mercredi 10 février 2016

" மின்சாரக் கண்ணா" - (இன்று ஒரு தகவல்)



தாமஸ் ஆல்வா எடிசன்  - பிறந்த தினம் (பிப்.11) 

 

                      தாமஸ் ஆல்வா எடிசன் 

உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் 
தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) 
பிறந்ததினம் இன்று (பிப்ரவரி 11).  

அவரது பிறந்த நாளில் அவரைப் பற்றிய முத்தான செய்திகள்:

1847ஆம் ஆண்டு பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி. 
சிறுவயதிலேயே கேள்வி கேட்கும் குணமும் எதையும் ஆராய்ச்சி செய்து பார்க்கும் பழக்கமும் அவரிடம் இருந்தது.


அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் 
மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதி.
அப்பா மரவியாபாரி. 
சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.


ஆசிரியர் திட்டியதால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அம்மாதானே பாடம் சொல்லித்தந்தார். 
பாடங்களோடுபைபிள்நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் 10 சென்ட் அளித்து உற்சாகப்படுத்தினார்.



பார்க்கும் எதையும் சோதித்து அறியும் ஆர்வம் சிறு வயதில் இருந்தே அவருக்கு உண்டு.
 
கோழி அடைகாத்து குஞ்சு பொரிப்பதைப் பார்த்த சிறுவன் எடிசன், 
தானும் முட்டைகள் மேல் அமர்ந்து சோதனை செய்து பார்த்திருக்கிறான்.


 ரிச்சர்ட் பார்க்கர்தாமஸ் பைன்சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங்களை 11 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார் எடிசன்.


ரயில் நிலையத்தில் தந்தி இயக்குபவராகப் பணியாற்றிய போது
ரயில் பெட்டியையே அச்சகமாக மாற்றி வீக்லி ஹெரால்டு 
வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்.

அங்கு சோதனைக் கூடம் அமைத்து கண்டுபிடிப்புகளைத் தொடங்கினார். 



ஒருமுறை அங்கு அவர் வைத்திருந்த பாஸ்பரஸ் எரிந்து ரயில் பெட்டியில் தீப்பற்றியது. 
ரயில்வே அதிகாரி ஆத்திரமடைந்து அறைந்ததில் அவரது ஒரு பக்கக் காது கேட்காமல் போனது.



இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த விஷயங்கள் மொத்தம் 1300. 

உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 

1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றார். 
இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் அல்ல.



மென்லோ பார்க் பகுதியில் 1876-ல் ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். 


மின்சார பல்பு,  
எலக்ட்ரிக் ஜெனரேட்டர்,
டெலிகிராப் சிஸ்டம்,
எலக்ட்ரிக் ஃபேன்,
ரேடியோ வால்வ்
மெகா போன்
மோட்டார்,  
மின்சார இருப்புப் பாதை,
தொலைபேசி ஸ்பீக்கர்
ஒலிபெருக்கி,  
கிராமஃபோன்,  
மூவி கேமரா,  
ராணுவ சாதனங்கள் - ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.



ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகுஅதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். 

அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார்.
இதுபற்றி கேட்டால்,  
நேற்றைய கண்டு பிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’  என்பார்.



எடிசன் 84 வயதில் மறைந்தார். 
அவரது உடலை அடக்கம் செய்யும்போதுஅமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் உத்தரவின் பேரில்,  
அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன. 

வெற்றி மொழி:



1) வெற்றி பெறுவதற்கான மிகவும் சிறந்த வழி, எப்போதும் மற்றுமொரு முறை முயற்சிப்பதே.



2) உழைப்பு என்ற சீருடையில் இருப்பதால், வாய்ப்பானது பெரும்பாலான மக்களால் தவறவிடப்படுகின்றது.



3) நான் தோல்வி அடையவில்லைவெற்றியடைய முடியாத பத்தாயிரம் வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறேன்.



4) நீங்கள் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செய்யாத சில விஷயங்கள் பயனற்றவை என்று அர்த்தமல்ல.



5) நீங்கள் என்னவாக இருக்கின்றீர்கள் என்பதில்தான் உங்கள் மதிப்பு இருக்கிறதே தவிர நீங்கள் எதை வைத்துள்ளீர்கள் என்பதில் இல்லை.



6) நான் ஒருபோதும் கொல்லுவதற்கான ஆயுதங்களைக் கண்டுபிடிக்கவில்லை என்பதில் உண்மையில் எனக்கு பெருமை.



7) வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்பதை உணராததே பெரும்பாலான வாழ்க்கைத் தோல்விகளுக்குக் காரணம்



8) என்னுடைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் உழைப்பினால் கிடைத்ததே தவிர எதிர்பாராத விபத்துகளினால் வந்ததல்ல.



9) ஒரு சதவீதம் உத்வேகமும் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் வியர்வையும் சேர்ந்ததே மதிநுட்பம்.



10) மனிதனின் மனம் எதை உருவாக்க முடியுமோ, அவனது குணம் அதை கட்டுப்படுத்த முடியும்.



11) ஒரு செயலைச் சிறப்பாக செய்வதற்கு சிறந்த வழி, அதனை தேடிக்கண்டறிவதே.



12) ஒரு யோசனையின் மதிப்பு அதை பயன்படுத்துவதிலேயே இருக்கின்றது.


தனது வாழ்நாளில் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர்
தாமஸ் ஆல்வா எடிசன்.


வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் என்றே வாழ்ந்து சுமார் ஆயிரத்து முன்னூறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்காட்டியவர்.

கண்டுபிடிப்புகளின் தந்தை என்று இன்றளவும் போற்றப்படுகிறார்.



பகிர்வு:
புதுவை வேலு
நன்றி: தி இந்து



5 commentaires:

  1. ‘நேற்றைய கண்டு பிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்பார்.

    அருமை நண்பரே எத்தனை உயர்வான சிந்தனை இருந்திருந்தால் இப்படி சொல்லி இருக்க முடியும் உலகுக்கே ஒளி கொடுத்தவரைப்பற்றிய பதிவு ஒலிக்கட்டும் அவர் பெருமை பகிர்வுக்கு வாழ்த்துகள் நண்பா

    RépondreSupprimer
    Réponses
    1. நேற்றைய பதிவுகளை பாராட்டியதோடு, இன்றையை பதிவினையும் பாராட்டி, நாளை வரும் பதிவினையும் பாராட்டக் காத்திருக்கும் சக நட்புக்கு அகம் சொல்லும் நன்றி நண்பா.

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும் தங்களின் பதிவு பல தகவல்களை மீண்டும் நினைவுறுத்தியது. பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

    RépondreSupprimer
  3. நினைவலையில் நீந்தி வந்து நீங்காத புகழ் கருத்தினை தந்தமைக்கு நன்றி ஆசானே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  4. அருமை ... படிக்காதமேதை கடைசிவரை எந்தவித தோல்விகளாலும் துவண்டு படுக்காத மேதை.!!! கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer