samedi 17 juin 2017

இப்படியும் சிலர்



தலைப்பு: இப்படியும் சிலர்


வானம் ஏறி வைகுண்டம் போவதற்கு
வழி  யறிவேன் என்பார் சிலர்


ஊழல் ஊஞ்சல் உற்சவத்திற்கு
உபயதாரராக உள்ளார்கள் சிலர்


ஒவ்வாத காதல் செய்து
ஓர் கொலையும் செய்வார் சிலர்



துப்புரவு செய்ய வேண்டின்
துப்பிய பின்பு துடைப்பார் சிலர்


இருண்ட வானத்திற்கு
வெள்ளையடித்தேன் யென்பார் சிலர்


பன்னாட்டு வங்கியில்
பண(ம்) நாட்டாமை யானர்கள் சிலர்



அரசியலை ஆயுத எழுத்தாக்கி...
ஆஸ்திக்கு  ஆயுள் விருத்தி  செய்வார் சிலர்






ஆதரவற்றோர் ஆசிரமத்தில்
அன்னை தந்தையரை விடுவார் சிலர்


சட்டம் என்னும் இருட்டறையில்
வெளிச்சத்தோடு வாழ்வார் சிலர்


தமிழ்ப் பட்டறையில் தமிழே!
அமுதை பொழியும் நிலவென்பார் சிலர்


குருதி தந்து - மனிதர்
இறுதியாத்திரையை தடுப்பார் சிலர்


மது அரக்கனை அழிப்பதற்கு
மல்லுக்கட்டி நிற்பார் மங்கையர் சிலர்


அதிகாரம் யாருக்கு என்று!
அக்கப் போர் செய்வோர் சிலர்


ஒரே தேசம் ஒரே வரி
ஒப்புதலை தருவார் சிலர்


உழவர் உலகம் உவகையில்
உழல வேண்டுமென்பார் சிலர்


தமிழ்த் தேர் வடம் பிடித்திழுத்து
தரணியில் வலம்வருவோம் யென்பார் சிலர்

-புதுவை வேலு

vendredi 16 juin 2017

முகநூல் தந்த முகவரி

சின்னத் திரையில்  ஒளி பரப்பாகி வரும்
சீரியல்கள் குறித்த எனது கருத்துக்கு
முகநூல் நண்பர்  திரு
சூசைநாதன் நெல்ஃபோன் 
Soucenadin Nalpon 
தந்த மரியாதை!
 





lundi 12 juin 2017

உளவுத் துறை



முகத்தில் முகம்
பார்க்கும் வேளை
யாரங்கே?
வெளிச்சத்தால்
வேவு பார்ப்பது -
சூரியன்


-புதுவை வேலு


dimanche 11 juin 2017

"நெஞ்சம் நெகிழ்கையிலே"



புத்தியுள்ள வாசகனின்
நித்திரைக் கட்டிலோ?
மெத்த படிப்பதற்கோ
மெத்தையான பஞ்சறிவோ?


நெஞ்சம் நெகிழ்கையிலே
நெஞ்சடைப்பு வருவதில்லை!
கஞ்சம் மனதில் வேண்டாம்
கல்வி பகிர்ந்து வாழுங்களேன்!


-புதுவை வேலு

samedi 10 juin 2017

"ஏழிசை எழிலோடு வாழியவே!"

'இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்'

மூத்த வலைப் பதிவாளர்
இசை வித்தகர்

சூரிய நாராயண சிவா  (சுப்புத் தாத்தா) அவர்களுக்கு,
குழலின்னிசையின்   

பிறந்த  நாள் வாழ்த்து




தஞ்சை தந்த தாத்தா-எங்கள்
நெஞ்சை யள்ளும் சுப்புத் தாத்தா!
பஞ்சு மிட்டாய் குரலிசையில் பாடும்!
பாடும்நிலா! பல்லாண்டு வாழியவே!

தேடி வந்து தேனெடுத்து -தேசத்தில்
செந்தமிழ் கானமிசை இசைப்பவரே!
அரங்க மாநகர் அருங்கல்வி ஐயாவே!
ஏழிசை எழிலோடு  வாழியவே!

- புதுவை வேலு


jeudi 8 juin 2017

இன்பத்தின் இனிய வாசல்!


இன்பத்தின் இனிய வாசல்! திறந்திடு மகளே!


தாயும் சேயும் பலா வடிவில்
வாழ்வின்  தத்துவத்தை
முட்களால்....

முகாரி பாடுகின்றனரோ?

அன்னை அணைப்பை  
ஆராய்ந்தால் தெரியும்?
உள்ளிருக்கும் சுளைகள்
இனிமை  யென்று!


இன்பத்திலும் துன்பத்திலும்
பொறுத்திரு மகளே....
இன்பத்தின் இனிய வாசல்!
திறந்திடும் மகளே!


-புதுவைவேலு

mardi 6 juin 2017

"ஒரே தேசம் ஒரே வரி"



அந்தி மழை பெய்தாலும்
மந்திமகன் ஓதுங்க மாட்டேன்
பந்திபோட்டு காய் கறியை
முந்தி விக்காமல் போகமாட்டேன்!

தொந்தி பார்த்து தோழர்களே!
தொந்தரவு செய்யாதீர்!
காலணியை வீசி யெந்தன்
கவனத்தை சிதைக்காதீர்!

உழவர் சந்தையிலே!
உழவனுக்கு வேலையில்லை
உழுத நெல்லுக்கு விலை வைக்க
வாழும் நாட்டில் உரிமை இல்லை

பச்சை காய்கறிகள்..
பாட்டி வைத்திய நெறிமுறைகள்!
பக்குவாய் சொல்லுத் தாரேன்
பக்கத்தில் வந்து கேளுங்களேன்!


ஒரே தேசம்! ஒரே வரி!
என்று சொல்லி!
நன்றே பாடு ராமா!
வென்று ஆடு ராமா!
என்று கூறுங்களேன்.

-புதுவை வேலு!