும்? அந்த ஏழைகள் கொடுத்த எளிய பரிசுப் பொருள்களான தினைதான் உள்ளது. சோழா! கேட்டுக்கொள். நான் மற்றவரைப் போல பொன்னுக்கும் மண்ணுக்கும் மட்டும் கவி படைப்பவள் இல்லை. உப்பு, புளி என்று ஏழைகள் அன்பாகக் கொடுக்கும் எதற்கும் கவி பாடுபவள்'' என்கிறார்.
கூழைப் பலாத் தழைக்கப் பாடக் குறமகளும்
மூழாக்குழக்குத் தினை தந்தாள் - சோழாகேள்
உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதை
ஒப்பிக்கும் எந்தன் உளம்.
நான் மன்னர் தரும் பரிசுக்காகக் கவிதைகளைத் தூக்கிக்கொண்டு அலைபவள் அல்லள் என்று சோழனுக்குச் சொல்லாமல் சொல்லி, இப்பதிலின் மூலம் பொன்னுக்குப் பாடும் கம்பருக்கும் புத்திமதி புகட்டிவிடுகிறார். இப்படி ஏழைகளுக்காகவே பாடி, ஏழைகளுள் ஒருத்தியாக வாழ்ந்த ஒளவைக்கு ஏழைகள் கோயில் அமைத்து ஆடிச் செவ்வாய் தோறும் வழிபடுவது பொருத்தம்தானே!
இப்படி ஏழைகளுக்காகவே பாடி, ஏழைகளுள் ஒருத்தியாக வாழ்ந்த ஒளவைக்கு ஏழைகள் கோயில் அமைத்து ஆடிச் செவ்வாய் தோறும் வழிபடுவது பொருத்தம்தானே!
புதுவை வேலு
நன்றி: முனைவர்