jeudi 31 juillet 2014

இன்று ஒரு தகவல் (கெட்டதிலும் நல்லதையே பார்!)









இன்று ஒரு தகவல்



கெட்டதிலும் நல்லதையே பார்!

 

 






பார்க்கும் பார்வை சரியாக இருந்தால், காணும் காட்சி நல்லனவாக இருக்கும்...' என்றனர் மகான்கள். மனித மனங்களை ஆசை, கோபம், ஆணவம் ஆட்டி வைப்பது போல், பிறரிடம் குறை காணும் மனோபாவமும் சிலரை ஆட்டி வைக்கிறது. இத்தகைய குறை காணும் மனோபாவம் நீங்கினால், அவன் எல்லாருடைய அன்புக்கும், மரியாதைக்கும் உரிய மனிதன் ஆகி விடுவான். இதற்கு ஒரு கதையே இருக்கிறது...
பூலோகத்தில், கிருஷ்ண தேவன் என்று ஒரு அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் நற்குணங்களின் பிறப்பிடம்; எத்தகைய கெட்ட தன்மையிலும் நல்லதையே காணும் சிறப்பு குணம் கொண்டவன். இம்மன்னனின் குணங்களைப் பற்றி ஒருநாள் தேவர்களிடம் சிலாகித்து பேசினான் தேவேந்திரன்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்களில் ஒருவன், 'இந்த தேவேந்திரன் சொல்லும் அந்த அரசனை சோதித்து பார்க்க வேண்டும்...' என்று நினைத்தான்.
அதன்படி, கிருஷ்ணதேவன் நாட்டிற்கு வந்தவன், அரசன் வரும் வழியில், ஒரு நாயைப் போல் தன் வடிவத்தை மாற்றி, இறந்து கிடப்பது போல் படுத்திருந்தான்.
செத்துக் கிடந்த நாயின் உடம்பில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்தப் பக்கம் போன அனைவரும், நாற்றத்தை தாங்க முடியாமல், மூக்கை பொத்தியபடி சென்றனர்.
அதேசமயம் அந்தப்பக்கம் வந்த அரசன், நாயின் துர்நாற்றத்தை பொருட்படுத்தாமல், 'இறந்துபோன இந்த நாய்க்குத்தான் எத்தனை அழகான பல்வரிசை...' என்று சொல்லி, ஆச்சரியப்பட்டான்.
அதைக்கேட்டதும், நாயாக இருந்த தேவன், தன் சுயவடிவோடு, மன்னன் முன் தோன்றி, 'மன்னா... பிறர் குற்றத்தைப் பார்க்காத நீயே உண்மையில் நற்பண்புகள் வாய்ந்தவன்...' என்று சொல்லி பாராட்டினான்.
அந்த மன்னன், கிருஷ்ண தேவனைப்போல, இறந்து கிடக்கும் விலங்குகளிடம் கூட, நல்லதை பார்க்கும் மன பக்குவம் நமக்கு இல்லாவிட்டாலும், பரவாயில்லை. நம்முடன் இருக்கும் சக மனிதர்களின் குற்றங்குறைகளைப் பார்க்காமல், அவர்களிடம் இருக்கும் நல்லதையே பார்க்கும் அளவிற்குப் பக்குவம் பெற முயல்வோம்.

விதுர நீதி!: விவேகம், உயர்குடிப் பிறப்பு, புலன் கட்டுப்பாடு, கல்வியறிவு, வீரம், மிதமான பேச்சு, தான தருமம் செய்தல், நன்றியுணர்வு இந்த எட்டு பண்புகளும், மனித வாழ்க்கையை புகழ் பெறச் செய்கின்றன.


புதுவை வேலு
நன்றி:(parasuraman/sridharan/DMR)

கண்ணன் ஒரு கைக் குழந்தை கண்கள் சொல்லும் பூங் கவிதை







கண்ணன் ஒரு கைக் குழந்தை
கண்கள் சொல்லும் பூங் கவிதை












17/0/8/2014 -அன்று வரவிருக்கும் "கிருஷ்ண  ஜெயந்தி யை முன்னிட்டு

இல்லங்களைத் தேடி,நல்ல உள்ளங்களைத் தேடி, அன்பைத் தேடி ஆபத் பாண்டவன்

குழலின்னிசை இசைக்கும் கண்ணனின் வருகை துவங்கி விட்டதோ!


புதுவை வேலு
நன்றி:(dinakaran)

mercredi 30 juillet 2014

இன்று ஒரு தகவல் (மதிப்புமிக்க மௌனம்)






இன்று ஒரு தகவல்


மதிப்புமிக்க மௌனம்


















இந்த உலகம் சப்தத்தால் சுழன்று கொண்டிருக்கிறது. நல்ல பேச்சு, தீயப் பேச்சு என்று எங்கும் பேச்சுக் குரல்கள். கைப்பேசியின் விற்பனையை அதிகரிக்கவும், சந்தாதாரர்களிடமிருந்து அதிகக் கட்டணத்தை வசூலிக்கவும் பேசுங்க பேசுங்க பேசிகிட்டே இருங்க என்று விளம்பரம் வேறு. அதனால், எல்லோர் கழுத்திலும் கைப்பேசிகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. தேவையற்ற பேச்சுகளால், துன்பமே மிஞ்சுகின்றது. ஒன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது மற்றவர்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசி, மெளனத்தைக் கலைத்து துன்பப்படுகிறார்கள். சொல்வதிலேயே மிக உயர்ந்த முறையாக மெளனம் விளங்குகிறது. வாழ்வில் அமைதி பெற மெளனம் அடித்தளம் இட்டுக் கொடுக்கிறது. பேசாத பேச்சுக்கு நாமே எஜமானனாக இருக்கிறோம். மெளனம் என்பது அழகிய திரை. சத்தம் என்பது அதில் விழும் பொத்தல் என்பார்கள்.
மெளனம் பல்வேறு பரிமானங்களில் நம்மை ஆட்கொள்கிறது. வெற்றியின்போது அடக்கமாகவும், தோல்வியின்போது பொறுமையாகவும், உறவுகள் பிரியும்போது துக்கமாகவும், பிரார்தனையின்போது இறைவனை உணர்த்தும் சக்தியாகவும், உண்மையானவர் வெற்றி பெறும்போது மகிழ்ச்சியாகவும், தனிமையின் போது ஊன்றுகோலாகவும், எதிரிகள் ஏளனம் செய்யும்போது கேடயமாகவும், இன்னல்களை எதிர்கொள்ளும் போது வலிமை மிக்க வன்முறையற்ற ஆயுதமாகவும் மெளனம் விளங்குகிறது.










வார்த்தைகள் இல்லாத புத்தகமாக மெளனம் விளங்குகிறது. மெளனமாக சிந்திக்கும் போதுதான் மனதில் புதிய கருத்துகள் ஒளிர்கின்றன. எண்ணங்கள் பளிச்சிடுகின்றன. சிலர் ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரியில் பேசி, கேட்பவர்களைக் கொட்டாவி விட வைப்பார்கள். அதிகம் பேசுகிறவனை உலகம் விரும்புவதில்லை. எப்போதும், மெளனமாக இருக்க கற்றுக் கொண்டால் பிரச்னை ஏதும் இல்லை. மெளனமாக இருப்பவர்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று சிலர் எண்ணுவார்கள். அந்த சமயத்தில் மெளனத்தைக் கலைத்து ஏதேனும் சொல்லி உண்மையில் மூடர் என்பதை நிரூபிக்கக் கூடாது. சங்கடமான நேரங்களில் மெளனமாக இருப்பதே சாலச் சிறந்தது. கோபம் எதிர் கொண்டோரை பேச்சு அழிக்கும். ஆனால், கோபத்தில் நாம் காக்கும் மெளனம் நமக்கு பாதுகாப்பாக விளங்குகிறது. இதைத்தான் வள்ளுவரும், "யாகாவராயினும் நாகாக்க' என்றார்.

வாய் திறவாதார் மனத்திலோர் மாடுண்டு என்றார் திருமூலர். அதவாது யார் வாய் திறவாமல் மெளனமாக இருக்கிறார்களோ அவர் மனதில் ஒரு செல்வம், சக்தி உருவாகும் என்பது அவர் கருத்து. மெளனம் என்ற மரத்தில்தான் அமைதி கனிகள் காய்க்கும். மெளனம் கடவுளின் மொழி, அதனால்தான் பூக்கள் பேசுவதில்லை என்றார் ஒரு கவிஞர். நம் அமைதி பிறருக்கு தண்டனையாகிறது. நா காக்க வேண்டும் என்பதற்காக, சும்மா இரு சொல் அற என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்

சிலர் பேசிக் கொண்டேயிருப்பார்கள். விதண்டாவாதம் புரிவார்கள். தான் செய்த ஒரு சிறு நல்ல காரியத்தை அனைவரிடமும் சொல்லி தற்பெருமை அடித்துக் கொள்வார்கள். நாவினால் முகஸ்துதி செய்து ஒருவரை மகிழ்ச்சியாக வைத்திருந்து, காரியங்களைச் சாதித்து அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதைக் காட்டிலும், ஒருவர் தவறு செய்யும் போது கடுஞ்சொல் கூறி அவரை திருத்தும்போது கிடைக்கும் ஆனந்தம்தான் நிலையானது.
பேச்சு கடல் என்றால் மெளனம் அதன் கரை. அலை கடல் கரையைக் கண்டவுடன் அடங்கி விடுகிறது. நாவை ஓயாமல் பயன்படுத்துகிறவர்களால் ரகசியம் காக்க முடியாது.
பிறருக்கு துன்பம் செய்யாமல் உள்ளத்தை அமைதியாக வைப்பது மெளனம். கேட்பவர்களின் உள்ளம் அறிந்துதான் பேச வேண்டும். அவர்களின் தன்மைக்கு மாறுப்பட்ட கருத்துகள் பேசுவதை விட்டுவிட வேண்டும். ஒருவருடைய நம்பிக்கையை நம் பேச்சால் அழித்து விடக் கூடாது. முடிந்தால் ஆதரவாக பேச வேண்டும். பிறர் மனம் புண்படாமல் பேச வேண்டும். எந்த நேரத்திலும் மெளனமே சிறந்தது. உலகின் எந்த மொழிக்கும் பொதுவானது மெளனம்.
பேச்சு, காசுகளைப் போன்றது, சிறு அசைவுக்கும் அது சத்தம் போட்டுக் கோண்டே இருக்கின்றது. மெளனம் ரூபாய் நோட்டுகளைப் போன்றது. அது எப்போதும் அமைதியாகவே இருக்கும் என்பார்கள். மதிப்பில்லாததுதான் தன்னை அதிக மதிப்புள்ளதாக வெளி உலகுக்குக் காட்டிக் கொள்ளும்.
ஆனால், மதிப்புள்ளதோ தனது ஆற்றலை செயல்கள் மூலம் நிரூபிக்கும். அதாவது, பேச்சின் மதிப்பை விட மெளனத்தின் மதிப்பே உயர்ந்தது.
மௌனம் என்பது வெற்றியின் ரகசியம் ஆகும்
மௌனகீதங்கள்
மௌன ராகம் போன்ற படங்கள்  வெற்றிப் படங்களாக  அமைந்ததற்கு காரணம்
மௌனத்தின் "சென்டிமென்ட்" தானோ என்னவோ?

 புதுவை வேலு 

நன்றி:Radhakrishnan(dinamani)