dimanche 3 janvier 2016

"அன்பின் அறம் ஆண்டாள் பாசுரம்"

திருப்பாவை பாசுரம்:19


தன்னைச் சரணமடைந்தவர்களைக் காத்து அருள,
பஞ்சாயுதங்களை (5) எப்போதும் தாங்கி நிற்பவன் திருமால் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அவை யாவன...
1)பாஞ்சஜன்யம் என்னும் சங்கம்
2)சுதர்சன சக்கரம்
3)கௌமோதகி என்னும் காதை
4)சார்ங்கம் என்னும் வில்
5) நாந்தகம் என்னும் வாள்  - என்பது ஆன்மீகம் தந்தருளிய கருத்தாகும்

பாடல் 19


குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்

மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.



பொருள்:
"குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே!
நீ! எங்களுடன் பேசுவாயாக.
மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை.
ஒரு நிமிடம் கூட அவனை விட்டு பிரிந்து இருக்க மறுக்கிறாய். இது சரியா?
இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா? கண்ணனின் அருள் எங்களுக்கு கிடைக்க
நீ! தடையாக இல்லாமல், எங்கள் குரலை பகவான் கேட்க வழி செய்ய வேண்டும்.
இதுவே எங்கள் ஆசையாகும்.

விளக்கம்:

பஞ்சசயனம் என்பது… ,
அன்னத்தின் தூரிகை,
இலவம்பஞ்சு,
பூக்கள்,
கோரைப்புல்,
மயில் தூரிகை
ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில்,
தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா?
அவள் தான் எழ விடுவாளா? ஆனாலும், கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம்.
"நீ! எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப,
அவன் ஓரக்கண்களால் பார்த்து  "நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கி சைகை காட்டுகிறானாம்.
தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் "நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.

பகிர்வு:

புதுவை வேலு

samedi 2 janvier 2016

"ஆண்டாள் அருளிய ஆன்மீகத் தமிழ்"

திருப்பாவை பாசுரம்:18


ஆண்டாள் திருப்பாவையில் மார்கழி நோன்பு நோற்கும் காலத்தை முதல் பாசுரத்திலும்,
நோன்பு செய்யும் முறையை இரண்டாம் பாசுரத்திலும்,
அந்த நோன்பால் மழை பெய்யும் என்று மூன்றாம் பாசுரத்திலும்,
அந்த மழை பெய்த விதத்தை நான்காம் பாசுரத்திலும்,
அதனால் நாம் செய்த பாவங்கள் தீயில் இட்ட பஞ்சுபோல பொசுங்கி மறைந்து போகும் என ஐந்தாம் பாசுரத்திலும் சொல்லி,
மார்கழி மாத நோன்பின் சிறப்புகளை முதல் ஐந்து பாசுரங்களில் வெளிப்படுத்தியுள்ளாள்.

ஆறு முதல் பதினைந்து பாசுரங்கள் வரை பள்ளியெழுச்சிப் பாசுரங்களாக திருமால் அடியார்கள் எழுப்பப்படுகின்றனர்.

பதினேழா து பாசுரம், வாயிற்காவலரின் உதவியுடன் கோபியர் பலராமனை எழுப்பும் பாசுரமாகும்.

பதினெட்டாவது பாசுரம் வைணவ முறைப்படி பலராமனை எழுப்பும்முன் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பி அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நியமத்தின்படி நப்பின்னைப் பிராட்டியை எழுப்பும் பாசுரமாகும்.


பாடல்:18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்,
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

பொருள்:

மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.








விளக்கம்:
பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராகசுவாமிசன்னதிக்கு போகக்
கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும்.
வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் "எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார்.
அதையே,  அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும்.
இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்...
அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்!
அதனால், கண்ணனின் மனைவி "நப்பின்னை"யை எழுப்பி,  கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

பகிர்வு

புதுவை வேலு





vendredi 1 janvier 2016

"அகந்தையை அருளாத ஆண்டாள்"



திருப்பாவை பாசுரம்:17



ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி - ஆண்டாள்  திருக்கோயில்
(தமிழகம் மதுரை) 48வது திவ்ய தேசமாக போற்றி சிறப்பிக்கப் படுகிறது.
திவ்ய தேசங்கள்
பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற,
சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் யாவும்,
"திவ்ய தேசங்கள்" எனவும் இந்த திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் யாவும்,  "மங்களாசாசனம்" எனவும் அழைக்கப்படுகின்றன.

பன்னிரண்டு ஆழ்வார்களால் "மங்களாசாசனம்" பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

அவையே 108 திவ்ய தேசங்களாகவும் போற்றப் படுகின்றன.
இவற்றில் 105  இந்தியாவிலும்,
ஒன்று நேப்பாலிலும் உள்ளன.
கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை என்று சொல்லப் படுகிறது.










பாடல் 17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்த கோபாலா! எழுந்திராய் !

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய்!


அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த

உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கலோ எம்பாவாய் !



பொருள்:

ஆடைகளையும்,  குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள்
தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும்.

கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே!

மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ!எழ வேண்டும்.

விண்ணையே கிழித்து உன் திருவடிகளால், உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே!
நீ கண் விழிக்க வேண்டும்.

செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும்,  உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு  தரிசனம் தர வேண்டும்.



விளக்கம்:
திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் சிறப்பாக பாடுகிறாள் ஆண்டாள்.
மூன்று பாசுரங்களில் இந்த அவதாரத்தை அவள் சிறப்பித்திருக்கிறாள்.

"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி"  என்று மூன்றாவது பாடலிலும், இந்தப் பாடலிலும்(17) ,  
24வது பாடலில் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்றும் சொல்கிறாள்.
அசுரனாயினும் நல்லவனான மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான்.

இந்த கர்வம் அடங்கினால் இறைவனை அடைவது உறுதி என்பதாலேயே நாராயணன் வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார்.

திருப்பாவை பாடுபவர்கள் "தான்" என்ற கர்வத்தை அடக்க வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

பகிர்வு:
புதுவை வேலு