vendredi 4 mai 2018

சித்திரை நிலவே வா!

வணக்கம்!
செந்தமிழ் உறவுகளே!

பிரான்சு,
திருவள்ளுவர் கலைக்கூடம், பிரான்சு,   (21/04/2018)  நடத்திய 14- ஆம் ஆண்டு

சித்திரைத் திருவிழாவில்... கவியுரை கருத்தரங்கில் பங்கேற்று
கவியுரை வழங்கிய நிகழ்வு:- 


                                 கவிதை ஆக்கம்:- புதுவை இரா.வேலு, பிரான்சு.



சித்திரை நிலவே! சித்திரை நிலவே!
சிந்தையில் இருப்பாயே!
எத்திரை யிட்டு எவர் தடுத்தாலும்
முத்திரைமுகம் பதிப்பாயே!


நித்திரை வேளை நின்று வானில்
நித்தங்குளிர் தருவாயே
மத்தளங் கொட்டி மங்கள வாழ்த்து
புத்தாண்டுச் சொல்வாயே!


புத்தகம் பேசும் பூங்கவிப் பொருள்
மொத்தமும் நீ!தானே!
சத்தமிட்டு முழங்கும் சங்கீத வானின்
சாகீத்யம் நீ!தானே!


வித்தக விழிகள்வியக்கும் -கலைச்
சித்தன்னவாசல் நீயன்றோ?
பத்துத் திங்கள் பச்சிளங் குழந்தையின்
பால்!நிலா நீயன்றோ?


கைத்தலம் பற்றும் கன்னியரின் காதல்
கைக்கூடுவது சித்திரையில்
மெய்த்தடம் போற்றும் சித்தர் பூமியில்
கிரிவலம் பௌர்ணமியில்.


உறவுகள் சங்கமம் ஆற்றுப்படுகையில்
உறவாடுவது உன்னாலன்றோ?
நீலக்கடல் நடுவே நிலாச் சோறு
கோல எழிலன்றோ?


சித்திரை நிலவே சித்திரை நிலவே!
முத்தமிழ்ப் பாடி! எழு!
இல்லாமை நீங்கி! வெள்ளாமை ஓங்க!
இறையாண்மைச் சொல்லியெழு!


சொக்கனுடன் மீனாட்சி வைபவத் திருக்காட்சி
கண்டது நீயன்றோ?
வைகையில் கள்ளழகர் நீராடிச் சென்றது
சித்திரையின் சிறப்பன்றோ?


திருநங்கையர் அரவானை நினைந்தது
சித்ரா பௌர்ணமியில்
சித்ர குப்தன் தோன்றிய மாதம்
சித்திரைப் பௌர்ணமியில்!


மங்கள் இன்னிசை மகிழ்ந்து முழங்கிட
திங்கள் சித்திரை 'விளம்பி' பிறந்திட
வங்கக் கடல் வானில் முழுநிலவாய்
தங்கத்தாரகை சித்திரை வந்தாள்.


பங்குனித் திங்கள் பாங்குடன் செல்ல
பொங்கு தமிழ் மகள் பொலிவுடன் மெல்ல
தங்க அடியெடுத்து தரணியில் வந்தாள்
பூங்கவிதைத் தேன் நிலவாய் நின்றாள்


வற்றாத வளமை ஊற்றாகப் பெருக
பற்றோடு வா! நிலவே!
கற்றார் காமுறக் கல்வி நிலவாய்
கவினொளி தா! நிலவே!


நீர் யின்றி வேர் சாயும் பயிர்
உயிர்வாழச் செய்திடுவாய் -சித்திரையே
பார் போற்ற பகிர்ந்தே காவிரியை
பலனுறவே! தந்திடுவாய்!


தாய்மொழிக் கல்வி தேய்பிறை யானால்
வாய்மொழி வானம் தேசியம் பாடும்
பைந்தமிழ்ச் சிறப்பை வையம் வாழ்த்த
வந்து சொல்! சித்திரை நிலவே!


கற்பி, ஒன்றுசேர், போராடு,
அஞ்சாதே! நிமிர்ந்து நில்!
புரட்சியின் பூர்வீகம் அம்பேத்கார் பூமியில்
பூத்ததினம் தமிழ்ப் புத்தாண்டு!


பஞ்சாங்கம் படித்து பலன் அஞ்சாது
பகரும்நாள் சித்திரை திருநாளன்றோ?


கவியரங்கில் கவியைக் கேட்டு
கையோசை எழுப்ப...
புவிக்குப் புறப்பட்டு வா!
பூந்தேன் சித்திரைநிலவே!

-புதுவை இரா.வேலு