மாத்தியோசி
காண்பதெல்லாம் கனவா ? அல்லது நனவா?
அவனது கண்களை அவனாலே நம்ப முடியவில்லை சூர்யாவுக்கு!
எப்படி இந்த ஏழாம் பொருத்தம் ?
எட்டாவது அதிசயமாக மாறியது?
தனது மனதின் தம்புராவை தாருமாறாய் மீட்டியபடி,
தனது மனைவி ஹேமாவுக்கும், தாய்
பாக்கியத்துக்கும் இடையே நடைபெறும் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சிகளை, "லைவாக"
பார்த்துக் கொண்டே இருந்தான். சமீபத்திய, உலக கோப்பை கிரிக்கெட் மேட்சில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும்
விளையாடிய மேட்சை பார்த்ததை போல!
அத்தை வாங்க! எங்களோட வந்து உட்காருங்க!
டீவி(TV) போடட்டுமா?
வாணி ராணி சீரியல் வர்ற் நேரம். பாருங்களேன்!
வேண்டாம் ஹேமா!
கரெண்ட் பில் அதிகமாயிடுச்சின்னு சண்டைக்கு வருவியே?
அதெல்லாம் அன்றைக்கு, இன்னைக்கு ஸ்பெஷல்?
கேள்விக்கு இடமே இல்லை ! என்று சொல்லிவிட்டு ரிமோட் எடுத்து ஆன் செய்தாள் !
ஆஹா!
‘’அவள் பூக்களாலே
கோர்த்து வைத்த அன்பின் மாலை!
அவள் உள்ளமெல்லாம் ஓய்வில்லாமல் ஓடும் சாலை!
அவள் தியாகம் என்னும் தீபம் ஏற்றும் விடியற்காலை!
இவள் தைரியத்தின் தேர்வு மட்டும் எழுதும் சேலை!’’
என, சீரியலின் டைட்டில் சாங் கேட்டதுமே பாக்கியம்
உண்மையிலேயே
பாக்கியவதியாய் ஆகிதான் போனாள்!
சீரியலின் விளம்பரம் நிகழ்வின்போது, சட்டென்று எழுந்து,
சிட்டாக பறந்து சென்று அத்தை குடித்த காபி டம்ளரை கொண்டுபோய், அடுப்படியில் கழுவி
வைத்து விட்டு வந்தமர்ந்தாள் ஹேமா!
சீரியலின் முடிவில் கதாநாயகியின் குளோசப் ஷாட்டோடு
தொடரும்! "போட்டுட்டானே!"
என்று முனுமுனுத்தபடியே, எழுந்தார்கள் மாமியாரும்
மருமகளும் ஒருமித்த குரலை ஒலித்தபடி!
இவர்கள் இருவரின் "லைவ்" நிகழ்ச்சிகளை
பார்த்து மனதுக்குள் "லைக்" கமெண்ட்ஸ் கொடுத்தபடியே அவனது அறைக்குள்
சென்று அமைதியாகி அமர்ந்தான் சூர்யா!
சற்று நேரத்தில்,
ஹேமாவும் வந்துவிடவே!
ஒருநாள் முதல்வராய் இருந்தால்கூட செய்ய முடியாத
சாதனைகளை எப்படி உன்னால் செய்ய முடிகிறது?
எப்படி இந்த அதிரடி ஆட்டம்?
அட்டகாசமான மாற்றம்? என்றான், மனைவியை பார்த்து!
அவளது பதில் பளீர் வெளிச்சத்தை பாய்ச்சியது
அறை முழுவதும்!
மாற்றம் இல்லைங்க!
"ஏமாற்றம்"
ஏமாற்றம் !
என்றாள்!
சுவரில் மாட்டியிருந்த "தேதி காலண்டரை"
பார்த்த படியே!
காலண்டரை பார்த்தான் சூர்யா....
இன்று.....
ஏப்ரல் 1
"முட்டாள் தினம்"
என்றே சிரித்தது காலண்டர் சூர்யாவை
பார்த்து!!!!