jeudi 11 septembre 2014

பார் போற்றும் பாரதி ( இன்று ஒரு தகவல்)


இன்று ஒரு தகவல்


                                                

                                             பார் போற்றும் பாரதி 


 
உலக மகா கவி பாரதியை நம் உயர்தமிழ் மொழியின் உயிர் என்போம். "பார் போற்றும் பாரதியின் நினைவு நாள்  இன்று!
தமிழ் மொழியின் உயிராக உலா வரும் அவரின் கவிதைகளின் சிறப்பினை பகிர்ந்து கொள்வோம் "இன்று ஒரு தகவல்"மூலம் வாருங்கள் ! இணையில்லாத இணையதள நேயர்களே!எந்தத் தொலைக்காட்சியைத் திறந்தாலும் பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டுவதைப் பார்க்கிறோம். தமிழ் மரபில் நின்றகோலப் பாராட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. மகிழ்ச்சியை, பாராட்டை வெளிப்படுத்த மார்புறத் தழுவுவதும் (ஆலிங்கனம்), காலில் விழுவதும் (சாஷ்டாங்க நமஸ்காரம்) நடந்திருக்கின்றன. கூட்டமாக எழுந்து நின்று பாராட்டும் உணர்வும் பழக்கமும் மேற்கத்திய முறையாய் இருக்கக் கூடும்.
பாஞ்சாலி சபதத்தில் பார்த்தனும் பாஞ்சாலியும் சூரிய அஸ்தமனத்தைக் காண்கிறார்கள். அந்தக் காட்சியின் எழிலை 48 வரிகளில் பார்த்தன் அற்புதமாக எடுத்துரைக்கிறான். அதன் இறுதிப் பகுதி:அமைதியொடு பார்த்திடுவாய் மின்னே, பின்னே
அசைவுறுமோர் மின்செய்த வட்டு; முன்னே
சமையுமொரு பச்சை நிற வட்டங் காண்பாய்,
தரணியில் இங்குஇது போலோர் பசுமை உண்டோ?
இமை குவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
எண்ணில்லாது இடைஇடையே எழுதல் காண்பாய்
உமை கவிதை செய்கின்றாள், எழுந்து நின்றே
உரைத்திடுவாய் பல்லாண்டு வாழ்க என்றே'.

 
எழுந்து நின்று பாராட்டை உரைக்கச் சொல்கிறார் பாரதி. சமீப காலத்தில்தான் தமிழில் பிரபலமான ஸ்டேண்டிங் அவேஷன்என்ற நடைமுறையைப் பாரதி ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தியி ருக்கிறார். இன்றைய இளைஞர்கள் பாரதியைப் படித் தால் இன்னும் இப்படி நிறைய கண்டு ரசிக்க முடியும். 


காணாததைக் கண்டவர்
 
அடுத்து இன்னொன்று. எரிமலை வெடித்து மலை யொன்று நெருப்பு ஆறாய் உருகி ஓடும் காட்சியைக் கற்பனை செய்துபாருங்கள். நாம் நேரில் பார்க்காத பல காட்சிகள், தொலைக்காட்சியின் விளைவால் இன்று நம் மூளையில் பரந்துகிடக்கின்றன. ஆனால், பாரதி காலத்தில் அது சாதாரணம் இல்லை. எனினும், இத்தகைய காட்சியொன்றை பாரதி கவிதையாக்கியிருக்கிறார். துரியோதனனின் கோபத்தை வர்ணிக்கிறார் பாரதி: 


குன்றம் ஒன்று குழைவுற்று இளகிக்
குழம்பு பட்டு அழிவு எய்திடும் வண்ணம்
கன்று பூதலத்து உள்ளுறை வெம்மை
காய்ந்து எழுந்து வெளிப்படல்போல்
(பாஞ்சாலி சபதம்).

 
கல்லைப் பிசைந்து கனியாக்கினார் மாணிக்கவாசகர் என்றால் குன்றம் ஒன்றைக் குழையச் செய்து இளக்குகிறார் பாரதி. அசாதாரணக் காட்சி அல்லவா இது! எரிமலைகள் இல்லாத நாட்டில் பிறந்த பாரதியார், எரிமலைகள் தீ கக்கும் நாடுகளுக்கும் பயணம் போகாத பாரதியார், எரிமலைக் குழம்புகளைத் தொலைக்காட்சிகளில் பார்க் காத பாரதியார், வெறும் பத்திரிகை அலுவல்களை மட்டும் கொண்டு நாடு விட்டு நாடு சென்று காணாத காட்சியெல்லாம் காட்டுகிறாரே! வெளிநாடுகளிலேயே காலம்கழிக்கும் நமது இளைஞர்கள் பாரதியைப் படித்தால் இன்னும் என்னென்ன கண்டு அறிந்தன காண்பரோ! 


சாதாரண வருஷத்து தூமகேது
 
பத்திரிகையோடு பிணைந்திருந்ததால் காலமும் தொழில்நுட்பமும் சந்திக்கும் முனையில் பாரதி இருந்தார். இன்னும் சொன்னால் வருங்கால நிகழ்வுகளையும் ஊகித்திருந்தார்.

 ஜப்பான் நாட்டு ஹைக்கூ பற்றி பாரதி பேசியிருப்பது ஒரு பருக்கை. ஹாலீயின் வால்நட்சத்திரம் பற்றி பாரதி பாடியிருந்தது இரண்டாவது பருக்கை. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அந்த வால்நட்சத்திரம் (பாரதியார் மொழியில் சொன்னால் தூமகேது), 1986-ல் பூமிக்குக் காட்சிதந்தது. அப்போது பாரதியார் பாடல் பிரபலமாகப் பேசப்பட்டது. 

பாரதியார் அந்த தூமகேதுவைப் பற்றி அதன் முந்தைய வருகை நிகழ்ந்த 1910-ல் பாடியிருந்தார். சாதாரணஎன்ற பெயர் கொண்ட தமிழ் ஆண்டு அது. அதனால் சாதாரண வருஷத்து தூமகேதுஎன்று அந்தப் பாடலுக்குப் பெயர் சூட்டினார் பாரதி. ஆண்டுடன் தொடர்புடைய ஒன்றுக்கு ஆண்டின் பெயரைச் சூட்டியது எவ்வளவு நவீனம்!

 தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் பொருள்படுத்திப் பதிவுசெய்திருப்பது ஆச்சர்யம் தரும் செய்தி அல்லவா! அறிவியலில் ஆர்வமுள்ள இன்றைய இளைஞர்கள் இதைப் போல இன்னும் பல அம்சங்களைப் பாரதியிடம் காணக்கூடும்.
 

சிதையா நெஞ்சு கொள்' எனும் சூத்திரமே பாரதியின் வாழ்க்கை நமக்கு வழங்கும் பாடம். வறுமையும் வெறுமையும் விடாது துரத்திய போதும் அஞ்சாமல் அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்த மாகவிஞர் மகாகவி பாரதியார்.


பதினாறு வயதிற்குள் பாரதியைப் போல் வாழ்க்கைப் புயலை எதிர்கொண்டவர் யாரும் இருக்க முடியாது. வறுமை எனும் உளியால் செதுக்கப் பட்ட கலைச் சிற்பம் பாரதியார். நெருப்பாற்றில் நீந்திக்கொண்டும் அவரால் அழகியல் கவிதைகளைத் தரமுடிந்தது."நல்லதோர் வீணைசெய்தே- அதைநலங்கெடப் 

புழுதியிலெறிவதுண்டோ?சொல்லடி சிவசக்தி- 
 எனைச்சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ -இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி-
நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ


பாரதியின் வாழ்நாட்கள் வறுமையில் கழிந்தன. ஆனாலும் பாரதியிடம் என்றும் எனக்கலக்கமில்லை. தன்னலம் பாராமல், மாநிலம் பயனுற மாகாளியிடம் வல்லமை கேட்கிறான் பாரதி.

தாயின் இறப்பு : பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887ல் பாரதியின் தாய் லட்சுமி அம்மையார் காலமாகிறார். பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.

"என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்ஏங்கவிட்டு விண் எய்திய தாய்'' பாட்டி பாகீரதி, தாய்வழிப்பாட்டனார் ராமசாமி ஐயரின் அன்பு பாரதியைச் செழுமைப்படுத்தின. பாரதிக்கு மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு ஆசை இருந்தாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி வளர்த்ததைப் வருத்ததோடு பதிவு செய்துள்ளார்.

 ஓடிவிளையாடு பாப்பா என்று குழந்தைகளுக்கு அறிவுரை சொன்ன பாரதி, ஓடியாடவில்லை.

இயற்கை விரும்பியாகிக் கவிதைகள் படைக்கும் பாரதியால் பள்ளிப்படிப்பை மனமொன்றிக் கற்கமுடியவில்லை. மூன்றுகாதல் என்ற தலைப்பில் சுதேசமித்திரன் இதழில் எழுதிய கவிதையின் தொடக்கத்தில் பள்ளிப்படிப்பு நாட்டமில்லாமல் போனதாக பாரதி குறிக்கிறார். ''பள்ளிப் படிப்பினிலே- மதிபற்றிட வில்லை'' என்ற வரி கவனத்திற்குரியது.
தமிழின் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராப்பற்று கொண்ட பாரதியால் ஆங்கிலக் கல்வியை ஏற்க முடியவில்லை. எட்டயபுரத்தில் இருந்து கல்வி பயில நெல்லை வந்ததால் செலவு அதிகம் ஆனது. தந்தையின் வறுமை அவரை அரித்தது. மனம் நிம்மதி இழந்து தவித்தது.பொருளில்லாக் கல்வியாய் பாரதிக்கு அக்கல்வி தெரிந்தது.

''செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;
தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;
நலம்ஓர் எள்துணையும் கண்டிலேன் அதை
நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!''
உதவி கேட்டு எழுதிய சீட்டுக்கவி

'பெரிதினும் பெரிது கேள்' என்று புதிய ஆத்திச்சூடி படைத்த பாரதி பள்ளிப்படிப்பிற்கு உதவிகேட்டு மன்னருக்குக் கடிதம் எழுதிய நிலையைக் காலம் ஏற்படுத்தியது.

தந்தையாரால் பள்ளிப்படிப்புக்குப் பணம் அனுப்ப முடியா நிலையில் பதினைந்து வயதேயான பள்ளிச் சிறுவன் பாரதி எட்டயபுர மன்னர் வெங்கடேஸ்வரருக்கு மிகத் துணிச்சலாக விண்ணப்பச் சீட்டுக்கவிதையை நேரடியாக அனுப்பி வைத்தான்.

 திருநெல்வேலியில் பாரதியார் பள்ளிப்படிப்பை மேற்கொண்டபோது ஆசிரியர்களிடம் தமிழிலக்கியங்கள் குறித்த விவாதங்களை மேற்கொண்டார். புதுமையான சிந்தனைகளை முன்வைத்தார்.தோல்வியின் தோளில் ஏறி நின்றுகொண்டு வெற்றியின் வரலாற்றினை எழுதியவர். என்ன நடந்தாலும் பாரதியார் திருநெல்வேலி மண்ணில் தன் கல்வியை நிறுத்தவில்லை. காசி எனும் வேறுபகுதிக்குச் சென்றபோதும் வாய்ப்புகளைத் தனதாக்கிக் கொண்டார். அதனால் தான் திருநெல்வேலி ம.தி.தா., பள்ளியில் பாரதி பயின்ற வகுப்பறையில் வரலாறு இன்னும் வசித்துக்கொண்டிருக்கிறது.

தந்தையின் மரணம் : 1898 ஜூலை 20 ல் பாரதியின் வாழ்வில் புயல்அடித்த நாள். தந்தை மரணமடைகிறார். பள்ளிப்படிப்புத் தடைப்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பாட்டி பாகீரதி குடும்பச் சொத்தாக இருந்த எட்டயபுரம் வீட்டை இருநூறு ரூபாய்க்கு அடமானம் வைத்தார். படிப்பிற்காக வயதான காலத்திலும் வீட்டை அடமானம் வைத்து போராடிய பாரதியின் பாட்டியின் மனஉறுதியை என்ன சொல்வது? திருநெல்வேலி இந்துக் கலாசாலையில் பள்ளிப்படிப்பு முடித்ததைப்போல் காசியிலும் மத்திய இந்துக்கல்லூரியில் பாரதி முதல்வகுப்பில் தேறினார்.

தோல்வியிற் கலங்கேல் : பாரதி சிறுவயதில் நிறைய சவால்களை எதிர்கொண்டவர். பள்ளிப்படிப்பு நடக்கும்போதே ஏழு வயது செல்லம்மாவை மணம் செய்ய வைத்த குடும்பச்சூழலையும் திருநெல்வேலியில் இருந்தபோது தான் எதிர்கொண்டான். ஆனாலும் அவன் மனம் தளரா மாமனிதனாய் திகழ்ந்தான். நொந்தது சாகும்என்று உணர்ந்த உத்தமன் பாரதி.
'மனதில் உறுதி வேண்டும்' என்ற வரிகள் பாரதி பட்ட அடிகளில் இருந்து பிறந்தது. ரசிக்கும் மனம் இருந்ததால் துன்பத்திலும் பாரதியால் உருக்குலையாமல் இருக்க முடிந்தது. பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து தனிமரமாய் நின்றார். அவர் தம் அவல நிலை குறித்துச் சுயசரிதையில்:


''தந்தைபோயினன் பாழ்மிடி சூழ்ந்தது;
தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர்;
சிந்தையில்தெளிவு இல்லை; உடலினில்
திறனும்இல்லை; உரன்உளத்து இல்லையால்
எந்தமார்க்கமும் தோற்றிலது என் செய்கேன்?
ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?''
இப்படி வருந்தினாலும் மனஉறுதியை கைவிடவில்லை பாரதி.
"தேடிச் சோறு நிதந் தின்று பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?''
என்றும் பாடினார்.
சிறு துன்பங்களுக்கும் விதியை
நொந்துகொள்கிற நமக்கு மகா கவி பாரதியின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடம் 'குன்றென நிமிர்ந்து நில்' என்பதுதான்.தகவல்: புதுவை வேலு

நன்றி:பழ.அதியமான்(தி இந்து)
      Dr.சவுந்தர மகாதேவன்(தினமலர்)
 


 

Aucun commentaire:

Enregistrer un commentaire