விடுதலைத் திருநாள்
(புதுவை சுதந்திர நாள்)
பூம்பொழில்
புதுவையில் சுதந்திர கீதம்
இசைத்த இன்பநாள்
இன்று!
செம்மொழி
பேசும் செந்தமிழ் மக்கள்
இந்தியாவுடன்
இணைந்தனர் அன்று!
ஐரோப்பியர் அகன்ற
பிரெஞ்சு தேசம்
கலை பண்பாடு எழிலை பேசும்
வைரவிழா காணும் வளர் புதுவை
பைந்தமிழை
சுவைத்தே வாழ்க!
பாட்டுக்கோர்
புலவன் நம் பாரதிக்கு
புகலிடம்
அளித்தபூமி புதுவை!
அரவிந்தரின்
அருள் ஒளி வீசிய
ஆன்மீக பூமி
புதுவை!
புரட்சிக் கவிஞர் பாரதி தாசனார்
பிறந்த பூமி
புதுவை!
உதிரம் சிந்தி
உயிர்த் தீ வளர்த்த
திருவுள்ள மிகு தியாகிகளை !
போற்றி
புகழ்பாடும் புதுவை அரசை
வாழ்த்துவோம்
வாரீர்! வாரீர்!
புதுவை வேலு
புதுச்சேரி, அக்.31–
புதுவை சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள்
வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
அவை வருமாறு:–
முதல்–அமைச்சர் ரங்கசாமி:–
என் அன்பிற்கினிய புதுவை மக்கள் அனைவருக்கும் முதற்கண் எனது இனிய ‘புதுவை
விடுதலை நாள்’ நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
தொன்மை, பாரம்பரியம், கலாச்சாரம்,
இலக்கிய வளமை என அனைத்திலும் தனித்துவம் பெற்று விளங்கும் நமது
புதுவை மாநிலம் பிரெஞ்சியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த மகத்தான நாள்
இந்நாள்.
1954–ம் ஆண்டு நவம்பர் 1 என்ற இந்நாளில்
தான் பிரெஞ்சுக்கொடி இறக்கப்பட்டு இந்திய தேசிய மூவர்ணக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று
சிறப்புமிக்க நாள்.
இந்த நாள் புதுவை விடுதலை நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்ற நீண்ட நாள்
கோரிக்கை கைவரப் பெற்றுள்ளது. இது நம் மண்ணிற்கு மேலும் ஒரு பெருமையாகும். நமது
தேசிய சுந்திரதினவிழாவை போற்றுவது போலவே, புதுவை விடுதலை
நாளை போற்றுவோமாக.
இந்த அரும்பெரும் விடுதலையை நமக்களித்த தியாகிகளையும் அவர்தம் தியாகங்களையும்
இந்நாளில் நினைவு கோருவோம். ஒருமைப்பாடு, சமத்துவம்,
சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளோடு உலக சமுதாயத்திற்கே வழிகாட்டியாக
இந்தியா திகழ்கிறது.
இதன்வழி நமது மாநிலமும், மக்களும் தேச
நலன் காக்கும் சிந்தனையோடு செயல்பட்டு விளங்குவது இந்த அரசின் எண்ணமாகும்.
மேலும், நமது மாநிலத்தின் கல்வி, சுகாதாரம்,
வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்த இவ்வரசு அயராது பாடுபடும்
என்பதையும் இவ்வேளையில் தெரிவித்து கொள்கிறேன். நாம் நமது வேற்றுமைகளை மறந்து
மாநிலத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, உயர்வு,
தொன்மை, சகோரத்துவம் ஆகியவற்றை இவ்விடுதலை
நாள் வேண்டுதலாக ஏற்று அதை நோக்கிய நமது செயல்பாட்டை வழிவகுப்போம்.
நமது புதுச்சேரி மாநிலம் எழில்மிகு ஏற்றமிகு மாநிலமாக என்றும் தழைக்க
பாடுபடுவோம். இவ்விடுதலை நாள் கொண்டாட்டத்தில் மீண்டும் விடுதலை போராட்ட வீரர்களை
வணங்கி, எனது விடுதலை நாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
ராதாகிருஷ்ணன் எம்.பி.:–
புதுச்சேரி மாநிலத்தின் 60–வது விடுதலைநாள் திருவிழாவைக்
கொண்டாடிடும் மாநில மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கிறேன்.
1954–ம் ஆண்டு புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பிரெஞ்சுக்கொடி
கீழிறக்கப்பட்டு, இந்திய தேசியக்கொடி பட்டொளி வீசி பறந்தநாள்
நவம்பர் 1–ந் தேதி ஆகும். இதுவே நம் விடுதலைநாள்.
நவம்பர் 1–ந் தேதியை புதுச்சேரி விடுதலைநாளாக கொண்டாட வலியுறுத்திய இயக்கங்களுக்கும்,
இந்த நாளை நமது அதிகாரப்பூர்வமான விடுதலைநாளாக அறிவித்து, வரலாற்றுப்பிழையை சரிசெய்த முதல்வருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து
கொள்கிறேன்.
விடுதலை போரில் பங்கேற்ற தியாக மறவர்களையும், பஞ்சாலை
தொழிலாளர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது. இந்த விடுதலைநாளில்
புதுச்சேரி மாநில உயர்வுக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நாம்
வலுசேர்ப்போம். பெற்ற சுதந்திரத்தை பேணிகாத்து, மாநில
வளர்ச்சிக்கு எந்நாளும் பாடுபடுவோம் என்ற உறுதியை ஏற்போம்.
ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ.:–
புதுச்சேரி மாநிலம் விடுதலை பெற்ற இந்த 60–ம் ஆண்டு வைர
விழா நாளில், புதுவை விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளையும்,
அவர்களுக்கு தோள் கொடுத்தவர்களையும் இந்த நாளில் நன்றியோடு நினைவு
கூர்ந்து பார்க்க வேண்டும்.
இதுமட்டுமின்றி 1955–ல் அமைந்த
புதுவை அரசின் முதல் முதல்–அமைச்சரான பக்கிரிசாமிபிள்ளை
தலைமையிலான அமைச்சரவை சகாக்களும், 39 எம்.எல்.ஏ.க்களும்
புதுவை மாநிலத்துக்கு தொலைநோக்கு பார்வையோடு ஜிப்மர் மருத்துவமனை, 54 அரசு பள்ளிகள், கிராம மருத்துவமனைகளையும் அமைத்து
கொடுத்தனர்.
இந்த இனிய புதுவை விடுதலை வைர நாளில் இவற்றையெல்லாம் நன்றியோடு நினைவு
கூர்ந்து புதுவை மக்களுக்கு புதுவை விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவித்து
கொள்கிறேன்.
நன்றி: மாலைமலர்
(செய்தி)