jeudi 18 juin 2015

"நேர்மை ஒளி" பி. கக்கன் பிறந்த நாள்

இன்று ஒரு தகவல்


ஜூன் 18, 1908 கக்கன் பிறந்த நாள்
விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், தமிழக முன்னாள் அமைச்சருமான பி. கக்கன் (P. Kakkan) பிறந்த தினம் இன்று (ஜூன் 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ) மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் (1908). தந்தை, கிராமக் கோயில் பூசாரி. பல சிரமங்களுக்கு இடையே தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்றார். 12-வது வயதில் படிப்பைத் தொடர முடியாததால் ஒரு வீட்டில் பண்ணை வேலை செய்தார்.

2) ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் பி.கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். மதுரை வைத்தியநாத ஐயர் இவரைத் தன் வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாணவப் பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார்.

3) சிறையில் கசையடி உட்பட பல கொடுமைகளை அனுபவித்தார். 1946-ல் அரசியல் அமைப்பு சட்டசபை தொடங்கப்பட்டது. இவர் அதன் உறுப்பினராகப் பொறுப்பேற்றார். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பணியாற்றினார். காமராசர் முதல்வராக பொறுப்பேற்றபோது அவர் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ஏற்றார்.


4) 1957-ல் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று மதராஸ் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. பொதுப்பணித்துறை, ஹரிஜன நலவாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறை களின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். விவசாயத் துறை அமைச் சராகவும், மாநில உள்துறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.

5)  இவர் அமைச்சர் பொறுப்பு வகித்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தலித்துகளின் முன்னேற்றத்துக்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. இரண்டு விவசாயப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தார். அவர்களுக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்தார்.

6) மேலும் காவல் துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது உட்பட ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தினார். அமைச்சரான பிறகும் தன் மகளை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்தவர்.
7) அரசாங்க பணத்தில் வாழாமல், இவரது மனைவி ஆசிரியை வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார். தனது தம்பிக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர், மனை ஒதுக்கீடு செய்து அளித்த அரசாணையைக் கிழித்தெறிந்தார். பதவிக் காலத்தில் எந்தப் பரிசுப் பொருளையும் யாரிடமிருந்தும் பெற்றதில்லை.

8) இவரது தம்பி தனது தகுதி, திறமையின் அடிப்படையில் போலீசில் வேலைக்கு சேர்ந்த போதிலும், தன் சிபாரிசினால் கிடைத்தது என்று பிறர் கருதுவார்கள் என்பதால், அதில் சேர வேண்டாம் என்று கண்டிப்பாக கூறிவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் மாநில முக்கியத் துறைகளின் அமைச்சர் என பொறுப்புகள் வகித்தபோதும் தனக்கென்று சல்லிகாசுகூட சம்பாதிக்காமல் நேர்மையின் வடிவமாகத் திகழ்ந்தவர்.


9) 1973-ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை வினோபாவின் பூதான இயக்கத்துக்கு அளித்துவிட்டார். முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், அங்கு பணம் செலுத்த முடியாததால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

l0) இந்திய அரசு இவர் உருவப்படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டு கவுரவித்தது. எளிமையின் சின்னமாகவும், பொது வாழ் வில் இருப்பவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்த கக்கன் 1981-ஆம் ஆண்டு 73-ஆம் வயதில் காலமானார்.


"தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு


மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்"


                                                                              - கவிஞர் வாலி-
( ஒருசில அரசியல்வாதிகளின் நிலையை, கவிஞர் வாலி அவர்கள் அழகுற வடித்த பாடல் வரிகள் )


கர்மவீரர் கண்டெடுத்த "கக்கன்" போன்ற  ஒருசிலரே அரசியல் வானில் நேர்மை ஒளி வீசும் நட்சத்திரமாக, நம் கண்களுக்கு தெரிகிறார்கள் என்றால் அது மிகையன்று!

பகிர்வு:
புதுவை வேலு


நன்றி: தி இந்து / PTM

22 commentaires:

 1. ஐயா கக்கன் அவர்கள் பிறந்ததற்கு தமிழகம் பல்லாண்டு தவம் செய்திருக்கவேண்டும்.

  தன்னலமில்லா தலைவர்கள் பிறப்பார் ஆயிரத்தில் ஒருநாளே!..
  - கவியரசர் கண்ணதாசன்.,

  RépondreSupprimer
  Réponses
  1. நேர்மை ஒளியை...
   இன்றையை தலை முறையினர் எப்போது காண்பாரோ?
   அருளாளர் அறிவாரோ?
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. கக்கன் அவர்களின் சிறப்பு என்றும் போற்றப்பட வேண்டியது ஐயா...

  RépondreSupprimer
  Réponses
  1. வார்த்தைச் சித்தரின் வாக்கு! வரவேற்கின்றோம்! வரவேற்கின்றோம்.
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. கக்கனின் நேர்மை..விழலுக்கு இரைத்த நீராய் ஆகிவிட்டது. த.ம 2

  RépondreSupprimer
  Réponses

  1. விழலுக்கு இரைக்க இப்போது நீர் ஏது தோழரே?

   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. அரசியலில் நேர்மையாய் வாழ்ந்த கக்கன் அவர்களைப்பற்றி இன்று அவரின் பிறந்த நாளில் தங்கள் பதிவின் மூலம் நினைத்துப்பார்க்க வைத்ததற்கு நன்றிகள்.

  RépondreSupprimer
  Réponses
  1. வாழ்த்துவதற்கும் அரசியலில் இலவசம் கேட்கும் நிலையே நிலவுகிறது அய்யா!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. கக்கன் தமிழர்கள் அனைவரும் போற்றப்படக்கூடிய தலைவர்

  RépondreSupprimer
 6. "அனைவரும் போற்றப்படக்கூடிய தலைவர்!
  கில்லர்ஜி அவர்களின் முதல் அரசியல் நற்கருத்து நன்றி நண்பா!

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 7. கக்கன் போன்ற மாமனிதர்களை
  இனி காண்பது இயலுமா?
  கக்கனின் நினைவினைப் போற்றுவோம்
  த்ம +1

  RépondreSupprimer
  Réponses
  1. இதுபோன்ற தலைவர்களை நமது தலைமுறையினர் இனி காண்பது என்பது கானல் நீரே! கரந்தையார் அவர்களே! நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 8. இவ்வாறான தலைவர்களைக் காண நாம் பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும் போலுள்ளது. பகிர்வுக்கு நன்றி.
  அண்மையில் விக்கிபீடியாவில் 200 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன், காண வாருங்கள்.
  http://drbjambulingam.blogspot.com/2015/06/200-5000.html

  RépondreSupprimer
  Réponses
  1. இதுபோன்ற தலைவர்களை நமது தலைமுறையினர் இனி காண்பது என்பது கானல் நீரே! அய்யா!
   தங்கள் தமிழ்பணிக்கு வாழ்த்துகள்
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer

 9. திரு கக்கன் அவர்கள் பற்றிய தவகலை பகிர்ந்தமைக்கு நன்றி! திரு கக்கன் அவர்கள் எங்கள் மாமாவோடு இணைந்து இரட்டைத்தொகுதியில் நின்று வெற்றிபெற்றவர் என்பதை நினைவு கூர்க்கிறேன்.
  // இரண்டு விவசாயப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. //
  அவரது காலத்தில் ஒரு வேளாண் கல்லூரிதான் அதாவது மதுரையில் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  கோவையில் வேளாண்மைப்பல்கலைக்கழகம் 1971 ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது.

  RépondreSupprimer
 10. அய்யா! கக்கன் குறித்து மேலும் பல புதிய தகவல்கள் தங்கள் வாயிலாக அறியப் பெற்றேன்.
  அறியத் தந்தமைக்கு அன்பின் நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 11. வணக்கம், கக்கன் அவர்கள் பற்றி நான் படித்து வியந்ததுண்டு, இவர் பெற இந்த நாடு என்ன தவம் செய்ததோ,
  நன்றி

  RépondreSupprimer
  Réponses
  1. செய்தியை அறிந்து வியந்து பாராட்டியமைக்கு நன்றி சகோதரி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 12. கக்கன் அவர்களைப் பற்றிய சிறப்பான பகிர்வு! நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. நல்லதை பாராட்டும் நண்பருக்கு நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 13. அய்யா கக்கன் வரலாறை பள்ளிப் பாடமாக்க வேண்டும் !

  RépondreSupprimer
 14. பகவான் ஜி அவர்களே உங்களது வேண்டுதம் பலிக்க வேண்டும்!
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer