dimanche 20 décembre 2015

"ஆண்டாள் - அரங்கர்" திருப்பாவை பாசுரம் - 5

வளமளிக்கும் வரதனின் பரமபத வாசல் திறப்பு!
"வைகுண்ட  ஏகாதசி"
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது.
 வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர்.
 'விஷ்ணுபுராணம்' என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்நாள் சிறப்பினைப் பெறுகிறது.
புராண நூலின்படி திருமால் தனது எதிரிகளாகவிருந்த இரு அரக்கர்களுக்கு இந்நாளன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும் , இக்கதையைக் கேள்விப்பட்டு இவ்வாயில் வழியே பெருமாளின் திருவுரு வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தாம் பெற்ற நிலை கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 பகல்பத்து,  இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறது.
ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் ("பரம்பத வாசல்"சொர்க்க வாசல்" என்றும் அழைக்கப்படுகிறது) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும்.
இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும்.
ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் இத்தகைய விழா கொண்டாடப்படுகிறது.
இங்குள்ள சிறப்பு வாயில் "வைகுண்ட துவாரம்" என அழைக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும் இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர் என நம்பப்படுகிறது. எனவே இத்திருநாளில் பெருந்திரளான பக்தர்களும் உயர்நிலையாளர்களும் திரள்கின்றனர்.
வைகுண்ட ஏகாதசியன்று சிறிய வைணவக் கோயில்களில்கூட, அக்கோயிலைச் சுற்றியுள்ள பக்தர்கள் குடும்பம் குடும்பமாக, பரமபத வாசல் வழியாக வந்து அலங்கரிக்கப்பட்ட பெருமாளையும் ,தாயாரையும்  வணங்கிச் செல்ல நீண்ட வரிசையில் நிற்பது வழக்கம். அன்றைய தினம் பக்தர்கள் உபவாசம் இருப்பார்கள்.உபவாசம் என்றால் என்ன ?

உபவாசம் என்பது பற்றி  மத் பாகவதத்தில் சுவையான கதை ஒன்று உள்ளது.
பிருந்தாவனத்தில் இருந்த கோபியரில் சிலர் மோரும்,  தயிரும், வெண்ணையும் விற்க,  காலையிலேயே அக்கரைக்குச் சென்றனர். மாலை திரும்பியபொழுது,  யமுனையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

கோபியர்களோ,  யமுனையைத் தாண்டி அக்கரைக்குச் செல்ல வேண்டும். இவர்கள் வந்திருந்த பகுதியில் பாலம் ஏதும் இல்லை. எனவே  பாலத்தை அடைய வேண்டுமென்றால், 
ஊரைச் சுற்றிக்கொண்டுதான் போக வேண்டும். நேரமோ மாலைப் பொழுது. இருட்டிக்கொண்டு வருகிறது.
திகைத்த அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள்.

அங்கே 'வியாசர்' தவத்தில் இருந்ததைக் கண்டார்கள். முனி புங்கவரான அவர் உதவக்கூடும் என்று நினைத்து அவரிடம் அபயம் கேட்டார்கள். அவரும் தவம் கலைந்து,  ஒரு நிபந்தனையுடன் உதவுவதாக வாக்களித்தார்.

கோபியர்களின் பானைகளில் மீந்துள்ள மோர்,  தயிர்,  வெண்ணை ஆகியவற்றைச் சாப்பிடக் கேட்டார். மழை காரணமாக ஒன்றும் விற்காததால் மொத்தத்தையும் அவர்கள் வியாசரிடம் கொடுத்தார்கள். அவருக்கு நெடுநாள் பசி போலும்  எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டார். உண்ட களைப்பு தீரக் கால்நீட்டிப்படுத்து விட்டார்.

கோபியர் அவரை எழுப்பி,  உதவுகிறேன் என்று சொல்லி அனைத்தையும் சாப்பிட்டீர்களே,  குழந்தைகள் காத்திருப்பார்கள் தயவுசெய்து உதவுங்கள் என்றனர். வியாசரும் நதியின் அருகே சென்றார்.


யமுனையே,  நான் நித்திய உபவாசிஎன்றால் விலகி வழி விடுஎன்றார்.  கணப் பொழுதில் யமுனை ஆற்று நீர் விலகி வழிவிட்டது. பல கேள்விகள் மனதில் எழுந்தாலும் கோபியர் வாய் திறவாமல் அவரைப் பின் தொடர்ந்தனர். பாதுகாப்பாக யமுனையைத் தாண்டியாகிவிட்டாயிற்று என்று தெரிந்ததும் அவரைப் பார்த்துக் கேட்டார்கள்.

முனிவராக இருந்தும் இப்படிப் பொய் சொல்லலாமா?

எங்களிடம் இருந்ததையெல்லாம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு,

 நித்திய உபவாசிஎன்பது உண்மையானால் என்று யமுனையிடம் கூறினீர்களே. அவளும் உண்மை அறியாமல் வெள்ளம் விலக்கி வழி தந்துவிட்டாளே?”  என்றார்கள்.

வியாசர் சிரித்தபடியே,  உப என்ற சொல்லுக்கு அருகில் என்று பொருள். வாசம் என்றால் வசிப்பது,  இருப்பது என்று அர்த்தம்.

என் மனதார நான் நித்தியமும் கண்ணன் அருகிலேயே இருக்கிறேன். அதனால் நான் நித்திய உபவாசிஎன்றார்.
கண்ணனுக்கு அருகில் இருக்கும் அளவுக்குத் தவ வலிமை கொண்டவர் வியாசர்.

சாதாரண மானிடர்களுக்கு அது அத்தனை சுலபமல்ல.
எனவே வைகுண்ட ஏகாதசியன்று உண்ணாமல், உறங்காமல், கண்ணனை எண்ணி, அவன் அருகே இருப்பதாகப் பாவித்துக்கொண்டு கடைப்பிடிக்கும் விரதத்தை நாம் உபவாசம் என்று அழைக்கிறோம்."வைகுண்ட ஏகாதசியின் உபவாச விதிகள்"
சூரிய உதயத்திற்கு முன் விடியற்காலையில் எழ வேண்டும். ஸ்நானம் செய்ய வேண்டும். நித்தியப்படி பூஜைகள் செய்ய வேண்டும். ஏகாதசியின் முதல் நாள் தசமி அன்று ஒரு பொழுது உண்ண வேண்டும். ஏகாதசியன்று சுத்த உபவாசம் இருக்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் உட்பட நோயாளிகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.

பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் துளசி கொண்டு பெருமாளைப் பூஜிக்க வேண்டும்.

ஆனால் அன்றைய தினம் துளசியை பறிக்கக் கூடாது என்பதால் முதல் நாளே துளசியைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.


துவாதசியன்று விடியற்காலையில் பாரணை (உணவு) செய்துவிட வேண்டும்.
இதில் அகத்திக் கீரை, நெல்லிக் கனி ஆகியவற்றைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும்.
ஏகாதசி திதி என்பது ஒரு நாள் என்றாலும், முதல் நாள் தசமியையும், மறுநாள் துவாதசியையும் இணைத்தே கூறப்படுவதால், இதனை மூன்று நாள் உபவாசம் எனலாம்.


திருப்பாவை பாசுரம் - 5


khsi


பாடல் 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!


பொருள்:
வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும்,  மதுராபுரியில் அவதரித்தவனும்
பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில், விளையாடி மகிழ்ந்தவனும் 
ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும்
 தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும் 
இவனது சேஷ்டை பொறுக்காத 'யசோதை தாய்' இடுப்பில் கயிறைக் கட்ட அது! அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை, உடையவனுமான,
எங்களது கண்ணனை  காண்பதற்கு 
நாங்கள் தூய்மையாக நீராடி,  மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம்.
அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்!  
செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும்,
தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.
விளக்கம்:
 "உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்" என்பது,
ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை.
தேவகிக்கு, கண்ணனை பெற்றதால் பெருமை.
"ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!" என்று அவள் பெருமைப்படுகிறாள்.
குழந்தைகள்பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.

புதுவை வேலு


12 commentaires:

 1. வணக்கம்
  ஐயா
  அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் த.ம 1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம் கவிஞரே,
   தங்களது முதல் வருகைக்கும், "ஆண்டாள் அரங்கர்" பதிவின் பாசுரத்தின்
   தெய்வத் தமிழை அறிந்து அகம் மகிழும் கருத்தினை வடித்தமைக்கும் நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. உபவாசம் அறிந்தேன், திருப்பாவை படித்தேன். நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. வாருங்கள் முனைவர் அய்யா,
   தங்களது தொடர் வருகைக்கு மிக்க நன்றி!
   ஊக்கத்தை அள்ளித் தரும் சொல்லில் சிறந்த கருத்து நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. ஸ்ரீ ரங்கா.. ஸ்ரீ ரங்கா.. - என, மனம் திளைக்கின்றது..

  வாழ்க நலம்..

  RépondreSupprimer
 4. ஸ்ரீ ரங்கா.. ஸ்ரீ ரங்கா.. - என, மனம் திளைக்கின்றது..
  தங்களது திளைப்பில் குழலின்னிசையும் திளைத்து, மகிழ்கின்றது.ஆண்டாள் அரங்கர்
  அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
  நன்றி அருளாளர் அய்யா!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 5. திருப்பாவை விளக்கவுரை நன்று நண்பா...

  RépondreSupprimer
 6. "ஆண்டாள் அரங்கர்" பதிவின் பாசுரத்தின்
  தெய்வத் தமிழை அறிந்து அகம் மகிழும் கருத்தினை வடித்தமைக்கும் நன்றி!நண்பா!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 7. வைகுண்ட ஏகாதசி குறித்து சிறப்பான தகவல்கள்! திருப்பாவை விளக்கமும் சிறப்பு! நன்றி!

  RépondreSupprimer
 8. நன்றி நண்பரே
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 9. வைகுண்ட ஏகாதசியன்று வெளியிட்ட பாசுரத்தை வெளியூர் சென்றுவிட்டதால் இன்று தான் படித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

  RépondreSupprimer
 10. நன்றி அய்யா!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer