vendredi 26 septembre 2014

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை





நெஞ்சம் மறப்பதில்லை


                    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை


உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.

இப்படி கவிதைக்குரிய விளக்கத்தை கவிதையாக வழங்கிய கவிப் பெருந்தகை யார் தெரியுமா?

பாட்டுக் கொருபுலவன் பாரதிஅடா! - அவன்
பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! - அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!
சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! - கவி
துள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா !
கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா ! - பசுங்
கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!

இவ்வாறு மகாகவி பாரதியின்  சிறப்புக்கு சிம்மாசனம் பெற்றுத் தரும் வகையில் கவிபுனைந்த கவிஞர் வேறு யாருமல்ல!

கவிமணி என்று நம் அனைவராலும் போற்றப்படும் தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்தான். இன்று அவரது நினைவு நாள் (26/09/1954).

இந்த நினைவு நாளில்  அவரது சிறப்பினை சீர்தூக்கி பார்ப்போம்!

"அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு" என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும்.

 கரும்பினும் இனிமை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம் என புகழ்வார் இரசிகமணி டி.கே.சி.

 "தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை, தினமும் கேட்பது என் செவிப்பெருமை." எனப் புகழ்மொழி சூட்டுவார் நாமக்கல் கவிஞர்.

 "இவரது உண்மையுள்ளம், உண்மைப் பாடல்களின் மூலமாய் உண்மை வித்துக்களைக் கற்பவர் மனத்தில் விதைத்து, உண்மைப் பயிரைச் செழித்தோங்கச் செய்கிறது.
 இவர் பாடல்களில் காணும் தெளிவும், இனிமையும், இவரது உள்ளத்திலேயுள்ள தெளிவு, இனிமை முதலிய சிறந்த இயல்புகளின் நிழற்படமேயாகும்," என்பார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.

இத்தகைய புகழாரங்களை கவிஞர்கள் சூட்டினாலும் புகழுக்கு ஆசை படாத கவிஞர் இவர்.

  • கல்கி எழுதி சிவாஜி கணேசன் நடித்த கள்வனின் காதலி என்ற படத்தில் 'வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு' என்று கண்டசாலா-பானுமதி பாடிய பாடல் இன்றைக்கும் ரசிக்கப்படுகிற பழைய பாடல்களில் ஒன்றாகும்
  •  
"வெய்யிற்கேற்ற நிழல் உண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவி உண்டு கலசம் நிறைய அமுதுண்டு
தெய்வ கீதம் பல உண்டு தெரிந்து பாட நீ உண்டு
வையம் தரும் இவ் வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ"

(உமர் கய்யாம் பாரசீக மொழியில் எழுதிய கவிதையை தமிழில் மொழிபெயர்த்தவர் கவிமணி தேசிக விநாயகம்).

 "வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு" எனும் கவிமணியின் பாடலை பயன்படுத்திக்கொண்டனர். அதற்கு கொடுப்பதற்காக ஒரு பெருந்தொகையை எடுத்துக்கொண்டு சின்ன அண்ணாமலையும் சிவாஜி கணேசனும் கவிமணியை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த கவிமணி சிவாஜியைப் பார்த்து தம்பி யார் என்று கேட்டார். பதட்டத்துடன் சின்ன அண்ணாமலை இவர்தான் சிவாஜி கணேசன் என்று சொல்லவும் கவிமணி அப்படியா தம்பி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டார்.
கவிமணிக்கு சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை. அதனால் அவருக்கு சிவாஜி கணேசனைத் தெரியவில்லை. பாடலுக்காக ஒரு பெருந்தொகையை சிவாஜி கொடுக்கவும் அதை வாங்க மறுத்து இந்த பாடல் நான் எப்போதோ எழுதியது அதற்கு இது தேவை இல்லை தம்பி என்று மறுத்து விட்டார்

இந்த சிறு நிகழ்வு ஒன்றே போதும் கவிமணி பணம்/புகழ்  இவற்றை விரும்பாததற்கு.




24 டிசம்பர் 1940 ல் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார்

1943 ல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார்.

2005 ஆம் ஆண்டு நமது இந்திய அரசு தபால் தலை வெளியிட்டு இவரது கவிப் புலமைக்கு சிறப்பு செய்தது.

கவிமணியின் மணியான நூல்களை நாம் அறிவோம்!

அழகம்மை ஆசிரிய விருத்தம்
ஆசிய ஜோதி (1941)
மலரும் மாலையும்,(1938)
மருமக்கள் வழி மான்மியம்(1942)
கதர் பிறந்த கதை(1947)
உமார் கய்யாம் பாடல்கள்(1945)
தேவியின் கீர்த்தனங்கள்
குழந்தைச்செல்வம்
கவிமணியின் உரைமணிகள்

சங்கீத கான சபாக்களிலும் இவரது பாடல் பவனி வந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


Song: eppadi padinaro - பாடல்: வேலன் வருவாரடி
Singers: D.K. Pattammal -
பாடியவர்: டி.கே. பட்டம்மாள்
Lyrics: Desika vinayagam pillai -
இயற்றியவர்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
Raga: Ragamalika
ராகம்: ராகமாலிகை



வேலனவருவாரடிவேலன்வருவாரடி
வேலன்வருவாரடிவடிவேலன்வருவாரடி
வேலன்வருவாரடிவடிவேலன்வருவாரடி
வேலன்வருவாரடி
வள்ளிமேல்மோகம்கொண்டுவேடனானவடி
வேலன் வருவாரடி வருவாரடி வருவாரடி



மானோடிவந்ததனால்
மானோடிவந்ததனால்நானோடிவந்தேனென்று
மானோடிவந்ததனால்நானோடிவந்தேனென்று
மானோடிவந்ததனால்நானோடிவந்தேனென்று
வானோங்கும்தினையின்மன்மதனார்மலைத்த
வேலன் வருவாரடி



மங்கைமனதறிந்து
மங்கைமனதறிந்துஎங்கும்தொடர்ந்தலைந்து
மங்கைமனதறிந்துஎங்கும்தொடர்ந்தலைந்து




வேங்கைமரமாகிஓங்கிவளர்ந்தவடி
வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி


நம்பியவர்துதிக்க..
நம்பியவர்துதிக்கநாரதர்ஆனந்திக்க
நம்பியவர்துதிக்கநாரதர்ஆனந்திக்க
தம்பிக்குகந்தமயிலாடப்பணியாற்றும்
வேலன்வருவாரடிவடிவேலன்வருவாரடி
வேலன் வருவாரடி வருவாரடி வருவாரடி


  இந்தப் பாடலை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்









பச்சை கிளியே வா வா

பாலும் சோறும் உண்ண வா 

கொச்சி மஞ்சள் பூச வா


கொஞ்சி விளையாட வா



பையப் பையப் பறந்து வா



பாடி பாடி களித்து வா



கையில் வந்து இருக்க வா



கனி அருந்த ஓடி வா

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் "பாப்பா பாட்டு"

 

ராஜாஜிக்கு கவிமணி மீது அபரிதமான மரியாதை. ஒரு முறை கன்னியாகுமரிக்கு ராஜாஜி சென்றிருந்தார். புத்தேரியில் வசித்த கவிமணியை பார்க்க விரும்பினார். கார் போக கூட வழியில்லாத இடத்தில் அவர் வசித்தார். அதை சுட்டி காட்டிய அதிகாரிகள், அவரை அழைத்து வரட்டுமா எனக் கேட்டுள்ளனர். ஆனால் அவர் இருக்குமிடத்திற்கு சென்று சந்திப்பது தான் மரியாதை எனக் குறிப்பிட்ட ராஜாஜி, காரை ரோட்டிலேயே நிறுத்தி விட்டு நடந்து சென்று அவரை சந்தித்துள்ளார். 


1941, ஆகஸ்ட் 1 ‘கல்கி’ இதழில் வந்த கவிமணியின் வாழ்த்து வெண்பா:

புத்தம் புதுமலர்கள் பூக்குமே வண்டினங்கள்
சித்தம் மகிழ்ந்துண்ணச் சேருமே -- நித்தமும்
பல்கி வளரும் பசுந்தமிழ்ச் சோலையாம்
‘கல்கி’ படர்ந்துவருங் கால்.





இருபதாம் நுாற்றாண்டின் புகழ் பெற்ற கவிஞர்களில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு தனி இடமுண்டு. இதை என்றும் நம் நெஞ்சம் மறப்பதில்லை.




புதுவை வேலு


நன்றி:wikipedia/tamilkoodal/dinamalar









Aucun commentaire:

Enregistrer un commentaire