jeudi 8 octobre 2015

"உலக அஞ்சல் தினம் அக்டோபர் 9"

இன்று ஒரு தகவல் 

உலக தபால் தினம் அக்டோபர் 9ம் தேதி சர்வதேசம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
1874ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் "சர்வதேச தபால் ஒன்றியம்' (Universal Postal Union) ஆரம்பிக்கப் பட்டது.
இதை நினைவு படுத்தும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 9ம் தேதி உலக தபால் தினம்கொண்டாடப் படுகிறது. 

உலக அஞ்சல் தினமான நாளில் மிக பொருத்தமாக இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(2001) சிறப்புக்கு  சிறப்பு சேர்க்கும் ஒரு சுப நிகழ்வு என்றே சொல்லலாம்.
உலக தபால் தின பிரகடனம் பின்வருமாறு:

"உலகின் பல்வேறு நாடுகளுக்கே உரிய புவியியல், அரசியல், மதம் போன்ற பல்வேறு எல்லை மற்றும் தடைகளைத் தாண்டி மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம்.

மக்கள் அவர்களுக்குரிய பிரத்தியேகமானதும் மிகப் பெறுமதி வாய்ந்ததுமான தகவல்களையும் பொருட்களையும்
பாதுகாத்து மிக வேகமாகவும் மிகக் கவனத்துடனும் அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பார்கள் என்ற பெரு நம்பிக்கை.
நேர்மையுடனும் பாதுகாப்புடனும் இரகசியத் தன்மையைப் பேணி அவர்களுடைய தகவல்களையும் பொருட்களையும் உரிமைகளையும் ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், நேற்றைய தினத்தை விட நன்றாக இன்றைய தினத்திலும், இன்றைய தினத்தை விட நன்றாக நாளைய தினத்திலும், திறமையான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக'' என்பதாகும்.

தபால் சேவையென்பது, இன்றைய மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். 

குறிப்பாக தபால் சேவை தங்கு தடையின்றி நடைபெற்று வருவதனால் இதன் முக்கியத்துவம் அவ்வளவாக உணரப்படுவதில்லை. ஆனால், தபால் சேவை இன்றியமையாதது என்பதில் எந்தவிதமான வாதிப்பிரதி வாதங்களும் இல்லை. 
உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள 'புறாக்களைப் பயன்படுத்தினான்' என்றும், உலகில் முதல்தர விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக் போட்டி கூட கடிதப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஒரு விளைவின் ஞாபகார்த்தமாகவே ஆரம்பிக்கப்பட்டதென்றும் வரலாறு சான்று பகர்கின்றது. 

ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி, இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்திப்பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம். நவீன காலத்தில் தகவல் தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறிய போதிலும்கூட தகவல் பரிமாற்றங்களுக்கு தபால் மிகவும் இன்றியமையாததாக இன்றும் காணப்படுகின்றது. உத்தியோகபூர்வமான தகவல் பரிமாற்றங்களுக்கு இன்னும் அஞ்சல் முறை அவசியப்படவே செய்கின்றது. 

ஆரம்ப காலங்களில் தபால் நிலையங்கள் கடிதப் பரிமாற்றங்களுடன் தபால் சேவைகளுடன் இணைந்த வகையில் தந்தி சேவைகள், தொலைபேசி சேவைகள் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டிருந்தன. இன்றைய காலத்தில் கடிதப் பரிமாற்றங்களுக்கப்பால்!
பல சேவைகளை வழங்கும் நிலையமாக தபால்நிலையங்கள் மாறிவிட்டன.

ஆரம்ப காலத்தில் தபால்களைப் போடுவதற்கு தபால்பெட்டிகள் பயன்படுத்தப்படவில்லை. கடிதங்களைக் கொண்டு செல்பவர்களே கடிதங்களைப் பெற்றும் வந்தனர். 1653 ஆம் ஆண்டு Longueville மாகாண Minister Fouqet என்ற தபால் அதிபரின் மனைவியின் யோசனையின் பேரில்தான் தபால்பெட்டி அறிமுகமானது என்று கூறப்படுகின்றது.

சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் தபால்பெட்டிக்கு மாதிரி வடிவத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். லண்டன் மற்றும் இதர நகரங்களில் முற்றிலும் வடிவமைக்கப்பட்ட வசதிகளுடன் கூடிய தபால்பெட்டிகளை வைக்க அந்தோணி ட்ரோலோபி (Anthony Trollope) என்ற பிரித்தானிய தபால்துறையின் பணி மேம்பாட்டு அதிகாரியை 1851-ல் பிரித்தானிய அரசு நியமித்தது. இவர் ஒரு நாவலாசிரியரும் ஆவார். அவரது ஆய்வின் முடிவில் பிரான்சில் உள்ளதுபோல் ஐந்தடி உயரமுள்ள இரும்புத்தூண் தபால்பெட்டிகளை பல்வேறு இடங்களில் வைக்கலாம் என முடிவாயிற்று.

பிரான்ஸ் நாட்டில் அறிமுகமான தபால்பெட்டிகள் பிரித்தானியா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளால் பின்பற்றப்பட்டன.

தபால்பெட்டிகள் அதிகபட்சம் ஐந்தேகால் அடி உயரத்தையும், குறைந்தபட்சம் நான்கடி உயரத்தையும் கொண்டவையாகவே வடிவமைக்கப்பட்டன.

1852ல் அமெரிக்காவில் செவ்வக வளைவு கொண்ட தபால்பெட்டிகள் வைக்கப்பட்டன. அதே ஆண்டு ஜெர்சி மாகாணத்தில் 4 தூண் தபால்பெட்டிகள் வைக்கப்பட்டன. அதன்பின்னர் 1855ல் குர்னெசி மாகாணத்தில் (Guernse) 3 தபால்பெட்டிகளும், இலண்டனில் 6 தபால் பெட்டிகளும் வைக்கப்பட்டன. இலண்டனில் வைக்கப்பட்ட தபால்பெட்டிகள் பொதுமக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்தன.

தபால்பெட்டிகளில் பிரித்தானிய அரசின் சின்னமும், அதற்கு கீழ் பிரித்தானிய தபால் துறையான 'ரோயல் மெயில்' சேவையின் சின்னமும் முகப்பில் இருந்தன. தபால்பெட்டியின் மேற்பகுதி விக்டோரியா மகாராணியின் கிரீட சின்னத்தையும் கொண்டிருக்கும். தபால் பஸ்கள், தபால் புகை வண்டிகளிலும்கூட அக்காலத்தில் தபால்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

சிவப்பு வண்ணம் மக்களது பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் தபால்பெட்டிகளுக்கு சிவப்பு வண்ணம் பூசலாம் என பிரித்தானிய அரசு அறிவுறுத்தியது. இது போஸ்ட் ஆபீஸ் ரெட்'' (Post Office Red) என ஒரு வர்ண பெயின்டாகவே பிரபலமாயிற்று.

பச்சை நிறத் தபால் பெட்டிகளும் பின்னர் அறிமுகமாயின. ஆனால் அவை மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்நாட்டு தபால்களைப் போடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.

 

1837ல் 'ரோலண்ட் ஹில்' என்பவரால் வெளியிடப்பட்ட, "தபால் துறையின் சீரமைப்பும் அதன் முக்கியத்துவமும், செயற்படுதன்மையும்" என்னும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தபாலைப் பெற்றுக் கொள்ளக்கூடியவர் கட்டணம் செலுத்தவிரும்பாவிடில், தபாலை வாங்க மறுக்கலாம்.  தபால் பகிர்வின்போது எவ்வளவு தூரத்திற்கு வழங்கப்படுகிறது என்பதைக் கருதாமல், ஒருசீரான கட்டணமாக ஒரு பென்னியை அறவிடவேண்டுமென்றும் அவர் கருத்துப்பட்டிருந்தார். வெவ்வேறு தொலைவிடங்களுக்கு வெவ்வேறு கட்டண அறவீட்டு முறை, கணக்கு வைக்கும் செலவை அதிகரிக்கும் என்றும், ஒருசீரான கட்டணமுறையில் ரோயல் தபால் சேவைக்குப் பணம் மிச்சப்படும் என்பதையும் எடுத்துக் காட்டினார்.  இக்கருத்துக்கள் இறுதியாக 1839 ஆகஸ்டில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பொதுத் தபால் அலுவலகம், 1840ல் பென்னி தபால் சேவையை ஆரம்பித்ததுடன், 1 பென்னியும், 2 பென்னியும் பெறுமானமுள்ள, படம் அச்சிடப்பட்ட உறைகளையும் வெளியிட்டது.மூன்று மாதங்களின் பின்னர், விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்டபென்னி பிளாக் (Penny Black) என்று அறியப்பட்ட முன்கட்டணத் தபால் தலையையும் வெளியிட்டது. 


முதலாவது தபால் தலையை வெளியிட்ட காரணத்தினால், அனைத்துலகப் பயன்பாட்டுக்குத் தபால்தலைகளை வெளியிடும் நாட்டின் பெயர் ரோமன் எழுத்துக்களில் அவற்றில் பொறிக்கப்பட வேண்டுமென்ற அதன் விதியிலிருந்து, ஐக்கிய இராச்சியத்துக்கு, "சர்வதேச தபால் ஒன்றியம்' (Universal Postal Union) விலக்கு அளித்துள்ளது.

இன்றுவரை முத்திரையில் நாட்டுப் பெயரைக் குறிப்பிடாமல் அச்சிடும் ஒரே நாடு பிரித்தானியாவாகும்.

"சர்வதேச தபால் ஒன்றியத்தில் இணைவதற்கு முன்னர் பல நாடுகள் இப்படிச் செய்வதில்லை, எனினும் பின்னர் மிகக் குறைந்த மீறல்களே இருந்தன. இதன் காரணமாக சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் பெரும்பாலான பழைய வெளியீடுகளிலுள்ள கீழை நாட்டு எழுத்துக்களுக்கு மேற்கு நாட்டுப் புதிய சேகரிப்பாளர்கள் அறிமுகமில்லாதவர்களாக உள்ளார்கள். 
ஒரு தபால் தலை, அதன் பெறுமதியையும், அந்நாட்டு நாணயத்தில் கொண்டிருக்க வேண்டும். சில நாடுகள், ஒரு எழுத்தையோ அல்லது "First Class" என்பது போன்ற குறிப்புக்களையும் பெறுமதிக்குப் பதிலாகக் கொடுக்கின்றன. "சர்வதேச அஞ்சல் ஒன்றியம்' விதி காரணமாக இது உள்ளூர் சேவைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுகின்றது, எனினும் மீறல்களும் அதிகம் கவனிக்கப்படுவதில்லை. (ஐரோப்பிய தபால் சேவைக்கான பிரித்தானியாவின் "E" தபால்தலையும், தென்னாபிரிக்காவின் "InternationalLetterRate"தபால்தலையும்மேற்சொன்னவிதிவிலக்குகளில்அடங்கும்).
 
சர்வதேச ரீதியில் தரமான தபால் சேவையினை வழங்குவதை நோக்காகக் கொண்டு "சர்வதேச தபால் ஒன்றியம்' அமைக்கப்பட்டது. சர்வதேச ரீதியில் இயங்கும் பழைமை வாய்ந்த அமைப்புக்களில் ஒன்றான இவ்ஒன்றியம் உலக நாடுகளின் ஒத்துழைப்பின் பலனாகவே இன்றும் தனது நோக்கை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. "சர்வதேச தபால் ஒன்றியம்' பற்றிய எண்ணக்கரு 1863ல் ஐக்கிய அமெரிக்காவில் தபால் அதிபர் நாயகமாகவும் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மந்திரி சபையின் உறுப்பினராகவும் கடமையாற்றிய மொன்கெமேரி பிளேயரின் எண்ணத்தில் வெளிப்பட்டது. பின்னர் பாரிஸ் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பதினைந்து பிரதிநிதிகள் சந்தித்து பரஸ்பர நம்பிக்கையுடன் கூடிய பொதுவான அமைப்பினை ஏற்படுத்துவதற்கு இணக்கம் கண்டனர். இதன் பின் ஏறத்தாழ பதினொரு ஆண்டுகள் கடந்த நிலையில் ஜேர்மன் நாட்டின் தபால் பணிப்பாளர் நாயகத்தின் பெரு முயற்சியினால் 1874ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி சுவிட்சலாந்து நாட்டின் பேர்ன் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் இருபத்திரண்டு நாடுகளின் பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு "அஞ்சல் பொது ஒன்றியம்' உருவாக்கப்பட்டது. இப்பெயரானது 1878ல் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் "சர்வதேச தபால் ஒன்றியம்' (Universal Postal Union) எனப் பெயர் மாற்றம் பெற்றது. ஒன்றியம் அமைக்கப்பட்டதற்கான நோக்கத்திற்கு இணங்க உறுப்பு நாடுகள் அனைத்தும் தபால் பொருட்களை பரஸ்பர நம்பிக்கையுடன் கையாள்வதன் மூலம் அகில உலக நாடுகளும் ஒரு தபால் வலயமாகக் கருதப்பட்டு நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதன் விளைவாக உலகளாவிய ரீதியில் சுதந்திரமான தபால் போக்குவரத்துக்கு வழி திறந்ததுடன் ஒரு தபால் நிர்வாகத்தினால் இன்னொரு தபால் நிர்வாகத்திற்கு அனுப்பப்படும் தபால் பொருட்கள் இடைநிலை தபால் நிர்வாகத்தினால் பொறுப்புடன் கையாளப்படுகின்றமையினை உறுதிப்படுத்தியது. மேலும், தபால் பொருட்களின் நிறைக்கமைய விலை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதுடன், 1875 தொடக்கம் 1971 வரையான காலப்பகுதியில் தபால் பொருட்களை அனுப்பும் மூல நிர்வாகங்கள் தான் பெறும் கட்டணங்களைத் தமக்குரியதாக்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது.

மேலும், விநியோகத்தினை மேற்கொள்ளும் தபால் நிர்வாகத்திற்கு வேதனம் எதுவும் கிடைப்பதில்லை. இந்நிலையில் 1969ல் டோக்கியோ நாட்டில் இடம்பெற்ற மாநாட்டுத் தீர்மானப்படி குறிப்பிட்ட ஒரு தபால் நிர்வாகம் (நாடு) இன்னொரு தபால் நிர்வாகத்திற்கு (வேறொரு நாட்டிற்கு) அனுப்பும் தபால் பொருட்களின் நிறைக்கும் அந்நாட்டிலிருந்து முதற்குறிப்பிட்ட நாட்டிற்கு அனுப்பப்படும் தபால் பொருட்களின் நிறைக்கும் உள்ள வித்தியாசம் கணக்கிடப்பட்டு கூடுதலான தபால் பொருட்களை அனுப்பிய நாடு மற்றைய நாட்டிற்கு ஒன்றியத்தினால் குறித்துரைக்கப்பட்ட நியதிகளுக்கு இணங்க ஒரு தொகையினை வழங்குதல் வேண்டும். 

1971ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இம்முறையானது எதிர் காலத்தில் மாற்றமடைவதற்கான சாத்தியப்பாடு உள்ளது. தபால் பொருட்கள் என்ற பதம் தபால் அட்டைகள், வான் கடிதங்கள், அச்சடித்த விடயங்கள், கண்பார்வை அற்றோர்க்கான இலக்கியம் சிறிய பைக்கற்றுகள் என்பனவற்றை உள்ளடக்கியதாகும். ஒன்றியத்தின் அமைப்பு விதி இப்பொருட்களின் கட்டண வீதம், அதியுயர், அதிகுறைந்த நிறை, பருமன் அத்துடன் பதிவுக்கடித சேவை, காப்புறுதிக் கடித சேவை, விமான மூலமான தபால்சேவை, கப்பல் மூலமான தபால்சேவை விஷேட பாதுகாப்புடன் அனுப்ப வேண்டிய பொருட்கள் சம்பந்தமாகவும் விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பொதுச்சபை, நிறைவேற்றுச் சபை, தபால் கல்விக்கான ஆலோசனைச்சபை, சர்வதேச பணியகம் ஆகியன ஒன்றியத்தின் முக்கிய பகுதிகளாகும். ஒன்றியத்தின் ஆரம்பத்தில் இருந்து மத்திய அலுவலகம் "சர்வதேச பணியகம்' என்ற பெயரில் பேர்ன் நகரில் இயங்கி வருகின்றது. 


சர்வதேச தபால் ஒன்றியம், சர்வதேச தபால் சேவை தொடர்பான ஒருங்கிணைப்பு வெளியீடுகள், பிரசுரம் என்பன இதன் முக்கிய பணிகளாகும். 
தபால் முத்திரைகளை வெளியிடுதல், விற்பனை செய்தல் உறுப்பு நாடுகளின் சொந்த விவகாரமாகும். அதனால்தான் முன்பு முத்திரை வெளியிடுதல் ஒன்றியத்துடன் தொடர்பற்ற விடயமாக இருந்தபோதும் உறுப்பு நாடுகளின் நலனில் ஒன்றியம் அக்கறையுடன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலத்தில் இக்கொள்கையில் முத்திரைகள் ஒரு நாட்டின் கலாசாரம், சரித்திரம், கலை வளர்ச்சி என்பவற்றினைப் பிரதிபலிப்பதுடன் வரியினை ஈட்டிக்கொள்வதற்கும் பயன்படுத்தப்படும் காரணமாக சில மாற்றங்களை மேற்கொண்டன. ஒன்றியமானது ஐ.நா. சபையுடன் 1947ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க 01.07.1948 தொடக்கம் ஐ.நா.வின் விசேட அந்தஸ்துடன் கூடிய உறுப்பினர் வரிசையில் உள்ளது. 

சர்வதேச தபால் வலையமைப்பு மூலம் பின் தங்கிய கிராமங்கள் கூட தபால் சேவையினைப் பெறக்கூடியதாகவுள்ளன. உலகிலே அதிக தபால் நிலையங்களைக் கொண்ட நாடாக இந்தியாவும், அடுத்ததாக சீனாவுமுள்ளது. இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன.

இந்திய தபால் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன. தபால் சேவையை இலகுபடுத்தும் முகமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் தபால் குறியீடு முறைகளைப் பயன்படுத்துகின்றன. தபாலை இலகுவாகவும், சரியான முறையிலும் பிரித்தெடுக்க தபால் நிலையங்களுக்கு உதவும்பொருட்டு முகவரியில் சேர்க்கப்படும் எண்களையும் எழுத்துக்களையுமே தபால் குறியீடு என்கிறோம்


.இந்தியாவில் தபால் எண்கள் தபால் பெட்டி எண்கள் அல்லது தபால் குறியீடு எண் (PIN) என வழங்கப்படும்.
ஒவ்வொரு தபால் நிலையத்திற்கும் துணை தபால் நிலையங்களுக்கும் இலக்கங்கள் கொடுக்கப்படுள்ளது.

இருபத்தியிரண்டு நாடுகளின் உறுப்புரிமையுடன் ஆரம்பிக்கப்பட்ட "சர்வதேச தபால் ஒன்றியம்' (Universal Postal Union) இன்று 192 நாடுகளின் உறுப்புரிமையினைக் கொண்டுள்ளது. 

உலக அஞ்சல் தினம் கொண்டாடும் இவ்வேளையில் நமது வலைப்பதிவர் திருநாள் நிகழும் புதுக் கோட்டைக்கு குழலின்னிசையின் நல்வாழ்த்து மின் அஞ்சல் மூலம்/இந்த பதிவின் மூலம் சென்றடையட்டும்.

பகிர்வு:
புதுவை வேலு
நன்றி: (tamil/oneindia.)
14 commentaires:

 1. அம்மாடி.... எத்தனை தகவல்கள்.....

  கடிதம் எழுதும் கலையை பலரும் கைவிட்டுவிட்டோமே.... :(

  RépondreSupprimer
 2. வாருங்கள் நண்பரே,
  கை விட்ட கலையை
  மெய்ப் பட உணரும் நாளல்லவா?
  முதல்கருத்துடன் கூடிய வாக்கினை தந்து சிறப்பித்த
  தலை நகரத்து நண்பருக்கு சிரம் தாழ்ந்த நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 3. மிக விரிவான தகவல். பலவற்றை தெரிந்து கொண்டேன்.
  த ம 2

  RépondreSupprimer
  Réponses
  1. அஞ்சல் பற்றிய தகவல்களை நெஞ்சில் நிறைத்து படித்து
   கருத்தினை வடித்த நண்பருக்கு நன்றி! நன்நெஞ்சே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. நிறைய அரிய தகவல்களை அறியத் தந்த நண்பருக்கு நன்றி சொல்லி தபால் எழுதப்போகிறேன்... இதோ....

  RépondreSupprimer
  Réponses
  1. நண்பா நல்ல கருத்து நவின்றாய்!
   அதுசரி இன்னும் கடிதம் வரவில்லை!
   புதுக்கோட்டை சென்று வந்தததும் எழுதுங்கள்
   காத்திருக்கிறேன்.
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. சுவாரஸ்யமான தகவல்கள்! அருமை! நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. சுகமான கருத்து
   பதமான வார்த்தைகள் மனதிற்கு இதம்!
   நன்றி நண்பரே!
   அட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. வணக்கம்
  ஐயா
  அறியமுடியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா. த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம் கவிஞரே!
   வருக!
   அஞ்சல் தகவல் அறிந்து கொண்டமைக்கு நன்றி
   வருகை சிறக்கட்டும் கவிஞரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. உலக தபால் தினம் - சிறப்பு கட்டுரை அருமை. மேலும் இன்று பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது என்னும் கூடுதல் தகவல் சிறப்பு புதுவை வேலு அவர்களே.

  sattia vingadassamy

  RépondreSupprimer
  Réponses
  1. வாருங்கள் நண்பர் சத்யா அவர்களே!
   புதுவைக் கவிஞர் பாவேந்தர் பற்றிய அஞ்சல் செய்தியை
   குறிப்பிட்டு கருத்து பதிவு செய்திருப்பது பதிவின் வெற்றி
   மிக்க மகிழ்ச்சி நண்பரே!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 8. உலக அஞ்சல் நாளில் வழக்கம்போல் புதிய தகவல்களை பகிர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.!சில நாடுகளில் அஞ்சல் தலை முக்கோண வடிவில் வெளியிட்டிருப்பதையும் சில நாடுகள் முப்பரிமாண (3 D) அஞ்சல் தலைகள் வெளியிட்டிருப்பதையும் கூடுதல் தகவல்களாக தந்திருக்கலாம்.

  RépondreSupprimer
 9. புதிய தகவல்களை தந்துள்ளீர்கள் என்று சொல்லியதே புதிய ரத்தம் பாய்ச்சியதை போன்றதொரு உணர்வு, குழலின்னிசைக்கு மேலும் பல தகவல்களை தந்து ரத்த நாளங்கள் நலம் பெற செய்துள்ளீர்கள் அய்யா!
  அறியாத செய்தியை அறிவுறுத்தியமைக்கு அன்பின் நன்றி அய்யா!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer