mercredi 30 juillet 2014

இன்று ஒரு தகவல் (மதிப்புமிக்க மௌனம்)


இன்று ஒரு தகவல்


மதிப்புமிக்க மௌனம்


இந்த உலகம் சப்தத்தால் சுழன்று கொண்டிருக்கிறது. நல்ல பேச்சு, தீயப் பேச்சு என்று எங்கும் பேச்சுக் குரல்கள். கைப்பேசியின் விற்பனையை அதிகரிக்கவும், சந்தாதாரர்களிடமிருந்து அதிகக் கட்டணத்தை வசூலிக்கவும் பேசுங்க பேசுங்க பேசிகிட்டே இருங்க என்று விளம்பரம் வேறு. அதனால், எல்லோர் கழுத்திலும் கைப்பேசிகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. தேவையற்ற பேச்சுகளால், துன்பமே மிஞ்சுகின்றது. ஒன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது மற்றவர்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசி, மெளனத்தைக் கலைத்து துன்பப்படுகிறார்கள். சொல்வதிலேயே மிக உயர்ந்த முறையாக மெளனம் விளங்குகிறது. வாழ்வில் அமைதி பெற மெளனம் அடித்தளம் இட்டுக் கொடுக்கிறது. பேசாத பேச்சுக்கு நாமே எஜமானனாக இருக்கிறோம். மெளனம் என்பது அழகிய திரை. சத்தம் என்பது அதில் விழும் பொத்தல் என்பார்கள்.
மெளனம் பல்வேறு பரிமானங்களில் நம்மை ஆட்கொள்கிறது. வெற்றியின்போது அடக்கமாகவும், தோல்வியின்போது பொறுமையாகவும், உறவுகள் பிரியும்போது துக்கமாகவும், பிரார்தனையின்போது இறைவனை உணர்த்தும் சக்தியாகவும், உண்மையானவர் வெற்றி பெறும்போது மகிழ்ச்சியாகவும், தனிமையின் போது ஊன்றுகோலாகவும், எதிரிகள் ஏளனம் செய்யும்போது கேடயமாகவும், இன்னல்களை எதிர்கொள்ளும் போது வலிமை மிக்க வன்முறையற்ற ஆயுதமாகவும் மெளனம் விளங்குகிறது.


வார்த்தைகள் இல்லாத புத்தகமாக மெளனம் விளங்குகிறது. மெளனமாக சிந்திக்கும் போதுதான் மனதில் புதிய கருத்துகள் ஒளிர்கின்றன. எண்ணங்கள் பளிச்சிடுகின்றன. சிலர் ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரியில் பேசி, கேட்பவர்களைக் கொட்டாவி விட வைப்பார்கள். அதிகம் பேசுகிறவனை உலகம் விரும்புவதில்லை. எப்போதும், மெளனமாக இருக்க கற்றுக் கொண்டால் பிரச்னை ஏதும் இல்லை. மெளனமாக இருப்பவர்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று சிலர் எண்ணுவார்கள். அந்த சமயத்தில் மெளனத்தைக் கலைத்து ஏதேனும் சொல்லி உண்மையில் மூடர் என்பதை நிரூபிக்கக் கூடாது. சங்கடமான நேரங்களில் மெளனமாக இருப்பதே சாலச் சிறந்தது. கோபம் எதிர் கொண்டோரை பேச்சு அழிக்கும். ஆனால், கோபத்தில் நாம் காக்கும் மெளனம் நமக்கு பாதுகாப்பாக விளங்குகிறது. இதைத்தான் வள்ளுவரும், "யாகாவராயினும் நாகாக்க' என்றார்.

வாய் திறவாதார் மனத்திலோர் மாடுண்டு என்றார் திருமூலர். அதவாது யார் வாய் திறவாமல் மெளனமாக இருக்கிறார்களோ அவர் மனதில் ஒரு செல்வம், சக்தி உருவாகும் என்பது அவர் கருத்து. மெளனம் என்ற மரத்தில்தான் அமைதி கனிகள் காய்க்கும். மெளனம் கடவுளின் மொழி, அதனால்தான் பூக்கள் பேசுவதில்லை என்றார் ஒரு கவிஞர். நம் அமைதி பிறருக்கு தண்டனையாகிறது. நா காக்க வேண்டும் என்பதற்காக, சும்மா இரு சொல் அற என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்

சிலர் பேசிக் கொண்டேயிருப்பார்கள். விதண்டாவாதம் புரிவார்கள். தான் செய்த ஒரு சிறு நல்ல காரியத்தை அனைவரிடமும் சொல்லி தற்பெருமை அடித்துக் கொள்வார்கள். நாவினால் முகஸ்துதி செய்து ஒருவரை மகிழ்ச்சியாக வைத்திருந்து, காரியங்களைச் சாதித்து அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதைக் காட்டிலும், ஒருவர் தவறு செய்யும் போது கடுஞ்சொல் கூறி அவரை திருத்தும்போது கிடைக்கும் ஆனந்தம்தான் நிலையானது.
பேச்சு கடல் என்றால் மெளனம் அதன் கரை. அலை கடல் கரையைக் கண்டவுடன் அடங்கி விடுகிறது. நாவை ஓயாமல் பயன்படுத்துகிறவர்களால் ரகசியம் காக்க முடியாது.
பிறருக்கு துன்பம் செய்யாமல் உள்ளத்தை அமைதியாக வைப்பது மெளனம். கேட்பவர்களின் உள்ளம் அறிந்துதான் பேச வேண்டும். அவர்களின் தன்மைக்கு மாறுப்பட்ட கருத்துகள் பேசுவதை விட்டுவிட வேண்டும். ஒருவருடைய நம்பிக்கையை நம் பேச்சால் அழித்து விடக் கூடாது. முடிந்தால் ஆதரவாக பேச வேண்டும். பிறர் மனம் புண்படாமல் பேச வேண்டும். எந்த நேரத்திலும் மெளனமே சிறந்தது. உலகின் எந்த மொழிக்கும் பொதுவானது மெளனம்.
பேச்சு, காசுகளைப் போன்றது, சிறு அசைவுக்கும் அது சத்தம் போட்டுக் கோண்டே இருக்கின்றது. மெளனம் ரூபாய் நோட்டுகளைப் போன்றது. அது எப்போதும் அமைதியாகவே இருக்கும் என்பார்கள். மதிப்பில்லாததுதான் தன்னை அதிக மதிப்புள்ளதாக வெளி உலகுக்குக் காட்டிக் கொள்ளும்.
ஆனால், மதிப்புள்ளதோ தனது ஆற்றலை செயல்கள் மூலம் நிரூபிக்கும். அதாவது, பேச்சின் மதிப்பை விட மெளனத்தின் மதிப்பே உயர்ந்தது.
மௌனம் என்பது வெற்றியின் ரகசியம் ஆகும்
மௌனகீதங்கள்
மௌன ராகம் போன்ற படங்கள்  வெற்றிப் படங்களாக  அமைந்ததற்கு காரணம்
மௌனத்தின் "சென்டிமென்ட்" தானோ என்னவோ?

 புதுவை வேலு 

நன்றி:Radhakrishnan(dinamani) 


 

2 commentaires:

 1. வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.
  http://blogintamil.blogspot.com/2015/01/1_20.html?showComment=1421714790870#c142186046049912880
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
 2. திருமதி மனோ சாமிநாதன் தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதையறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
  www.drbjambulingam.blogspot.com
  www.ponnibuddha.blogspot.com

  RépondreSupprimer