mardi 29 décembre 2015

"திருவரங்கன் திருவடிக் கமலம் சடாரி" திருப்பாவை பாசுரம் 14

‘சடகோபம்’ ‘சடாரி’ 'நம்மாழ்வார் '











 
பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் ஒவ்வொருவரும் தீர்த்தம், திருத்துழாய் என்னும் துளசி, மஞ்சள் காப்பு, குங்குமத்துடன் சடாரியை சிரசில் தரித்துக் கொண்டால்தான் வேண்டுதல் வழிபாடு வெற்றிக் கொண்டதாகக் கருதுவார்கள்.

இறைவன் திருவடிக்கமலங்கள் சடகோபம் என்றும் சடாரி என்றும் நம்மாழ்வார் என்ற ஆழ்வார் பெருமானின் பெயராலும் அழைக்கப்படுகின்றன.
ஆழ்வார் பாசுரங்களை இசையும் ஆடலுமாக அரையர் சேவைஎன்று அபிநயத்துடன் காண்பிக்கும் வழக்கமும் இருந்து வருகிறது.
இன்றைக்கும் 'திருவில்லிபுத்தூர்' மற்றும் 'திருவரங்கம்' பெரியகோயிலில் இவ்வழக்கு சிறப்போடு இருந்து வருகிறது.

இக்கலை அழியாமல்   பக்திக் கலையாக என்றும் பாதுகாக்கப் பட வேண்டும்.


'ஆண்டாள்தான் தந்தருளிய பாசுரத்தில், அரங்கன் சரணாகதிக்குமுதன்மை தந்திருக்கிறார்

"இற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோட
உற்றமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
                                                              (திருப்பாவை- 29)















                                                                    நம்மாழ்வார்
சிறப்புக்குறிய சடாரி என்றால் என்ன? அறிவோமே!

திருவடியார்களை காப்பது திருவடி நிலை
திருவடி நிலையே பாதுகையாகும்,
பாதுகையே சடாரி எனப் படும்.

சடகோபன் என்னும் 'சடாரி' அல்லது 'பாதுகை' மூலம்தான் திருமாலின் திருவடிகளை தலையில் சமர்பித்துக் கொள்கிறேம்.

வைணவ ஆலயங்களில் திருமாள் திருவடிகளின் முன்பாக இருக்கும் பாதுகைகள் கொண்ட திருவடிமுடியே "சடாரி" எனப்படும்.







திருப்பாவை பாசுரம் : 14


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் 
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் 
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் 
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்! 
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் 
பங்கயக் கண்ணானைப் பாடேலோ எம்பாவாய்.
























பொருள்:


எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே!




கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே!




உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன.




ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன.



காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.


ஆனால்,பெண்ணே!


சங்கை ஊதி தர்மத்தின் தூக்கம் கலைப்பனும்’,


சக்கரத்தால் சதியின் தலையை கொய்பவனும்,  


சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடைய 



தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான,
கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே ?


















விளக்கம்:

கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது.
வாக்கு கொடுப்பது மிக எளிது.
அதைக் காப்பாற்ற முடியுமா? என தெரிந்து பேச வேண்டும்.
வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே ! என ஆண்டாள் வருந்துகிறாள்.
நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும், சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்தாகக் கொள்வோம்.


பகிர்வு
புதுவை வேலு






lundi 28 décembre 2015

"அகம் அருளிய ஆண்டாள்"


யது குலத்தைப் பெருமை கொள்ளச் செய்ய பெருமாள் கண்ணனாக அவதரித்ததைப் போல் சம்சாரம் எனும் சாகரத்தில் மூழ்கியுள்ள நம்மைக் கைதூக்கிவிட ஆண்டாள் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியையும் அருளிச் செய்தாள்.

30 பாசுரங்களைக் கொண்ட திருப்பாவை மார்கழி மாதத்தில் பிரபலமாகப் பாடப்படுகிறது. "கோதையின் உபநிடதம்" என்றும்  திருப்பாவைபெயர் பெற்றது.


கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும்

அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு 


என்று சொல்லக்கூடிய அளவுக்கு திருப்பாவையின் சிறப்பு, முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆறாம் திருமொழியான "வாரணமாயிரம்", என்று தொடங்கும் பதிகத்தில், மாயவன் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கண்ட கனவைத் தோழிக்கு உரைக்கிறாள். இன்றளவும் பல திருமணங்களில் இப்பாசுரங்கள் சீர்பாடல் என்ற நிகழ்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது.


வாரணம் ஆயிரம் சூழ வலம்செய்து

நாரன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்


வீதிகள் முழுக்க தோரணங்கள் கட்டப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது.

ஆணழகனான நாரண நம்பி ஆயிரம் யானைகள் புடைசூழ கம்பீரமாக நகர் வலம்

வருகிறான் என்று ஒவ்வொரு காட்சியாக விவரிக்கிறாள்.

ஒவ்வொரு பாசுரத்திலும்,

திருமண நிகழ்ச்சிகளை விவரித்துப் பின் அத்தனையும் கனவு என்று கூறுகிறாள்.


‘வேதமனைத்துக்கும் வித்து’ என்று ஆன்றோரால் போற்றப்படும் திருப்பாவையில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு சொல், ‘பறை’ என்பதாகும்.




இனி, பறை என்று ஆண்டாள் கூறும் செய்திகளைப் பார்ப்போம்.


பாசுரங்களில் மொத்தம் 10 இடங்களில் ஆண்டாள் பறை என்று குறிப்பிடுகிறாள்.
ஆண்டாள் கூறும் பறை

1. பறை தருவான்  (பாசுரம் – 1)
2. பாடிப்பறை கொண்டு  (பாசுரம்- 8 )
3. போற்றப் பறை தரும்  – (பாசுரம்- 10)
4. அறை பறை –  (பாசுரம் -16)
5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
7. உன்றன்னை பாடிப்  பறைகொண்டு – (பாசுரம் -27)
8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
9. இற்றைப்  பறை கொள்வான் –  (பாசுரம் -29)
10.அங்கப் பறை கொண்ட ஆற்றை  – (பாசுரம் -30)

அவற்றுள், 26 -ஆம் பாசுரத்தில் வரும் சாலப் பெரும் பறை, 

 சல்லிப் பறையை ஒத்திருக்கிறது.

 சல்லிப் பறை என்பது, விழாக்களில் கொட்டப்படுவது. சுற்றுப்புறத்து ஓசைகளையும் மீறி ஓங்கி ஒலிக்க வேண்டிய பறை.

‘மாலே மணி வண்ணா’ எனத் தொடங்கும்  பாசுரத்தில்,

 ‘சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே’ என்று ஆண்டாள் கூறும் வர்ணனை இறைவன்  வரும் வீதி ஊர்வலம் போல உள்ளது.

ஞாலத்தை எல்லாம் நடுங்கச் செய்யும் வகையில்  பாஞ்சசன்னியம் என்னும் சங்கூதும் ஒலியோடு, பிற ஒலி முழக்கங்களும், பல்லாண்டு இசைத்த வண்ணம் செல்வதும், கோல விளக்கும், கொடியும், விதானமும் செல்லும் பாங்கினையும் உரைத்திருப்பது, மார்கழி மாதத்து வைகுண்ட ஏகாதசி அன்று திருமால் வீதி வலம் வரும் கருட சேவை போன்று இருக்கிறது.


வீதி ஊர்வலத்தில் கொட்டப்படும் சல்லிப் பறையை ஆண்டாள் சாலப் பெரும் பறை 
என்று கூறியிருக்கலாம்.


 திருப்பாவை பாசுரம் -13



புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

 

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே

பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.







பொருள்:


பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து
அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும்,
அவதாரம் எடுத்த நாராயணனின், புகழைப் பாடியபடியே,
நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகிவிட்டது.
கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது.
வியாழன் மறைந்து விட்டது.
பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன.
தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே!
விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் !
உடல்நடுங்கும்படி,குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்?
அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே!
மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா?
எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா !





விளக்கம்:
"கள்ளம் தவிர்ந்து" என்கிறாள் ஆண்டாள்.
தூக்கம் ஒரு திருட்டுத்தனம்.
பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல!
நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்!
அதிலும்,  பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும்
நமக்கு நாமே செய்யும் திருட்டு தான்.
வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்? இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?

பகிர்வு:

புதுவை வேலு

dimanche 27 décembre 2015

"திருவிளக்காய் ஒளிரும் திருப்பாவை"





'திருப்பாவை' பாசுரம் 12



திருவேங்கடம்,

திருமாலிருஞ்சோலை,
திருவரங்கம்,

திருஅத்தியூர்

ஆகிய வைணவத் தலங்களது பெயரை வாயால் உச்சரித்தாலே சுகம் என்பதை உணர்த்துகிறது
இந்தப் பாடல்:

"தேனோங்கு சோலைத் திருவேங்கடம் என்றும்
வானோங்கு சோலை மலையென்றும் - தானோங்கு
தென்னரங்கம் என்றும் திரு அத்தியூர் என்றும்
சொன்னவர்க்கும் உண்டே சுகம்."

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில், ‘முதலாவது ஆயிரத்தில்', பெரியாழ்வார் திருமொழியை அடுத்து, திருப்பாவை அமைந்துள்ளது.
ஆண்டாள் பாடியது, திருப்பாவை ஆகும். மேலும்,

"நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்" என்பது ஆழ்வார்களது பாசுரங்களின் தொகுப்பு நூலாகும்.

இதன்முதலாவது ஆயிரத்தில்' முதல் நூலாகத் திருப்பல்லாண்டு அமைந்துள்ளது.

திருப்பல்லாண்டைப் பாடியவர் பெரியாழ்வார்.

இன்றும், இனிவரும் ஏழு ஏழு (7 x 7= 49) பிறவிகளிலும் உனக்கே ஆள் ஆனோம்'
என்று உறுதிமொழி கூறும் பாட்டு இது.

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்!
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வி திருக்காப்பு "

என ஆயிரம், கோடி, நூறு ஆகிய எண்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

என்றென்றும் திருமாலின் திருப்பாதங்களே சரண் என்று தஞ்சம் புகுவது பற்றிக் கூறுவன இப்பாசுரங்கள்.





"திருப்பாவை பாடல் :12"

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின்வாசல் கடைபற்றி

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ!வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ எம்பாவாய்.



பொருள் :

பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள்
தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன.
அவை, சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது.
இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே!
கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ,
உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம்.
சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு,
அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம்.
நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய்.
எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?


விளக்கம்:

இந்தப் பாடலில், எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்புகிறார்களாம்.
தலையிலோ பனி பெய்கிறது, மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும்.
கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள்.
எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

பகிர்வு:
புதுவை வேலு