mercredi 23 décembre 2015

"கிளி விடு தூது - ஆண்டாள் பாசுரம் - 8"




ஆண்டாளுக்கு கிளி ஏன்?

கிளி சொன்னதைச் சொல்லும் தன்மை உன்டையது.
ஆண்டாள் கண்ணனை மணக்க விரும்பிய தகவலைச் சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம்.ஆகவே ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும் விதமாக
கிளியை தனது இடக்கையில் வைத்திருக்கிறாள் ஆண்டாள்.  வியாசரின் மகனாகிய
சுகப்பிரம்மரிஷியேஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் சொல்வதுண்டு. ஆண்டாள் கையில் கிளியை வைப்பதற்காக, இலைகளால் இந்தக் கிளி செய்யப்படுகிறது.
கிளியின் உடல்பகுதியை மரவள்ளிக்கிழங்கு இலைகளாலும், மாதுளம் பிஞ்சினை அலகாகவும், இலையை இறகாகவும் வைத்து வாழை நாரில் இணைத்து செய்யப் படுகிறது.



திருப்பாவை பாசுரம் 8


கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னை

கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய


பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்!

பொருள்:
மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்ட சிலை போன்று
அழகு கொண்ட பெண்ணே!
கிழக்கே வெளுத்துவிட்டது.
எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன.
அநேகமாக எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள்.
அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள்.
அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம்.
'கேசி' என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும்,
கம்சனால் அனுப்பப்பட்ட 'முஷ்டிகர்' உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும்,
தேவாதி தேவனுமாகிய "ஸ்ரீகிருஷ்ணனை" நாம் வணங்கினால்,
அவன்  "ஆ !ஆ ! என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான்.
பெண்ணே! உடனே கிளம்புவாயாக!

விளக்கம்:
திவ்ய தேசமான சின்னக்காஞ்சிபுரம் (அத்திகிரி) வரதராஜப் பெருமாளை எண்ணி இப்பாடலை ஆண்டாள் பாடுகிறாள்.
தேவாதி தேவன் என்று இங்குள்ள பெருமாளைக் குறிபபிடுவர்.
 கண்ணனின் வீரச்செயல்கள் இப்பாடலில் புகழப்படுகின்றன.
பெண்கள் தைரியசாலிகளையே விரும்புவார்கள் என்பது இப்பாடலின் உட்கருத்து.
பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான்.
அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.
அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே!
அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான்.
பகிர்வு: 
புதுவைவேலு

4 commentaires:

  1. திருப்பாவையின் எட்டாம் பாசுரத்தை பகிர்ந்தமைக்கு நன்றி! ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கையில் இருக்கும் கிளி போல் எப்படி செய்கிறார்கள் என்ற தகவல் புதியது. அதற்கும் நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. ஒவ்வொரு நாளும் ஒளி மயமான ஓங்கு தமிழால் திருப்பாவை பதிவுக்கு சிறப்பு செய்து வரும் தங்களுக்கு இனிய நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. பாசுரத்தை விளக்கத்துடன் பகிர்ந்தமிக்கு நன்றி.
    கிளி பற்றிய தகவல் புதிது.

    RépondreSupprimer
    Réponses
    1. "கிளி" பற்றிய தகவலை அறிந்து கருத்தினை வடித்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer