mercredi 31 décembre 2014

புத்தாண்டே வருக! புத்துணர்ச்சி தருக! (01/01/2015)

புத்தாண்டே வருக!

புத்துணர்ச்சி தருக!

 


உண்மைக் காற்று வீசிடவே
உலகம் அன்பால் சுழன்றிடவே
வன்மை கொடுமை ஒழிந்திடவே
பெண்ணின் பெருமை வாழ்ந்திடவே !

சாதி பேதம் மறைந்திடவே
நீதி எங்கும் நிறைந்திடவே
தழைக்கும் பயிர்கள் செழித்திடவே
உழைப்பவர் ஊக்கம் உயர்ந்திடவே !

நற்றமிழை நாம் வளர்த்திடவே
பெற்றத்தாயை நாம் பேணிடவே
உவகையுடன் வருக! புத்தாண்டு!
களிப்புனைத் தருக! புத்தாண்டு !

வலைப் பூ வாசலிலே !
வாழ்த்துக் கோலமிட்டு
வாருங்கள் வரவேற்போம்
புத்தாண்டே வருக! வருகவென்று !


 நட்புடன் என்றும்,

புதுவை வேலு

samedi 27 décembre 2014

"அகந்தையை அழித்தொழிக்கும் தெய்வீகப் பாடல்கள்"


திருப்பாவை

ஆண்டாள் அருளியது






(தொடர்ச்சி)


பாடல் 13

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


பொருள்:

 பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது.
கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே!
மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.


விளக்கம்:
 
"கள்ளம் தவிர்ந்து என்கிறாள் ஆண்டாள். தூக்கம் ஒரு திருட்டுத்தனம். பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல! நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்! அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் திருட்டு தான். வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும்.
இந்தப் பாடல் வெளியாகும் பத்திரிகையைப் பிடிக்க முடியாமல் கைகள் நடுங்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்? இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?



பாடல் 14

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.


பொருள்:
 எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!
 

விளக்கம்:
 
கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது.
வாக்கு கொடுப்பது மிக எளிது. அதைக் காப்பாற்ற முடியுமா என தெரிந்து பேச வேண்டும்.
வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள் வருந்துகிறாள். நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும்,  சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.



பாடல் 15

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக !
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.


பொருள்:

 ""ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர்.
அப்போது அந்த தோழி, ""கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.

உடனே தோழிகள், ""உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், ""சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.""அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். ""என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.தோழிகள் அவளிடம், ""நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.


விளக்கம்:
ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். பெண்களுக்கு பேசக்கற்றுத்தரவா வேண்டும்!
இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள். படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.


பாடல் 16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.


பொருள்:

 எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே!
ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். "அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.


விளக்கம்:

 ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, ""இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. "அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், "இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம். சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.






 பாடல் 17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்! அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.



பொருள்:
 
ஆடைகளையும்,  குளிர்ந்த நீரையும்,  உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே!
தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும்.
விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.


விளக்கம்:
 
திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் சிறப்பாக பாடுகிறாள் ஆண்டாள்.
மூன்று பாசுரங்களில் இந்த அவதாரத்தை அவள் சிறப்பித்திருக்கிறாள்.
"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று மூன்றாவது பாடலிலும், இந்தப் பாடலிலும், 24வது பாடலில் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்றும் சொல்கிறாள். அசுரனாயினும் நல்லவனான மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான். இந்த கர்வம் அடங்கினால் இறைவனை அடைவது உறுதி என்பதாலேயே நாராயணன் வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார்.
திருப்பாவை பாடுபவர்கள் "தான் என்ற கர்வத்தை அடக்க வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.


பாடல் 18


உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


பொருள்:

மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.


விளக்கம்:

பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட

அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் "எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்...அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.






  பாடல் 19


குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.


பொருள்:

"குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?


விளக்கம்:

 பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா? ஆனாலும், கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம்."நீ எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப, அவன் ஓரக்கண்களால் பார்த்து "நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கிசைகை காட்டுகிறானாம். தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் "நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.



பாடல் 20


முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.


பொருள்:

முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.


விளக்கம்:

 கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!









மாணிக்கவாசகர் அருளிய 



திருவெம்பாவை


  
பாடல் 13


பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.




பொருள்:

 கரிய நிற குவளை மலர்கள் குளத்தின்  நடுவிலே உள்ளன. அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன. இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள். அவர்கள் "நமசிவாய என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள். இந்தக் காரணங்களால்,  இந்தக் குளம் எங்கள் சிவனையும்,  பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப, மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.

விளக்கம்:

 கரிய நிறம் கொண்டவள் அம்பிகை. இதனால் தான் அவளை "சியாமளா என்கிறோம். "சியாமளம் என்றால் "கருநீலம். சிவந்த நிறமுடையவர் சிவபெருமான். மாணிக்கவாசகர் தன் தெய்வீகப் பார்வையால் கரிய குவளை மலர்களை அம்பிகையாகவும், தாமரையை சிவனாகவும் பார்க்கிறார். சாதாரண குளத்தில் உடல் அழுக்கு நீங்கும். பக்தி குளத்தில் மன அழுக்கு நீங்கும் என்பது அவரது இனிமையான கருத்து.



பாடல் 14


காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.



பொருள்:
 
ஆண்கள் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் ஆட,  அவர்களின் தங்கநகைகள் ஆட, பெண் களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட வாசனை கருதி அதை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில் ஆடுங்கள். அவ்வாறு நீராடும் போது சிற்றம் பலத்தில் நடனமிடும் சிவபெருமானின் புகழ் பாடுங்கள். வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லி நீராடுங்கள். ஜோதி வடிவாய் திருவண்ணாமலையிலே காட்சி தரும் அந்த சிவனின் மாபெரும் விருத்தாத்தங்களையெல்லாம் சொல்லுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி பேசுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழைப் பாடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மைப் பிரிக்கும் வளையல்கள் அணிந்த தாயுமானவாய் விளங் கும் அந்த சிவனின் பாதமலர்களைப் பாடி நீராடுங்கள்.


விளக்கம்:

 குளிக்கும் போது உலகியல் சிந்தனைகளே மனதில் இருக் கக்கூடாது. குறிப்பாக குளியலின் போது இன்ப உணர்வுகளுக்கும், பிற கீழ்த் தரமான எண்ணங்களுக்கும் இடம் தரவே கூடாது. இந்த சமயத்தில் "நமசிவாய, சிவாயநம என்ற நாமங்களே நாவில் இருந்து வர வேண்டும். இந்த திருநாமங்களைச் சொல்லிவிட்டு, அன்றையப் பணிகளை திட்டமிட்டு செய்தால் நம்மை வெற்றி தேடி வரும் என்பது இப்பாடலின் உட்கருத்து.


பாடல் 15


ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.



பொருள்:

அழகிய மார்புகச்சையும், ஆபரணங்களும் அணிந்த பெண்களே! நம் தோழி "எம்பெருமானே என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை நிறுத்தாமல் பேசுவாள். மனம் மகிழ இவ்வாறு அவள் அவரது சிறப்புகளைப் பேசுவதால் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும். அவள் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்ற நிலையில் பித்துப்பிடித்து நிற்பாள். அவளைப் போலவே நம்மையும் ஆட்கொள்ளக் காத்திருக்கும் வித்தகனான சிவனின் தாள் பணிந்து பாடுவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.

விளக்கம்:
 
மாணிக்கவாசகர் சிவலோகத்துக்கே சென்று விட்டதாகவும், தன்னை நந்தியாகப் பாவித்து, அங்கேயே தங்கியிருந்ததாக கற்பனை செய்து பாடியது இப்பாடல்.






பாடல் 16


முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்


பொருள்:
 
இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக.

விளக்கம்:
 
ஆன்மிகமும்,  அறிவியலும் ஒன்றுக்கொன்று இணைந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுப் பாடல். நீர் ஆவியாகி மேலே சென்று மேகமாகி குளிர்ந்து மழையாகிறது என்ற அறிவியல் கருத்தை மாணிக்கவாசகர் 1200 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார்.
மேலும்,  இயற்கையை தெய்வமாக வடித்ததன் மூலம்,  அதற்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதையை தெளிவாகச் சொல்லிவிட்டார். இன்று இயற்கையை மதிக்காததன் விளைவை கண்கூடாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இனியேனும், இயற்கையை மதிப்போமா!



பாடல் 17


செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.




பொருள்:
 
தேன்சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே! செந்தாமரைக் கண்ணனான நாராயணன், பிரம்மா, பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி வழங்க நம் தலைவனாகிய சிவபெருமான், இதோ! வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். அவனது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அந்தச் சிவனை வணங்கி நலம் பல பெறும் பொருட்டு, தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் பாய்ந்து நீராடி அவன் தரிசனம் காண தயாராவோம்.

விளக்கம்:
 
இறைவனைத் தேடி நாம் கோயிலுக்குச் செல்ல வேண்டியதில்லை. இதோ! அவனே வருகிறான் அழகிய சப்பரத்தில்! இப்போது கூடவா அவனைத் தரிசிக்க தயக்கம்! அவன் வருமுன் நீராடி உடல் சுத்தமாகி, "நமசிவாய எனச் சொல்லி நின்றால், அவன் நமக்கு சேவகன் போல் சேவை செய்வான். வேறெதுவும் அவன் எதிர்பார்ப்பதில்லை என்பது இப்பாடல் சொல்லும் கருத்து.



பாடல் 18

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.




பொருள்:

 சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன. பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் என முப்பிரிவாகவும் திகழும் அவர் வானமாகவும்,  பூமியாகவும், இவையல்லாத பிற உலகங்களாகவும் திகழ்கிறார். கண்ணுக்கு இனிய அமுதம் போல் தோன்றும் அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி. பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.

விளக்கம்:

 ஆண் இனம்,  பெண்ணினம் நீங்கலாக அலி என்ற இனம் இருக்கிறது. இறைப்படைப்பின் அதிசயம் அது. அதனால் தான் அவர்களை "திருநங்கை என பெயர் சூட்டி அவர்களைக் கவுரவித்துள்ளோம். இறைப் படைப்பில் எதுவுமே கேலிக்குரியதல்ல. எல்லாம் அவன் செயல். இறைவனே அலியாக இருக்கும் போது, மனிதப்படைப்பில் இருந்தாலென்ன! எல்லா உயிர்களையும் பரம்பொருளாகக் காண வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.



பாடல் 19


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.



பொருள்:
 
"உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று ஒரு தந்தை தன் மகளை ஒருவனிடம் திருமணம் செய்து கொடுக்கும்போது சொல்லும் பழமொழி இருக்கிறது. அதன் காரணமாக, எங்களைத் திருமணம் செய்வோர் எப்படி இருக்க வேண்டும் என்று உன்னிடம் கேட்கும் உரிமையுடன் விண்ணப்பிக்கிறோம். எங்களைத் தழுவுவோர் உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் உனக்கு மட்டுமே பணி செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவர்களாய்  இருக்க வேண்டும்.
எங்கள் பார்வையில் உனக்கு பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். பிற தீமைகள் எதுவும் பார்வையில் படவே கூடாது. இப்படி ஒரு பரிசை எம்பெருமானான நீ எங் களுக்கு தருவாயானால், சூரியன் எங்கே உதித் தால் எங்களுக்கென்ன?



விளக்கம்:
 
அக்காலத்தில், பெண்கள் எத்தகைய மணவாளன் தங்களுக்கு அமைய வேண்டும் என்று கேட்கும் உரிமை இருந்திருக்கிறது. அதனால் தான் ஒரு பக்தன் தங்களுக்கு கணவனாக வேண்டும் என்றார்கள். அது மட்டுமல்ல! நல்ல கணவன் அமைந்து விட்டால், கிரகங்களின் மாற்றம் கூட ஏதும் செய்யாது என்று உறுதியாகச் சொல் கிறார்கள். இறைவனை உறுதியாக நம்புவோருக்கு கிரகங்களின் தாக்கம் இல்லை என்பது இப்பாடல் உணர்த்தும் உட்கருத்து.



பாடல் 20


போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.




பொருள்:
 
சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை பணிகின்றோம். எல்லா உயிர்களையும் படைக்கின்ற உன் பொற் பாதங்களை சரணடைகின்றோம். எல்லா உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம்.
உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகின்றோம். திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம். எங்களுக்கு பிறப்பற்ற நிலை தரும் பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம். இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.


விளக்கம்:

திருவெம்பாவையின் கடைசிப்பாடல் இது.
இறைவனை வணங்கினால் போதுமா?
மனம் ஓரிடத்திலும்,  கைகள் மட்டும் வணங்கிய நிலையில் இருப்பதால் என்ன லாபம்?  மாணிக்கவாசகர் தன் பார்வையை இறைவனின் முகத்தின் மீது செலுத்தினாரா?  அவரது திருவடியை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார். அவனது பாத தரிசனம் கிடைத்தால் போதும்! வாழும் போதும் இன்பம்! மறைவுக்குப் பிறகும் இன்பம் என்கிறார்.நாளை முதல் திருப்பள்ளியெழுச்சி பாடுவார் மாணிக்கவாசகர்.
(முற்றும்).

புதுவை வேலு

(நன்றி: தினமலர்)