dimanche 27 décembre 2015

"திருவிளக்காய் ஒளிரும் திருப்பாவை"





'திருப்பாவை' பாசுரம் 12



திருவேங்கடம்,

திருமாலிருஞ்சோலை,
திருவரங்கம்,

திருஅத்தியூர்

ஆகிய வைணவத் தலங்களது பெயரை வாயால் உச்சரித்தாலே சுகம் என்பதை உணர்த்துகிறது
இந்தப் பாடல்:

"தேனோங்கு சோலைத் திருவேங்கடம் என்றும்
வானோங்கு சோலை மலையென்றும் - தானோங்கு
தென்னரங்கம் என்றும் திரு அத்தியூர் என்றும்
சொன்னவர்க்கும் உண்டே சுகம்."

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில், ‘முதலாவது ஆயிரத்தில்', பெரியாழ்வார் திருமொழியை அடுத்து, திருப்பாவை அமைந்துள்ளது.
ஆண்டாள் பாடியது, திருப்பாவை ஆகும். மேலும்,

"நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்" என்பது ஆழ்வார்களது பாசுரங்களின் தொகுப்பு நூலாகும்.

இதன்முதலாவது ஆயிரத்தில்' முதல் நூலாகத் திருப்பல்லாண்டு அமைந்துள்ளது.

திருப்பல்லாண்டைப் பாடியவர் பெரியாழ்வார்.

இன்றும், இனிவரும் ஏழு ஏழு (7 x 7= 49) பிறவிகளிலும் உனக்கே ஆள் ஆனோம்'
என்று உறுதிமொழி கூறும் பாட்டு இது.

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்!
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வி திருக்காப்பு "

என ஆயிரம், கோடி, நூறு ஆகிய எண்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

என்றென்றும் திருமாலின் திருப்பாதங்களே சரண் என்று தஞ்சம் புகுவது பற்றிக் கூறுவன இப்பாசுரங்கள்.





"திருப்பாவை பாடல் :12"

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின்வாசல் கடைபற்றி

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ!வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ எம்பாவாய்.



பொருள் :

பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள்
தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன.
அவை, சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது.
இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே!
கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ,
உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம்.
சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு,
அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம்.
நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய்.
எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?


விளக்கம்:

இந்தப் பாடலில், எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்புகிறார்களாம்.
தலையிலோ பனி பெய்கிறது, மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும்.
கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள்.
எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

பகிர்வு:
புதுவை வேலு

12 commentaires:

  1. திருவேங்கடம்,திருமாலிருஞ்சோலை,திருவரங்கம், திருஅத்தியூர் ஆகிய பதிகளில் திருமாலிருஞ்சோலை மற்றும் திருஅத்தியூர் சென்றதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன். திருப்பாவை படித்தேன், உணர்ந்தேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவில் திருமாலிருஞ்சோலை.
      இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி அருள்பாவித்து நிற்கிறார்.
      ஆண்டாள் பாசுரத்தின் சிறப்புக்கு நன்மை பயக்கும் கருத்தினை அளித்தமைக்கு நன்றி முனைவர் அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. திருப்பாவை பாடல் 12 இல் உள்ள கவிதை நயத்தை இரசிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதை நயம் சுரக்கும் தேன் வரிகளாய் பாசுரத்தை வடித்த ஆண்டாள் அழகரின் சிறப்பினை போற்றியமைக்கு நன்றி அய்யா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. சுவை தரும் தேனினும் இனிய கருத்தினை வடித்தமைக்கு நன்றி புலவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. திருப்பாவை பாடல் படித்தேன் நண்பரே நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. உள்ளாழ்ந்து உருகி படித்தால் பெருகும் பேரானந்தம் நண்பா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. மார்கழி மாதத்திற்கு ஏற்ற பொருத்தமான பதிவு!
    த ம 5

    RépondreSupprimer
    Réponses
    1. மார்கழி மாத பாசுரத்தின் பெருமையை போற்றியமைக்கு நன்றி நண்பரே!
      வருகை சிறக்க வரவேற்கிறேன்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அந்த இடங்கள் எல்லாம் சென்றதுண்டு..பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

    RépondreSupprimer
  7. ஆண்டாள் பாசுரத்தின் சிறப்புக்கு நன்மை பயக்கும் கருத்தினை அளித்தமைக்கு
    நன்றி அய்யா!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer