vendredi 19 décembre 2014

"பாவைப் பாடல்கள்" (திருப்பாவை/திருவெம்பாவை)


திருப்பாவை/திருவெம்பாவை

 

 

 

 

மார்கழி என்றால் என்ன?

 

மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி.
சீர்ஷம் என்றால் மேலான. ஆக, மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள்.
பக்தியே மேலான வழி. அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி. ஆண்டாள், பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள்.
பக்தி மட்டுமின்றி பொது நலமும் மேலான வழி என்பதை இம்மாதம் நமக்கு எடுத்துரைக்கிறது.


தொடர்ச்சி: ( திருப்பாவை)

 

பாடல் 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பொருள்:

வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

விளக்கம்:

 "உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை.
தேவகிக்கு, கண்ணனை பெற்றதால் பெருமை. "ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று அவள் பெருமைப்படுகிறாள். குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.

பாடல் 6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்:

அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக ! 

 

பாடல் 7

 

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

பொருள்:

 

அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன் குருவிகள் கீச்சிடும் குரலும்,  அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற !.

விளக்கம்:

 

பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு. இதில் "கேசவா என்ற திருநாமத்தை ஏழுமுறை சொல்லிவிட்டு, அன்றாடப்பணிகளுக்கு கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை. "கேசவன் என்ற சொல்லுக்கே "தடைகளை நீக்குபவன் என்று தான் பொருள்.

 

பாடல் 8

 

 

 

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள்:

 

மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்ட சிலை போன்று அழகு கொண்ட பெண்ணே! கிழக்கே வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன. அநேகமாக, எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன்  "ஆ ! ! என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்புவாயாக.

 

விளக்கம்:

 

திவ்ய தேசமான சின்னக்காஞ்சிபுரம் (அத்திகிரி) வரதராஜப் பெருமாளை எண்ணி இப்பாடலை ஆண்டாள் பாடுகிறாள். தேவாதி தேவன் என்று இங்குள்ள பெருமாளைக் குறிபபிடுவர். கண்ணனின் வீரச்செயல்கள் இப்பாடலில் புகழப்படுகின்றன. பெண்கள் தைரியசாலிகளையே விரும்புவார்கள் என்பது இப்பாடலின் உட்கருத்து.
விளக்கம்: 

பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான். அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே! அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான்.
திருவெம்பாவை

 

 
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!


பாடல் 5

 

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

பொருள்: 

"நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார்.
ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல... இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன் "சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை  உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலை நகரப் பெண்கள்.

விளக்கம்:

"கடவுளா ! அவரை எனக்குத் தெரியாதா ? அவரைத்தான் தினமும் பார்க்கிறேனே! தினமும் கோயிலுக்குப் போகவேண்டுமென்று கட்டாயமா என்ன ? புதிதாக அவரிடம் என்ன காணப்போகிறோம்! வருஷம் தோறும் வருகிற மார்கழி தானே! கட்டாயம் காலையில் எழ வேண்டுமா என்ன ? என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அதுபோல் தான் தோழியின் நிலை இருக்கிறது. இந்த அஞ்ஞானத்தைப் போக்கும் வகையில், இறைவனின் சிறப்பை எடுத்துச் சொல்கிறார்கள் சக தோழியர்.


பாடல் 6

 

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

பொருள்:

 

மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், "உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே? மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் விடியவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர் களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.

விளக்கம்:

இறைவனை தனக்காக மட்டுமின்றி பிறருக்காகவும் வணங்க வேண்டும் என்பதை பாடல் அடிகள் உணர்த்துகின்றன. மேலும், வார்த்தைகளை விட செயலே உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதையும் இப்பாடல் சொல்கிறது. ஒன்றைச் சொல்லிவிட்டால், அதைச் செய்தே தீர வேண்டும், இல்லாவிட்டால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகி தலைகுனிய நேரிடும் என்பதும் இப்பாடல் உணர்த்தும் தத்துவம்.


 

 

பாடல் 7

 

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

பொருள்:

 தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே "சிவசிவ என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சிவசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம்.இதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம் என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன ஒருபரிசாகக் கருதுகிறாயா?

விளக்கம்: 

அதிகாலை வேளையில் தூங்கவே கூடாது. நம் பணிகள் காலை நாலரைக்கெல்லாம் துவங்கி விட வேண்டும். மார்கழியில் பனியடிக்கிறதே என்றெல்லாம் காரணம் சொல்லக்கூடாது. எல்லா தட்பவெப்பங்களுக்கும் தகுந்தாற் போல், நம் உடலைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும். காலை தூக்கத்தில் இருந்து விடுபடுவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. சூரியனைப் பார்க்காத ஒவ்வொரு நாளும் வீணே என்கிறது சாஸ்திரம்.

பாடல் 8

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.

பொருள்:

தோழியை எழுப்ப வந்த பெண்கள், ""அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைக்கப்படுகின் றன. நம் அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய். இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே! இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவமெடுத்து சிவனின் திருவடி காணச்சென்றவர்). அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே தலைவனான சிவனை,  ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.

விளக்கம்:

இறைவன் மனிதர்களின் உள்ள இருளைப் போக்குபவர். பனிபடர்ந்த இருள் சூழ்ந்த மார்கழி காலையை சூரியன் எப்படி பிரகாசமாக்குகிறானோ, அதுபோல் ஆணவம், பொறாமை, அறியாமை ஆகிய இருள் சூழ்ந்த மனதை சிவபெருமான் ஒளி வெள்ளமாக்குகிறார் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

புதுவை வேலு

(நன்றி: தினமலர்)

16 commentaires:

 1. மார்கழியின் பொருள் அறிந்தேன் நண்பரே நன்றி

  RépondreSupprimer
  Réponses
  1. அன்பிற்கினிய கரந்தையாரே!
   மார்கழியின் பனிமழியில் நனைந்ததைப் போன்றதொரு சிலிர்ப்பு
   உமது வருகையும், கருத்தினையும் தினமும் காணும் பொழுது!
   நன்றி!
   அறியாததை அறிய தருவதற்கான ஆதரவை நல்கிய நண்பருக்கு!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer

 2. திருப்பாவை பாடல் 7 க்கான விளக்கத்தில் நீங்கள் சொல்லும் ஆயர்பாடியும் மதுராவிலிருந்து தென்கிழக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோகுல் அல்லது திருவைப்பாடி என்னும் ஊர் ஒன்றா? தயை செய்து விளக்கவும்.

  இன்றைய திருப்பாவை திருவெம்பாவை பாடல்ளுக்கு பொருளும் விளக்கமும் தந்தமைக்கு நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. அன்புள்ள அய்யா திருநடன சபாபதி அவர்களுக்கு,
   வணக்கம்!
   விடியலிலே வருகை தந்து விழிகளுக்கு விழிப்பூட்டும்
   எழுச்சிமிகு எழிலான கேள்வியை எழிப்பியமைக்கு மிக்க நன்றி!
   தங்களது கேள்விக்கான பதிலை அறிய தருவதற்கு சமய இலக்கிய
   நூல்களின் உதவியையும், சில வைணவப் பெரியோர்களின்,
   உதவியையும் நாடி வருகிறேன்! விடை அறிந்ததும் அறியத் தருகிறேன் அய்யா!
   தங்களது மின்னஞ்சல் முகவரி கிடைத்தால் நலம். அதுவரை சற்று பொறுமை!
   அதுவே குழலின்னசைக்கு நீங்கள் தரும் பெருமை.
   வருக! கருத்தினை தருக!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
  2. காத்திருக்கிறேன் தங்களின் பதில் அறிய. எனது மின்னஞ்சல் முகவரி; vns369@gmail.com

   Supprimer
 3. இறைவனை நமக்காக மட்டுமன்றி பிறருக்காகவும் வணங்க வேண்டும் என்ற வரி எத்தனை விசாலமான உஅய்ர் எண்ணத்தைப் பாடல் விளக்குகின்றது. மட்டுமல்ல பேசாதெ செய் என்ற வாய்ச்சொல்லில் வீர்ராக இல்லாமல் செயலில் செய் என்ற அழகான வரிகளின் விளக்கம் அருமை ஐயா! நிறைய தெரிந்து கொண்டோம்....

  RépondreSupprimer
  Réponses
  1. "செய்வன திருந்தச் செய்" என்ற பாடத்தினை பண்பான வரிகளின் மூலம் உணர்த்தி விட்டீர்கள் அய்யா! இருபெரும் இறை இலக்கியத்திற்கு இன்பத்தை சேர்க்கும் தங்களது வரிகள்.
   வருகைக்கும், கருத்து பதிவிற்கும் இனிய நன்றி அய்யா!
   புதுவை வேலு

   Supprimer
 4. திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களுக்கான விலக்கத்துடன் மார்கழியின் பெயர்க்காரணததையும் விளக்கியது சிறப்பு.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  RépondreSupprimer
  Réponses

  1. மார்கழியின் பெயர்க்காரணததையும் விளக்கியது சிறப்பு என்றால்?
   திரு சாமானியனின் பெயர்க் காரணத்தையும் விளக்கினால் இன்பம் நண்பா!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer

  2. மார்கழியின் பெயர்க்காரணததையும் விளக்கியது சிறப்பு என்றால்?
   திரு சாமானியனின் பெயர்க் காரணத்தையும் விளக்கினால் இன்பம் நண்பா!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. திருப்பாவை, திருவெம்பாவைப் பகிர்வு மனதிற்கு நிறைவாக உள்ளது. தினமும் ஒரு தேவாரப் பதிகமும், விடுமுறை நாள்களில் திவ்யப்பிரபந்தமும் படித்து வருகிறேன். மார்கழியின் நண்பர்களின் பதிவுகளால் மேலும் சில பக்திப் பாடல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. மார்கழியின் பதிவுகளை தவறாது படித்து வரும் அய்யாவின் அருள் மனத்தை
   மதித்து போற்றுகிறோம்.
   வாருங்கள் அய்யா தினமும் குழலின்னிசையை கேட்பதற்கு!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. திருப்பாவை திருவெம்பாவை பாசுரம் மற்றும் பாடல்களின் விளக்கம் அருமை புதுவை வேலு அவர்களே.

  sattia vingadassamy

  RépondreSupprimer
  Réponses
  1. அருமை பாராட்டி கருத்து தந்தமைக்கு நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. பக்தியே "மேலான வழி" என்பதே மாா்கழியின் பொருள் .அருமை! திருப்பாவை திருவெம்பாவை பாடல்களுக்கு பொருள் விளக்கம் அறிந்தோம். நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. பக்தி ரசம் சொட்ட சொட்ட பைந்தமிழில் நல்கிய நல்ல கருத்து சகோதரி
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer