lundi 30 janvier 2017

"இயற்கையின் இனிய ஆரூடம்"மரக் கிளையின்
கோடுகள்....
சொல்கிறது!

மனிதனின்
முக ராசியை!


புதுவை வேலு

vendredi 20 janvier 2017

புறநானூற்று பூ மகளே!- பொங்கல் விழா 2017

பொங்கல் விழா 2017  பிரான்சு தமிழ்ச் சங்கம் 


வலைப் பூ நண்பர்களே!
நல்வணக்கம்!


15/01/2017 அன்று நடந்தேறிய,

பிரான்சு தமிழ்ச் சங்கம் விழாவில் ,
இலக்கிய கருத்தரங்கில் இடம்பெற்ற புதுவைவேலுவின்
பொங்கி வழியும் பொங்கல் கவிதைக் காணொளி!
கண்டு மகிழ வேண்டுகிறேன்.


நட்புடன்,
புதுவை வேலு


நன்றி: காணொளி ஆக்கம் நண்பர்  கணேஷ் 

 mardi 17 janvier 2017

"இலக்கியக் கருத்தரங்கம்"

  இலக்கியக் கருத்தரங்கில் ஓர் கவியுரை


பிரான்சு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற
பொங்கல் விழா 2017 -ல் கலந்துகொண்டு
புதுவை வேலு  - வழங்கிய
இலக்கிய உரையின் வடிவம் வாசியுங்கள் எனது தமிழையும் கொஞ்சம் நேசியுங்கள்

தமிழர் உள்ளங்களில் உவகையை உருவாக்கி வரும் சங்கம்,
தமிழ் பொழிப் பற்றை உணர்வால் தட்டி எழுப்பும் சிங்கம்
உலகம் போற்றும் மாற்றுக் குறைவில்லாத தங்கம்
"பிரான்சு தமிழ்ச் சங்கமே! - நீ!!! வாழ்க பல்லாண்டு!


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்,
மல்லாண்ட திண்தோள் மணி வண்ணா! -

உன் சேவடி செவ்வித் திருகாப்பு!

எனது இனிய தமிழ் உறவுகளே!
உங்கள் அனைவருக்கும் எனது (புதுவை வேலு) அன்பான அகம் நிறைந்த  புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள்.

இலக்கியக் கருத்தரங்கில் கலந்துரையாடும் நல்வாய்ப்பு தந்தமைக்கு நன்றி!!
உலகுக்கு உணவு தரும் உழவர்க்கு நன்றி சொல்லும் நன்னாள்
"பொங்கல்" என்னும் பொன்னாள்!

'தைப் பிறந்தால் வழி பிறக்கும்',
'தரணியிலே ஒளி பிறக்கும்' -என்பார்கள்.

சிறப்பான வாழ்வினை வழங்க வரும் தைத் திருமகளை வரவேற்று
முதலில் ஒரு...
வரவேற்புக் கவிதை:-

எனது இனிய தை மகளே!
மண்வாசனை மணம் வீச,
மகிழ்ச்சிப் பால் பொங்க
கரும்பாய் இனிக்கும்...
நறும் பொங்கலை புசிப்பதற்கு,
புவிக்கு புறப்பட்டு வா! மகளே!!!
புறநானூற்று  பூ மகளே!!!


நன்றியென்னும்,
அழியாத கோலத்தை - தமிழ்
மொழியாலே புள்ளி வைத்து
பொங்கல் கோலமிட...

நற்பண்போடு வா மகளே!
நற்றமிழாள் நாமகளே!


இன்பத்தை விதைத்தபடி,
இயற்கையை துதித்தபடி,
இனிதே....
துள்ளித் துள்ளி வா மகளே!
வாடிப் பட்டி வழியாக!


மார்கழி மாதத்தின் மரு(று) மகளே,
தைத்திருமகளே!
பன்னிரு மாதத்தில்,
பத்தாமிடத்து பைங்கிளியே!
தமிழ் பாசுரங்களையெல்லாம்
வாசித்துவிட்டு வலம் வரும்
தை மகளே நீ! வருக வருக!


உழவுக்கும் தொழிலுக்கும்,
உறுதுணையாய் நிற்கும்,
எருதுவுக்கும், ஆநிரைக்கும்,
தைமகளே - உனது
வித்தக விரல்களால்
விருந்தளித்து உபசரிக்க,
விரைந்தோடி வா மகளே!


கன்னித் தமிழும், கன்றின் குரலும்
கருணைக் கலந்து,  வருணனை நினைந்து,
நன்றியைக் கூறும்...
'பொங்கல் கவி' பாட,


பாட்டரசியாய்...
பாரதியின் -கவித்தேர் இழுத்து
பவனி வா! தை மகளே!


எறும்புகள் ஏர் சுமந்து நடக்கும்
கரும்பு சோலைக்குள் வீசும்
நறுங்காற்றாய்!
என் சுவாசக் காற்றாய்! வா மகளே!மண்சட்டி மணிக் கழுத்தில்
மஞ்சள் மாலை சூட வா! மகளே!
கொஞ்சும் கிளியாய்
பறந்து வா மகளே!

கோல மயில் போலே!
கொள்ளையின்பம் கொழிப்பதற்கு,
கோகுலத்து வாசல் தேடி
கோபியராய் ஓடி வா தை மகளே!

எனது இனிய தமிழ் "தை" மகளே!!!யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஓர் பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஓர் வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறருக்கு இன்னுரைதானே!
-திருமூலர்-

துளசி,வில்வம், அருகம்புல், தும்பைப் பூ, இவை நான்கில் ஒன்றைவைத்து
வழிபட்டாலே இறைவனின் இணைப்பை நாம் பெற முடியும்.

"யாவர்க்கும் ஆம் பிறருக்கு இன்னுரைதானே!"

அதாவது? இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்து சுடு சொற்களால்
மடு போன்ற வடுவை பிறரது மனதில் ஏற்படுத்துவதால் என்னப் பயன் ?

எனவே இந்த இனிய பொங்கல் நன்னாளில், நாம் சுவைதரும் கரும்பினை சுவைப்பதோடு,பயன் தரும் இனிய சொற்களின் விளைச்சலைப் பெருக்கி, நல் அறுவடைச் செய்து வளம் சேர்ப்போமாக!!!


இந்த அவையில், இன்னுரை தருவதற்கு பல அறிஞர்கள் வந்துள்ளார்கள், அவர்களை வணங்குகிறேன்.

வார்த்தைச் சிறகுகளால் மனதை வருடுவதைவிட வேறு என்ன சுகம் உலகிலே இருக்க முடியும்?
                           
                                   
மக்களின் வாழ்வில் சோர்வினைப் போக்கி இன்பமும்,
மலர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஊட்டுவன விழாக்களே! எனலாம்.

விழாக்களின் நோக்கம் என்பது, மக்களை ஒன்றிணைத்து மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே ஆகும்.

விழாக்கள் வளர்பிறை மற்றும் மதி நிறைந்த நன்னாளில்  தொடங்கியதாக
அகநானூறு  பாடல் கூறுகிறது (141)

விழாவை அறிவிப்பவராக  குயவர்கள் இருந்தார்கள் என்ற செய்தியை  நற்றிணைப் பாடல்
உணர்த்துகிறது.

"மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி
புலிக்களார் கைப்பார் முது குயவன்
இடுபலி நுவலும் அகன்றலை மன்றத்து
விழவுத் தலைக் கொண்ட பழவிறல் மூதூர்"

(நற்/ 293)

இத்தகைய விழாக்களின் விழியாக தைத் திருநாளை, உழவுக்கு முதலிடம் தரும் தமிழர்த் திருநாளாம்
பொங்கல் திருநாளை நாம் காணலாம்.

பிரான்சு தமிழ்ச் சங்கம்
பிரஞ்சிந்திய சங்கங்கள் இணைந்து நடத்தும்

பொங்கல் விழா!

பொதிகை மலைத் தென்றலாய்
பொன்மனங்களைத் தழுவட்டுமே - சங்கே!


மங்கள விளக்கொளி
மாண்பொளி வீசட்டுமே- இங்கே


வரவேற்பு எழிலுரை
திருவாசகமாய் சிறக்கட்டுமே - சங்கே


முன்னிலையாளர் முத்தமிழ் பேச்சு
முக்கனியாய் இனிக்கட்டுமே - இங்கே!


தலைமைப் பண்பு
தரணியை வெல்லட்டுமே - சங்கே


நாட்டியத்தாரகையர் நடனம்
நளினவிழி பேசட்டுமே - இங்கே!


வாழ்த்துரை யாவும்
வளங்களைச் சேர்க்கட்டுமே - சங்கே!


கவிதைகள் யாவும்
பொங்கல் கரும்பாய் சுவைக்கட்டுமே - இங்கே!


துள்ளிசையோ துள்ளி வந்து
புள்ளிமான்போல் விளையாடட்டுமே - சங்கே!


கலைநிகழ்ச்சிகள் யாவும்
கவின்பொருள் பற்றி பேசட்டுமே - இங்கே!வள்ளுவர் போற்றும் உழவு

சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (1031)


உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும், அது ஏர்த் தொழிலின் பிந்தான் நிற்கிறது,வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு, மக்களின் வாழ்வாதாரம்,
 நாட்டின் பொருளாதாரம் அமைந்திருப்பதால் உழவுத் தொழிலே தலை சிறந்த தொழிலாக விளங்குகிறது என்கிறார் வள்ளுவர்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அக்தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து (1032)


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.


உழவின் சிறப்பை பற்றி  ஏர் எழுபது என்ற நூலில் கம்பர்கவிபுனைந்துள்ளார்.

ஜல்லிக் கட்டு என்றழைக்கப்பட்டு வரும் பண்டைத் தமிழர் விளையாட்டான ஏறு தழுவுதல்  பற்றிய பாடல்களை கலித்தொகையில் நாம் காணலாம்.

பள்ளு இலக்கியம்

சிற்றிலக்கிய வகைகளில் (96),
இனிமை நிறைந்த ஓர் இலக்கியம் பள்ளு இலக்கியம்.
உழவுத் தொழில் செய்வோரை பள்ளர்கள் என்றே இந்நூல் கூறுகிறது.
எனவே உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம்
பள்ளு இலக்கியம் எனலாம்.

வீரமா முனிவர் இயற்றிய சதுரகராதியில், தொகை அகராதியில் உழத்திப் பாட்டின் விளக்கம் நன்கு கூறப்பட்டுள்ளது.

பள்ளு இலக்கியம் இந்நூலில், நெல் விதைகளின் வகைகளை "பள்ளன் " சொல்வதாக பள்ளு இலக்கியத்தில்  ஓர் பாடல் வருகிறது:

"சித்திரக் காலி, வாளான், சிறை மீட்டாண், மணல்வாரி,
செஞ்சம்பா, கருஞ்சூரை, சீரகச்சம்பா,
முத்து விளங்கி, மலை முண்டன், பொற்பாளை, நெடு
மூக்கன்,அரிக்கிராவி, மூங்கிற் சம்பா,
கத்தூரி வாணன், கடைக்கழுத்தன்,இரங்கல் மீட்டான்,
கல்லுண்டை பூம்பாளை, பார்க்கடுக்கன், வெள்ளைப்
புத்தன், கருங்குறுவை, புனுகுச் சம்பா"


- வியப்புக்குரிய நெல் விதைகளின் வகைகளை பள்ளன்  பாடலாய் அன்று விதைத்தை, 
இன்று நாம் எழுத்தளவில் அறுவடை செய்து கொண்டு இருக்கிறோம்.

எனவே! (இறுதியாக)


தமிழ்கூறும் நல்லுலகில், 

ஆலம் விழுதினைப் போல்,
விழாக்கள் ஆயிரம் வந்தாலும்,
அதன் "வேர்" எனத் தமிழர்த் திருநாளாம்


"தைப் பொங்கல்" இருக்கும் வரை,

அதில் வீழ்ந்து விடாது நாம் இருப்போம்!!!


"பொங்கல் விழா"

தாழ்ந்து விடாது நாம் காப்போம்!!!


-என்று சொல்லி  இனிய வாய்ப்புக்கு மீண்டும் ஒரு முறை 
நன்றியை சொல்லி விடை பெறுகின்றேன்.
நன்றி! வணக்கம்!  

  -புதுவை வேலு -


vendredi 13 janvier 2017

"பொங்கலோ பொங்கல்"உள்ளத்தில் உவகை ஊற்றெடுக்க
தெள்ளமுது தேன் தமிழை வார்த்தெடுக்க
வேங்கடவன் சொர்க்க வாசல் நடை திறக்க

வெல்லம்போல் இனிக்கட்டும் தைப் பொங்கல்
செங்கரும்பு சுவையூறும், செந்தமிழ் பொங்கல்!

"பொங்கலோ பொங்கல்"

கிலத்தை ஆளும் அன்பு பொங்கல்
அறியாமை அகற்றும் கல்விப் பொங்கல்
ற்றலை வளர்க்கும் அறிவுப் பொங்கல்
ஆதித்யனை வணங்கும் நன்றி பொங்கல்

தயம் இசைக்கும் இலக்கியப் பொங்கல்
ன்றவள் ஆசியினை பேணும் பொங்கல்,
ழவின் உயர்வை பேசும் பொங்கல்

ற்றாய் சுரக்கும் தமிழுணர்வுப் பொங்கல்


ங்கும் தேமதுரத் தமிழோசை...
இசைக்கும் பொங்கல்,
றுதழுவோர் சிறப்பை பறைசாற்றும் பொங்கல்
ந்திணை வாழ்த்தும் பைந்தமிழ் பொங்கல்!

ன்றே குலம் என்றே சொல்லும் பொங்கல்
ங்கும் நலம் வாழ வாழ்த்தும் பொங்கல்!

வைத் தமிழ் போல் வாழும் பொங்கல்
து வரமாய் கிடைக்கும் பொங்கல்


-புதுவை வேலு

நட்பு உள்ளங்கள்  யாவருக்கும்,
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
 புதுவை வேலு