புலவரே இல்லை!
முன்னொரு காலத்தில் வைரபுரி நாட்டை
இளந்திரையன் என்ற அரசர் மிக சிறப்பாக ஆட்சி செய்து வந்தார்.
ஒருநாள்!
"அமைச்சரே! இன்னும் சில தினங்களில்
எனது பிறந்த நாள் விழா வரப்போகிறது. அறிஞர்களுக்கு, என்
பிறந்த நாள் விழாவில் பரிசுகள் வழங்க வேண்டும்.
யார் யாருக்கு வழங்கலாம்?'' என்று
கேட்டார் அரசர்.
""அரசே! துருபத், கலாதர் இருவருமே
பெரும் புலவர்கள்.
தங்கள் பாடல்களால்
நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்கள். அறிவிலும், ஆற்றலிலும் ஒருவருக்கு ஒருவர் இணையானவர்கள். அவர்கள்
இருவருக்கும் பரிசு வழங்கலாம் என்பது என் கருத்து,'' என்றார்
அமைச்சர்.
இரண்டு
புலவர்களுக்கும் அரசர் அழைப்பு அனுப்பினார்.
இருவரும் மகிழ்ச்சியுடன் அரசவைக்கு வந்தனர். அவர்களைச் சிறப்புடன் வரவேற்றார் அரசர்.
இவர்களின்
திறமையையும், சிறப்பையும் அவையில் உள்ளவர்கள் அறிய வேண்டும். அதன் பிறகு
இவர்களுக்கு பெரும் பரிசு வழங்க வேண்டும் என்று
நினைத்தான் அரசர்.
""அவையோர்களே... இவர் தான் பெரும் புலவர் துருபத். அடுத்து இருப்பவர் பெரும் புலவர்
கலாதர். இவர்களுடைய புலமைச் சிறப்பை உலகமே
அறியும்,'' என்று தொடங்கினார் அரசர்.
""பெரும் புலவர் துருபத் அவர்களே!
உங்கள் நண்பர் கலாதர் பற்றி இந்த அவைக்கு அறிமுகம் செய்து வையுங்கள்,'' என்று
சொல்லி அமர்ந்தார் அரசர்.
சிந்தனையில்
ஆழ்ந்த துருபத், "நான் இப்போது
கவனமாகப் பேசவேண்டும். கலாதரைப் பற்றி உயர்வாகப் பேசினால், அரசர்
அதை நம்பினாலும் நம்புவார். எனக்கு கிடைப்பதை விட
அவருக்கு அதிகப் பரிசு கிடைக்கும். அதற்கு
நானே காரணம் ஆவதா?' என்று
நினைத்தார்.
""அரசே! நண்பர் கலாதரைப் பற்றி
பேச சொல்லிவிட்டீர்கள். உங்கள் உள்ளம் வருந்தும் என்றாலும், அவரைப்
பற்றிய உண்மையைச் சொல்வது என் கடமை.
""கலாதர் புலவரே அல்ல. யாப்பு இலக்கணம் பற்றி
அவருக்கு ஒன்றுமே தெரியாது. எந்தத் தகுதியும் இல்லாத அவரை நான் ஒரு கழுதையாகத்தான் மதிக்கிறேன். நான் என்ன சொல்கிறேனோ
அதை அப்படியே எழுதித்தான் அவர் புகழ்
பெற்றுள்ளார்,'' என்றார்.
இப்படி
ஓர் அறிமுகத்தை எதிர்பாராத அனைவரும்
திகைத்தனர்.
"நாடே போற்றிப் புகழும் கலாதரைப் பற்றி இவர் இப்படி பொய் சொல்கிறாரே... இவரைப் பற்றிக்
கலாதர் என்ன சொல்கிறார். பார்ப்போம்' என்று
நினைத்தார் அரசர்.
""கலாதரே! உங்கள் நண்பர் துருபத்தை இங்கு உள்ளவர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்,'' என்றார்
அரசர்.
"துருபத்தை விட நிறைய பரிசு எனக்கே கிடைக்கவேண்டும். அவரைப்
பற்றித் தாழ்வாகப் பேசினால்தான் என் எண்ணம்
நிறைவேறும்' என்று நினைத்த கலாதர் எழுந்தார்.
"அரசே! பிறரைப் பற்றிக் குறை சொல்வது எனக்குப்
பிடிக்காது. அரசவையில் எப்போதும்
உண்மையையே பேச வேண்டும் என்பதால், நண்பனைப்
பற்றிய என் கருத்துக்களை உங்கள் முன்
வைக்கிறேன்.
""அவர் புலவர் அல்ல! இப்படிச்
சொல்லி எல்லாரையும் நம்பவைத்து ஏமாற்றி இருக்கிறார்.
உண்மையில் அவர் தான் கழுதை, நான் எழுதும்
பாடல்களைத் தான் எழுதியது போலக்காட்டி பேரும் புகழும் பெற்றுள்ளார்,'' என்றார்.
இருவருடைய
பேச்சையும் கேட்ட அரசர் திடுக்கிட்டார்.
"எத்தனையோ சிறந்த நூல்களை அவர்கள் எழுதி என்ன
பயன்? சிறந்த அறிஞர்களாக இருந்தும் பொறாமையால் எத்தனை சிறியவர்களாகி
விட்டனர்' என்று நினைத்தார் அரசர்.
அமைச்சரை
அருகில் அழைத்து மெல்லிய, குரலில் ஏதோ சொன்னார் மன்னர்.
""அப்படியே செய்கிறேன்!'' என்று
சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார் அமைச்சர்.
சிறிது
நேரத்தில் பட்டுத் துணியால் மூடப்பட்ட இரண்டு தட்டுகளை
வீரர்கள் கொண்டு வந்தனர்.
""புலவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு பரிசுத் தட்டைத் தருக!'' என்று
கட்டளையிட்டார் மன்னர்.
புலவர்கள் இருவரும் ஆர்வத்துடன் பரிசுத் தட்டை வாங்கினர்.
பட்டுத்
துணியை விலக்கிப் பார்த்த அவர்கள் அதிர்ச்சி
அடைந்தனர்.
ஒவ்வொரு தட்டிலும் "பசும்புல்" வைக்கப்பட்டு
இருந்தது.
""அரசே! எங்களை அவமானப்படுத்தவா! இங்கு அழைத்தீர்கள்? பசும்
புல்லைப் பரிசாகத் தருகிறீர்களே?'' என்று
கோபத்துடன் இருவரும் கேட்டனர்.
""புலவர்களே! உங்களைப் பற்றி எனக்கு அதிகம்
தெரியாது. நீங்கள் இருவரும் நண்பர்கள்.
ஒருவரை பற்றி இன்னொருவருக்கு நன்றாகத் தெரியும்.
"அதனால் அடுத்தவரைப் பற்றி அறிமுகம் செய்யும்படி
உங்கள் இருவரையும் கேட்டேன்.
""நீங்கள் இருவருமே ஒருவர் இன்னொரு வரைக் கழுதை என்கிறீர்கள்.
கழுதைக்குப்
பிடித்தமானது பசும்புல் தானே?
அதனால் தான் உங்களுக்கு பசும் புல்லைப் பரிசாகத் தரச் சொன்னேன். என்
மீது என்ன தவறு?'' என்று கேட்டார் அரசர்.
இதைக்
கேட்டு அவையில் இருந்த எல்லாரும் சிரித்தனர்.
"பொறாமையால்" ஒருவரை ஒருவர் கழுதை என்று சொல்லி, இருவரும் கழுதையாகி விட்டோம்!' என்று
வருந்தி தலை கவிழ்ந்தபடியே, அங்கிருந்து சென்றனர் இருவரும்.
எனவே!!!
நம்முடன் நட்பு பாராட்டுபவர்கள் வானத்தை எட்டும் வளர்ச்சியை அடைந்தாலும், நாம் அவ்வானத்தை அழகு செய்யும் நிலவாக வலம் வர வேண்டும். அப்படி வலம் வருவோமே ஆயின் நமது நட்பின் வெளிச்சம் திக்கெட்டும் பரவும்! திகட்டாத "தமிழ்" போல்!
பகிர்வு:
புதுவை வேலு
நன்றி: தினமலர்