samedi 2 janvier 2016

"ஆண்டாள் அருளிய ஆன்மீகத் தமிழ்"

திருப்பாவை பாசுரம்:18


ஆண்டாள் திருப்பாவையில் மார்கழி நோன்பு நோற்கும் காலத்தை முதல் பாசுரத்திலும்,
நோன்பு செய்யும் முறையை இரண்டாம் பாசுரத்திலும்,
அந்த நோன்பால் மழை பெய்யும் என்று மூன்றாம் பாசுரத்திலும்,
அந்த மழை பெய்த விதத்தை நான்காம் பாசுரத்திலும்,
அதனால் நாம் செய்த பாவங்கள் தீயில் இட்ட பஞ்சுபோல பொசுங்கி மறைந்து போகும் என ஐந்தாம் பாசுரத்திலும் சொல்லி,
மார்கழி மாத நோன்பின் சிறப்புகளை முதல் ஐந்து பாசுரங்களில் வெளிப்படுத்தியுள்ளாள்.

ஆறு முதல் பதினைந்து பாசுரங்கள் வரை பள்ளியெழுச்சிப் பாசுரங்களாக திருமால் அடியார்கள் எழுப்பப்படுகின்றனர்.

பதினேழா து பாசுரம், வாயிற்காவலரின் உதவியுடன் கோபியர் பலராமனை எழுப்பும் பாசுரமாகும்.

பதினெட்டாவது பாசுரம் வைணவ முறைப்படி பலராமனை எழுப்பும்முன் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பி அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நியமத்தின்படி நப்பின்னைப் பிராட்டியை எழுப்பும் பாசுரமாகும்.


பாடல்:18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்,
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

பொருள்:

மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.








விளக்கம்:
பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராகசுவாமிசன்னதிக்கு போகக்
கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும்.
வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் "எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார்.
அதையே,  அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும்.
இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்...
அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்!
அதனால், கண்ணனின் மனைவி "நப்பின்னை"யை எழுப்பி,  கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

பகிர்வு

புதுவை வேலு





12 commentaires:

  1. திருப்பாவை பாசுரத்திற்கு எளிய விளக்கம் அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. மூங்கில் காற்றோடு வந்து முகுந்தனை பற்றி சிறப்பித்து (திருப்பாவை)
      வகுத்த வல்ல கருத்துக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. சிறப்பான விளக்கம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. கார்மேக கண்ணன் கருணை வேண்டி பாசுரத்தால் படையலிட்ட பைங்கிளி ஏந்தி நிற்கும் ஆண்டாளின் திருப்பாவைக்கு தாங்கள் தந்திருக்கும் கருத்து
      திருத் தொண்டாகவே அமையும். நன்றி நண்பரே! நாளும் வருக! நல்லருள் பெறுக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. நப்பின்னையை எழுப்பிய காரணத்தை எடுத்துக்காட்டுடன் விளக்கியமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நப்பின்னையை பாவையர் எழுப்ப,
      நப்பின்னை சென்று நாராயணை "செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப"
      எழுப்புதற்கே! திருப் பள்ளி எழுச்சிப் பாடலாகாவே பாசுரத்தையும் படைத்தருளியுள்ளார் ஆண்டாள். அனுதினமும் அல்லலின்றி அளித்து வரும் தங்களது அன்புத் தமிழுக்கு பலகோடி நூறாயிரம் நன்றி பாடல் சொல்லி நிற்கிறேன்.

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. விளக்கம் நன்று!

    RépondreSupprimer
  5. ஓங்கிடு மரபினில் செய்யுள் -இங்கே
    உம்போல் உரைப்பவர் உண்டோ?

    சேட்டைக்கரன் சேய் மொழி சங்கு
    உம்தளத்தில் ஒலித்திடக் கேட்டேன்

    புத்தாண்டு பூந்தேன் கருத்து புலவர்
    சொத்தாக பெற்று மகிழ்ந்தேன்!
    நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  6. திருப்பாசுரம் நன்று நண்பரே தொடர்கிறேன்.

    RépondreSupprimer
  7. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

    - சாமானியன்
    saamaaniyan.blogspot.ftr

    எனது புத்தாண்டு பதிவு...
    http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

    RépondreSupprimer
  8. அருமையான விளக்கம்! நன்றி!

    RépondreSupprimer
  9. திருப்பாவை பாசுரத்தின் எளிய விளக்க உரை அருமை புதுவை வேலு அவர்களே.

    RépondreSupprimer