வெட்கத்தின் வெளிச்ச மிங்கு
வெள்ளி நிலவில் மிளிருதடி
சொல்லின் எண்ண மிங்கு
தேன் கிண்ணத்தை சுவைக்குதடி
அல்லித்தண்டு ஐந்துவிரல்களில்
ஐங்குறுநூறு படிக்குதடி!
மூன்றடி சிற்றெல்லை ஆறடி பேரெல்லைக்குள்
அடங்கி அருங்கவி வடிக்குதடி!
முல்லைத் திணை முகில்வண்ணன்
முன்னேவந்து முழங்கை பற்றுதடி!
எல்லையோடு ஏற்றக் காதல்
முல்லைப் பூவாய் மணக்குமடி
இராதைக்கேற்ற கண்ணன் கானம்
இரவிலும் இனிமை சேர்க்குமடி!
இமை மூடாத இளம் விழிகள்
ஊமை விழியாய் உன்னைக் காணுதடி.
-புதுவை வேலு