jeudi 7 janvier 2016

"கோதை தமிழ் கொஞ்சும் தமிழ்'

"எழிலுடைய வம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையத் தாமும் கழல்வளையே யாக்கினரே''


-என்று, "ஆண்டாள்" , நாச்சியார் திருமொழியில் பாடியுள்ளார்.
இப்பாசுரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.
தமிழ் மொழியின் சிறப்பெழுத்தான, "ழ"கரம் இப்பாசுரத்தில் பத்து இடங்களில் வருகிறது.    
ஸ்ரீ ரங்கனின் அழகை வர்ணிப்பதில் ஆண்டாளுக்கு அளப்பரிய பேரின்பம் உண்டு. அதனால், "கோதை தமிழ் கொஞ்சும் தமிழ்' என்பார் பெரியோர்.

திருப்பாவை பாசுரம்:23



பாடல் 23

மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ எம்பாவாய்.

பொருள்:
மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து,  பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது.
அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய்.
வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் ? என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

விளக்கம்:
எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக , வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு...என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும்.
இதைத்தான் ஆயர்குலப் பெண்கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு  எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.

இந்தப் பாசுரம், வைணவர்களால் "கோயில்' எனப்படும் "திருவரங்கம்' என்ற திவ்ய தேசத்தைக் குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது.
பகிர்வு:
புதுவை வேலு

mercredi 6 janvier 2016

"தாமரைக் கண்ணன் திருத்தாள் போற்றி!" - ஆண்டாள் பாசுரம்

திருப்பாவை பாசுரம்:22

வில்லிப்புத்தூர் வடபெருங்கோயிலில் அதிகாலை விஸ்வரூப தரிசனம் காண வரும் பக்தர்களுக்கு ஆண்டாள் மாலையுடன் காட்சி தருவார் வடபத்ரசாயி.ஆமாம், அனுதினமும், ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை இரவு இறைவனுக்கு சார்த்தப் படுமாம். அந்த மாலையைக் களையாமல் மறுநாள் விஸ்வரூப தரிசனத்தில் காட்சி தருவாராம் பெருமாள். மேனி சிலிர்க்கும் மேன்மையான காட்சி இது என்பார் தரிசனம் கண்டவர்கள். 




பாடல் 22
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல

செங்கண் சிறுகச் சிறிதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ எம்பாவாய்


பொருள்:


கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா? என, தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும்,  இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன்,

உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள்.
அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம்.

எங்கள் மீது,  கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும்,  தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும்உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்க மாட்டாயா?

கிண்கிணி என்பது அரைச் சதங்கை. பாதி மூடியும் பாதி பாகம் திறந்ததாகவும் செய்யப்படும் ஓர் ஆபரணம். அதைப் போல், தாமரை மலர் பாதி குவிந்தும், பாதி திறந்ததுமாக இருந்ததாம்! கண்ணனும் தாமரை மலர் போன்ற கண்களை உடையவன்தானே! அதுவும் ஒரே காலத்தில் ஞாயிறும் திங்களும் உதித்தால் தாமரையின் நிலை அதுதானாம். இந்த ஒப்புமையை கண்ணபிரானின் திருக்கண்களுக்குக் காட்டுகிறார் ஸ்ரீஆண்டாள்.
சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!



விளக்கம்:
இறைவனின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். சாபங்கள் கருகிப்போகும்.
எப்படி? அவனது பார்வையை நம் மீது திருப்புவது.
மிக எளிதாக ஆண்டாள் பாடிய "திருப்பாவை"யின் பாடல்களையும் மார்கழியில் மட்டுமல்ல! எந்நாளும் பக்தியுடன் படித்தால் போதுமே! அதற்கு அவகாசமில்லையா? அவள் சொல்லியிருக்கிறாளே! இந்த பாவையில் கோவிந்தாவிக்ரமா போன்ற எளிய பதங்களை...
அவற்றைச் சொன்னாலே போதுமே!
அவனது பார்வை பட்டுவிடும்.
மார்கழிப் பனிபோல் உள்ளம் குளிர்ந்து விடும்.

பகிர்வு:
புதுவை வேலு




mardi 5 janvier 2016

"ஆண்டாள் மகிமை" - திருப்பாவை பாசுரம்:21







பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை -ஒருநாளைக்கு

உண்டோ மனமே உணர்ந்துபார் ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்புஇதற்கும் உண்டு.

ஸ்ரீமணவாள மாமுனிகள், தமது "உபதேச ரத்ன மாலை"யில் ஆடிப்பூரத்தின் சிறப்பை இவ்வாறு விவரிக்கிறார்:

"பெரியாழ்வாருடைய மகளாகிய ஆண்டாள் பிறந்த ஆடி மாதம், பூர நட்சத்திரத்தின் சிறப்பு வேறொரு தினத்துக்கு உண்டோ?   ! மனமே உணர்ந்துபார்.
ஆண்டாளுக்கு ஒப்பு ஆண்டாளேதான். பூரத்துக்கு ஒப்பு பூர நாள்தான்' என்று ஒப்புமை காண முடியாத சிறப்பு நாள் என்கிறார்.

ஆண்டாள் பிறந்த ஆடிப் பூரத்துக்கும் திருவில்லிபுத்தூருக்கும் குறிப்பாக அந்த நந்தவனத்துக்கும் ஒரு மகிமை உண்டு.
ஆடிப்பூர நாயகி ஆண்டாள் பாடிய பாசுரங்களான, வேதம் அனைத்துக்கும் வித்தாகின்ற கோதை தமிழைப் படித்தாலும், கேட்டாலும், அது நம் பாதகங்கள் தீர்க்கும்,  பரமனடி காட்டும்.

‘ கோதா என்றால் மாலை என்பது பொருள். பூமாலையும் பாமாலையும் கொண்டு தமிழ் மாலை சூட்டினாள் இந்த "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" ஆண்டாள்.




பாடல் 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்


பொருள்:
கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக!
வேதங்களால் போற்றப்படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறியமுடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக!
உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல,  நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.

விளக்கம்:
"மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால்,  நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா! என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும்.
வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள்.
ஆம்!
ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை.
பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாடலின் உட்கருத்து.


பகிர்வு:

புதுவை வேலு





lundi 4 janvier 2016

"மறை போற்றிய நங்கை" - ஆண்டாள்


திருப்பாவை பாசுரம்:20




வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின்
 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் "திருப்பாவைப் பாடல்கள்" ஆகும்.
தினமும் விடியற்காலையில் எழுந்து திருப்பாவையில் உள்ள முப்பது பாசுரங்களையும் பக்தியுடன் சொன்னால் மழை பொழியும்!
மக்கள் செழிப்புடன் வாழ்வார்கள் என்பது வைணவப் பெருமக்களின் நம்பிக்கை.
திருப்பாவையை முழுதும் படிக்க இயலாதவர்கள் ஆன்மிக ஆச்சாரியார் "அபிராமி பட்டர்" சொன்னவாறு,
"சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்ந்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்'
என்ற பாடலையாவது, தினமும் சொல்லி வந்தால், திருமால் அருளைப் பெறலாம்.




பாடல் 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்ப முடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோ எம்பாவாய்.



பொருள்:
முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக!

நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக!
பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக!
எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக!


விளக்கம்:
கண்ணனின் திருக்குணங்களையும்நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன்,  அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து.
கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது.
 வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது.
ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!

பகிர்வு:
புதுவை வேலு