mardi 23 décembre 2014

"பக்தி இலக்கியப் பாடல்கள்" ( திருப்பாவை/ திருவெம்பாவை )


திருப்பாவை

ஆண்டாள் அருளியது


தொடர்ச்சி:

பாடல் 9

  தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
  தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
  மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
  மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
  ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?

  ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?

  மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
  நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பொருள்:
 
பிரகாசமான நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய,  நறுமண திரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக.
எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே ? அவள் ஊமையா?  செவிடா?  சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா?  உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன்,  மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

விளக்கம்:

 உலக மக்கள் மாடமாளிகை,  பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். அந்த வைகுண்டத்தை அடைய,    பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.

பாடல் 10
 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
 மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
  நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
  போற்றப் பறைதரும் புண்ணியனால் 
 பண்டொருநாள்
  கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.


பொருள்:
 முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில்,  கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது.
சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா !

விளக்கம்:
 
யாராவது நன்றாகத் தூங்கினால் "சரியான கும்பகர்ணன்"  என்று சொல்வோம். இது ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன "ஜோக் என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது. நகைச்சுவை உணர்வு ஆயுளை அதிகரிக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். ஆண்டாள் நமக்கு திருப்பாவையின் மூலம் ஆயுள்விருத்தியைத் தந்திருக்கிறாள்.

 
பாடல் 11

 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
  செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
  குற்றமொன்றில்லாத கோவலர் தம்
 பொற்கொடியே
  புற்றரவு அல்குல் புனமயிலே போதராய் !
   சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
  முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
  சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
  எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.


பொருள்:

 கன்றுகளோடு
 கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசு மருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே!
நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?

விளக்கம்:
 நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை! நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டுவிட்டு,  நீராடச் சென்றிருப்போம். ஆனால், பக்தி நெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டுவிட்டு,  தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று. எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும், அவன் புகழ் பேச வேண்டும். அப்போது தான் அவனருள் கிடைக்கும். இதனால் தான் கூட்டுப் பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.பாடல் 12
 கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
  நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
  நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன்     தங்காய்!
  பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
  சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் 
 செற்ற
  மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ 
 வாய்திறவாய்
  இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
  அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் 
 எம்பாவாய்.
பொருள்:
 பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ,  உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?

விளக்கம்:
எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால்,  அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள்,  அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்பு கிறார்களாம் இந்தப் பாடலில்.  தலையிலோ பனி பெய்கிறது. மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள்,  இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி,  மேலே பனியின் குளிர்ச்சி,  இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள். எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.
திருவெம்பாவை


மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை

 

 


 

தொடர்ச்சி:
  
பாடல் 9

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.


பொருள்:
கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே!
இன்னும் லட்சம் ஆண்டுகள் கழித்து இப்படித்தான் இருக்கும் இந்த உலகம்என்று கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம் புதுமையான சிவனே!
உன்னை தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு கணவராக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாகக் கருதி, மிகவும் கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம். இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையைப் பெறுவோம்.

விளக்கம்:
 
"தனக்கு வரும் கணவன்,  சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும்,  வாகனம் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பிரார்த்தனை செய்பவர்கள் பெருகி விட்ட காலம் இது! இந்த செல்வம் நிலைத்திருக்குமா! இந்த செல்வத்துக்கு சொந்தக்காரர்கள் ஒழுக்க சீலர்களாக இருப்பார்களா ? பக்திமான் ஒருவன் எனக்கு கணவனாக வேண்டும் என்று கேட்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலாவது இன்று இருக்கிறார்களா?
அன்றைய பெண்கள் தங்கள் கணவன் பக்திமானாக அமைய வேண்டுமென விரும்பினர். அதை இறைவனிடம் கேட்டனர். செல்வச் சீமான்களால் நிம்மதியைத் தர முடியாது. பக்திமான்களை மணந்தால் எளிய வாழ்க்கை அமையலாம். ஆனால்,  அதில் இருக்கும் மனநிம்மதி யாருக்கு கிடைக்கும்?  என்பது இந்தப் பாடலின் உட்கருத்து.


பாடல் 10

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

பொருள்:
 
தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப் பாதங்கள் ஏழுபாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. பல் வேறு மலர்களை அணியும் திருமுடியானது வான த்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!

விளக்கம்:

சிவனின் பெருமையை உயர்த்திச் சொல்லும் பாடல் இது. "போதார் புனை முடியும் என்ற வரிக்கு "மலர்களை அணிந்தவன் என்ற பொருள் வருகிறது. சிவனுக்கு கொன்றை, ஆத்தி, தும்பை, எருக்கு, ஊமத்தை ஆகிய மலர்களை அணிவிக்கும் வழக்கமுண்டு. இதில் எதையாவது மனிதர்கள் பயன்படுத்துவதுண்டா? "உனக்கு மல்லிகையையும், ரோஜாவையும் வைத்துக் கொள். உனக்கு பயன்படாத ஒன்றை எனக்கு அணிவி என்று தன் எளிமையை வெளிப்படுத்துகிறான் இறைவன்.பாடல் 11மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.பொருள்:

சிவபெருமானே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில் "முகேர் என சப்தம் எழுப்பி குதித்து, தண்ணீரைக் குடைந்து நீந்தியபடியே உன் திருவடிகளை எண்ணிப் பாடினோம். வழிவழியாக இந்த பாவை நோன்பை நிறைவேற்றி வருவதை நீ அறிவாய். சிவந்த நெருப்பைப் போன்றவனே! உடலெங்கும் திருநீறு அணிந்தவனே! செல்வத்தின் அதிபதியே! சிறிய இடையையும், மையிட்ட அழகிய கண்களையும் உடைய பார்வதிதேவியின் மணாளனே! ஐயனே! நீ இந்த உயிர்களை ஆட்கொண்டதும் அவை என்னவெல்லாம் நன்மையடையுமோ, அவை அனைத்தையும் அடைந்து விட்ட உணர்வு உன்னைப் பாடினாலே எங்களுக்கு கிடைத்து விடுகிறது! இந்த பேரின்பநிலை மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க அருள்செய்வாயாக!


விளக்கம்:
 
உலகத்தில் எல்லா உயிர்களையும் இறைவன் ஆட்கொள்ளத்தான் போகிறான்! யானையும், சிலந்தியும், பறவைகளும் கூட அவனால் ஆட்கொள்ளப்பட்ட தகவல்களை நாம் படிக்கிறோம். ஆனால், மனிதனுக்கு மட்டுமே அவனைப் பாடும் வகையில் வாயைத் தந்திருக்கிறான்.  பேசத்திறனற்றிருந்தாலும் மனதுக்குள் படிக்கும் திறனைத் தந்திருக்கிறான். எனவே கிடைத்தற்கரிய இந்த மானிடப்பிறவியைப் பயன்படுத்தி நீராடும் போதும், உண்ணும் முன்பும், உறங்கும் முன்பும் "நமசிவாய என்று அவன் திருநாமம் சொல்லி பிறப்பற்ற நிலையடைய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.பாடல் 12


ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய் !பொருள்:

தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளைக் கொண்டவர் நம் சிவபெருமான். அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, "சிவாயநம என்னும் மந்திரம் சொல்லி, அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.


விளக்கம்:

இறைவனே ஆக்கவும், அழிக்கவும், காக்கவும் வல்லவன் என்பது அறிந்த விஷயம். இது நன்றாகத் தெரிந்தும் அவனைப் புரிந்து கொள்ளாமல், "தான்" என்ற அகங்காரத்துடன் திரிபவர்களே உலகில் அதிகம்.

உலகம் என்ற நாடகத்தில் நமக்கு தரப்பட்டுள்ள பாத்திரத்திற்குரிய இந்த நடிப்பை கைவிட்டு, அவனை அடைய வழி தேட வேண்டும் என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து.

புதுவை வேலு

(நன்றி: தினமலர்) 

10 commentaires:

 1. இலக்கியச் சுவை சொட்டும்
  இனிய பதிவு இது!
  தொடருங்கள்

  RépondreSupprimer
  Réponses

  1. ஆன்மீக தொடர் பாடல்களுக்கு தொடர் ஆதரவு தந்துதவும் தன்மையினை போற்றுகிறேன். வருக! அருங்கருத்தினை தருக!
   புதுவை வேலு

   Supprimer
 2. அவனை அடைய வழி ,அருமை.
  பாடல் பகிர்வுக்கு நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. "அவனை அடையும் வழி"

   "உனக்கும் நல்லதாய், ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும், செய்வதும் நித்தியகடன்" இதுவும் அவனை (இறைவன்) அடையும் அற்புதமான வழியம்மா!
   "திருமதி பக்கங்களை" இனி அனைவரும் திரும்பிபார்த்து தொடர வேண்டும்!
   நன்றியுடன்,
   புதுவை வேலு
   www.kuzhalinnisai.blogspot.fr

   Supprimer

 3. திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பதவுரை மற்றும் பொழிப்புரை தந்து விளக்கியமைக்கு நன்றி!

  ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கும்பகர்ணன் உறக்கம் பற்றி சொன்ன சொல்லாடல் வியக்க வைக்கிறது.

  திருவெம்பாவை 10 ஆம் பாடலுக்கான விளக்கத்தில் ‘சிவனுக்கு கொன்றை, ஆத்தி, தும்பை, எருக்கு, ஊமத்தை ஆகிய மலர்களை அணிவிக்கும் வழக்கமுண்டு. இதில் எதையாவது மனிதர்கள் பயன்படுத்துவதுண்டா?’ என சொல்லியிருக்கிறீர்கள். சோழ மன்னர்கள் சூடிய பூ ‘ஆத்தி’ என படித்திருக்கிறேன். சிவபெருமான் சூடும் ஆத்தியும் சோழர்கள் சூடிய ஆத்தியும் ஒன்றா?

  RépondreSupprimer
  Réponses
  1. அன்புள்ள அய்யா! வணக்கம்
   இதோ உங்களுக்கான ஒரு சிறு விளக்கம்!

   சேர சோழ பாண்டியர் போரின் போது ,அடையாளம் தெரிவதற்காகச் சூடிக் கொள்ளும் பூ - "போந்தை", "ஆர்", "வேம்பு"
   முதலியனவாகும்.

   இவற்றில் சோழர் அணிந்து கொள்ளும் பூ ‘ஆர்’ என்பதாகும்.

   இந்த ஆர் என்னும் பூ ‘ஆத்திப் பூ’ என்பதில் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால்,

   ஆத்திப் பூ என்பதை அடையாளம் காட்டுவதில்தான் அறிஞர்கள் சிலர் மாறுபடுகின்றனர்.
   பூவரசம்பூ போன்ற அமைப்புடன், ஆனால், அதில் நான்கில் ஒரு பங்கு அளவினதாக வெள்ளை நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் பூக்கும் மலரினை இக்காலத்தில் அறிஞர்கள் சிலர்ஆத்தி எனக் காட்டுகின்றனர்.

   சோழர் சூரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பிற்காலத்தில் தோன்றிய கருத்தாகும்.
   இந்தக் கருத்தில்கூடச் சோழன் சிவன் குலம் என்று கொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது

   'சிவன்’ சூடியதாகக் கூறப்படும் 'கோட்பாட்டு மலரை’ அறிஞர்கள் சிலர் காட்டும் ஆத்திமலராக வைத்துக்கொள்வதில் பிழை ஒன்றும் இல்லை! என்றே சொல்லத் தோன்றுகிறது

   நன்றியுடன்,
   புதுவை வேலு
   www.kuzhalinnisai.blogspot.fr

   Supprimer
 4. திருப்பாவை திருவெம்பாவை பாசுரம் மற்றும் பாடல்களின் விளக்கம் அருமை புதுவை வேலு அவர்களே.

  sattia vingadassamy

  RépondreSupprimer
  Réponses
  1. அன்புள்ள நண்பர் சத்தியா அவர்களே!
   பனிவிழும் மலர்வனமாகத் திகழும் இந்த மார்கழி மாதத்தில்
   நனிமணம் கமழும் திருப் பாவை, திருவெம்பாவை, பாடல்களை
   படித்து பயனடைந்ததோடு நில்லாமல், அருங்கருத்தினை குழலின்னிசைக்கு
   அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி!
   தொடர்க நண்பரே!
   புதுவை வேலு

   Supprimer
 5. திருப்பாவை திருவெம்பாவை பாடல்களின் பொருள் விளக்கம் அறிந்தோம் .அருமை !நன்றி!

  RépondreSupprimer
 6. மார்கழியின் வசந்தங்கள் வளம் பெருக வாழ்த்துக்கள்
  வருகைக்கு நன்றி!
  புதுவைவேலு

  RépondreSupprimer